பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று, பதக்க பட்டியலில் 63 ஆவது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்த பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றார்.
வலிகளைச் சுமந்து இறுதிப் போட்டியில் நுழைந்தார்
ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக அவர், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து இந்திய மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டு குரல் எழுப்பினார். இந்த போராட்டத்தின் போது வீனேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் போலீஸாரால் பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டனர். “இப்படிப்பட்ட நாள்களைப் பார்க்கவா பதக்கங்களை வென்றோம்?” என்று செய்தியாளர்களிடம் வினேஷ் போகத் அப்போது, கண்ணீர் மல்க கதறி அழுதபடி பேசிய வார்த்தைகள் கலங்க வைத்தது. விரக்தியின் உச்சத்தில் மத்திய அரசு தனக்கு வழங்கிய கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை திரும்ப அளித்தார் வினேஷ்.
இந்த நிலையில், இத்தகைய வலிகளைச் சுமந்துகொண்டு, கடுமையான பயிற்சிகளுடன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இறுதிப்போட்டியில் நுழைந்ததையடுத்து, அவருக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது சமூக வலைதள பதிவில் “உலகின் தலைசிறந்த மூன்று மல்யுத்த வீரர்களை ஒரே நாளில் தோற்கடித்த வினேஷுடன் ஒட்டுமொத்த நாடும் நெகிழ்ச்சி அடைகிறது. இதுதான் சாம்பியன்களின் அடையாளம், அவர்கள் களத்தில் இருந்து தங்கள் பதிலைத் தருகிறார்கள். வாழ்த்துகள் வினேஷ். பாரிஸில் உங்கள் வெற்றியின் எதிரொலி டெல்லி வரை தெளிவாகக் கேட்கிறது” எனக் கூறி இருந்தார்.
எடை அதிகரிப்பால் தகுதி நீக்கம்
இப்படியான நிலையில், இன்றைய இறுதிப் போட்டியில் அவர் தங்கம் அல்லது வெள்ளி வெல்வது உறுதி என இந்திய ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 50 கிலோ எடையை விட 100 கிராம் அதிக எடை இருந்ததாக கூறப்பட்டு, வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை இந்திய ஒலிம்பிக் கமிட்டியும் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளார்.
என்ன நடந்தது?
இறுதிப்போட்டியான இன்றைய நாளுக்கு முன்பாக நடந்த பரிசோதனையின் போது வினேஷ் போகத்தின் உடல் எடை 50 கிலோவை விட 100 கிராம் அதிகமாக இருந்தது தெரிய வந்திருக்கிறது. போட்டிக்கு முன்பாக ஒவ்வொரு நாளும் வீரர் வீராங்கனைகளின் எடை சரிபார்க்கப்படும்.
நேற்றுதான் வினேஷ் தனது ரவுண்ட் ஆப் 16, காலிறுதி, அரையிறுதி என 3 போட்டிகளில் ஆடியிருந்தார். இந்தப் போட்டிகளுக்கு முன்பாக பரிசோதிக்கையில் சரியாக 50 கிலோ எடையே இருந்திருக்கிறார். ஆனால் போட்டிகளுக்குப் பிறகு பரிசோதிக்கையில் 52 கிலோவாக இருந்ததிருக்கிறார். இதனால் ஒரே இரவில் இரண்டு கிலோ எடையைக் குறைக்க வேண்டிய நிலை. இரவு முழுவதும் தூங்காமல் வினேஷ் எவ்வளவோ கடுமையாகப் பயிற்சிகளை செய்தும், அவரால் எடையைக் குறைக்க முடியவில்லை. 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் இப்போது தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
வினேஷ் போகத், பதக்க வாய்ப்பை இழந்தது அவருக்கு மட்டுமல்ல; ஒட்டு மொத்த இந்தியாவுக்குமே அதிர்ச்சியும் ஏமாற்றமாக அமைந்துள்ளது எனலாம். ஆனாலும், வினேஷ் போகத்தின் மன உறுதியையும், அவரது போராட்டக் குணத்துக்கும் ஒரு சல்யூட்!
‘வினேஷ் போகத் இந்தியாவின் பெருமை’ – மோடி
இந்த நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவர் பி.டி. உஷாவிடம் பேசிய பிரதமர் மோடி, வினேஷ் போகத்தின் தகுதி நீக்க விவகாரத்தில் சாத்தியமான அனைத்து வாய்ப்புகளையும் ஆராயும்படி கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், வினேஷ் போகத் இந்தியாவின் பெருமை என்றும், அவர் சாம்பியன்களின் சாம்பியன் என்றும் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.