சென்னை மாநகரின் இரண்டாவது பெரிய விமான நிலையமாக பரந்தூர் விமான நிலையத்தை உருவாக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளை அரசு தொடங்கிய நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே சமயம், சென்னை மாநகரின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில்கொள்ளும்போது, இந்த விமான நிலையம் அவசியம் தேவை என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விமான நிலையம் வந்தால் தங்களது வாழ்வாதாரம், நீர் நிலைகள் பாதிக்கப்படும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு எனப் போராடி வரும் அப்பகுதி மக்களை நேற்று முன்தினம், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதனையடுத்து, இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “பிரச்னை இருக்கிறது என்றால் சகோதரர் விஜய் ஆக்கப்பூர்வமான யோசனை தெரிவிக்க வேண்டும். பெங்களூரு விரைவுச் சாலை அருகிலேயே பரந்தூர் வருகிறது. வேறு இடம் உங்களுக்கு தெரிந்தால் அதனை சொல்ல வேண்டும். எல்லாத்தையும் எதிர்க்கக் கூடிய மாநிலமாக தமிழகம் மாறிவிட்டால், எவ்வாறு ஒரு டிரில்லியன் பொருளாதார மாநிலமாக மாறும்?
சென்னைக்கு கட்டாயம் விமான நிலையம் தேவை. தற்போதைய சூழலில் 2.5 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்ட சென்னை விமான நிலையம் போதுமானது இல்லை. அடுத்த 10 ஆண்டுகளில் 10 கோடி பயணிகளை கையாளும் விதமாக விரிவாக்கம் செய்ய வேண்டும். ஆயிரம் ஏக்கரின் இதனைச் செய்ய முடியாது. டெல்லி, ஐதராபாத்தில் 5,000 ஏக்கரும், பெங்களூருவில் 4,000 ஏக்கரும் உள்ளதால், அனைத்தும் அங்கு சென்றுவிடும். தமிழகம் எப்படி வளரும்?” எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
தமிழக அரசு சொல்வது என்ன?
இந்த நிலையில், பரந்தூர் விமான நிலையம் மக்கள் பாதிக்கப்படாத வகையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பரந்தூரில் சென்னையின் 2வது பெரிய விமான நிலையம் அமைக்கப்படுவதால், தமிழ்நாட்டின் தொழில், மருத்துவம், சுற்றுலா துறைகள் வளர்ச்சி பெறும். இந்திய விமான ஆணையம் மேற்கொண்ட சாத்தியக்கூறு ஆய்வின் கண்டுபிடிப்புகள் மற்றும் டிட்கோ மேற்கொண்ட மேலும் விரிவான பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையில், கிரீன்பீல்ட் விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கு பண்ணூரை விட பரந்தூர் தளம் மிகவும் பொருத்தமான தளமாக உருவெடுத்துள்ளது. பரந்தூரில் உள்ள திட்டத்தளம், வரவிருக்கும் சென்னை-பெங்களூரு விரைவு சாலைக்கு அருகில் உள்ளது, இது மற்ற சாலை மற்றும் ரயில் இணைப்பை தவிர, தேவையான இடங்களுக்கு எளிதாகவும், குறைந்த செலவிலும் சென்றுவரத்தக்க இடமாக அமைந்துள்ளது.
பண்ணூரில் 1,546 குடும்பங்கள் வசிக்கின்ற நிலையில், பரந்தூரில் அதைவிட 500 குடும்பங்கள் குறைவாக 1,005 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றனர். விமான நிலையத்தின் செயல்பாடு மற்றும் பிற தேவைகளுக்காக பரந்தூரில் உள்ள உத்தேச தளத்தில் போதுமான கட்டமைப்புகள் இல்லாத நிலம் உள்ளது. பண்ணூர் அருகே உள்ள நிலங்கள் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுடன் வளர்ச்சி அடைந்துள்ளதால், அங்கு விமான நிலைய பணிகளுக்காக கூடுதல் நிலங்களை கையகப்படுத்துவது கடினம். பரந்தூரில் அமையும் விமான நிலையத்தை சுற்றி எதிர்கால மேம்பாடுகளுக்கு அதிக அளவில் காலி நிலங்கள் இருப்பதால் சிறப்பாக திட்டமிட முடியும். அதேசமயம் பண்ணூரில் முன்மொழியப்பட்ட திட்டப்பகுதி ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டைக்கு அருகில் உள்ளது. மேலும் நிரந்தர தொழில்துறை மற்றும் குடியிருப்பு கட்டமைப்புகளுடன் வளர்ச்சி அடைந்துள்ளது.
பரந்தூர் பகுதி தேர்வு ஏன்?
பண்ணூருடன் ஒப்பிடும்போது, பரந்தூரில் நிலம் கையகப்படுத்துவதற்கான செலவு குறையும். தொழில்துறை மற்றும் பிற வளர்ச்சிகளால் சூழப்பட்ட பண்ணூரில் உள்ள திட்டத் தளத்துடன் ஒப்பிடும்போது, பரந்தூரில் உள்ள திட்ட தளம் ஒப்பீட்டளவில் வளர்ச்சி அடையாமல் உள்ளது. பண்ணூரில் முன்மொழியப்பட்ட திட்டப் பகுதியின் வளர்ச்சியடைந்த தன்மை கையகப்படுத்துதல் செலவில் கணிசமான அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இந்த, அரசு பொறுப்பேற்றதற்கு முன்பாகவே, அதாவது 2020ம் ஆண்டிலேயே முந்தைய ஆட்சியினால் பரந்தூர் விமான நிலைய இடம் தேர்வு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பரந்தூர் விமான நிலையத்தின் மூலம் தொழில் வளர்ச்சி முதலான பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அமைந்துள்ளன. இந்த அடிப்படையில்தான், விமான போக்குவரத்து ஆணையத்தினால் சென்னை மாநகரின் இரண்டாவது விமான நிலையத்தை அமைத்திட பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்களில் யார் வேண்டுமானாலும் பரந்தூர் மக்களைச் சென்று சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டு அவற்றை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் பட்சத்தில் நிச்சயம் தமிழ்நாடு அரசு மக்களின் குறைகளை பரிவுடன் ஆராய்ந்து மக்கள் நலனை பாதுகாக்கும்.
‘மக்கள் பாதிக்கப்படாத வகையில்…’
பரந்தூர் பகுதியின் நீர்நிலைகளையும் எந்த அளவிற்கு சீர்செய்ய முடியும் என்பதை ஆராய உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் பரிந்துரைகளையும் அரசு கவனத்தில் கொள்ளும். பரந்தூர் விமான நிலையம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதியாக தேவைப்படும் ஒன்றாக இருக்கும் காரணத்தினால் மக்கள் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வளர்ச்சி ஒருபுறம் என்றால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறார். பரந்தூர் விமான நிலையம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதியாக தேவைப்படும் ஒன்றாக இருக்கும் காரணத்தினால் மக்கள் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.