பஹல்காம் தாக்குதல்: உத்திகளை மாற்றிய காஷ்மீர் பயங்கரவாதிகள்!

ஏப்ரல் 22 செவ்வாய்க்கிழமை அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல், ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியுள்ளது. கூடவே காஷ்மீரின் நிலையற்ற அமைதி மீதான கவலைகளையும் அதிகரிக்க வைத்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் அனந்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் சிலரை ராணுவ உடையில் வந்த 4 முதல் 6 பயங்கரவாதிகள், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.50 மணியளவில் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் பெயர் மற்றும் மதத்தை கேட்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும், சுற்றுலாப் பயணிகள் இங்கும், அங்கும் ஓடினர். திறந்தவெளி என்பதால், சுற்றுலாப் பயணிகளால் துப்பாக்கி சூடு தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியவில்லை.
இந்தத் தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர். பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய இடத்துக்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை உள்ளூர் மக்கள், குதிரைகள் உதவியுடன் மீட்டு அழைத்துவந்தனர். அதன்பின் அங்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, காயம் அடைந்தோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
12 பேர் பஹல்காம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். உயிர் பிழைத்த பயணிகள் தெரிவித்த விவரங்களின் அடிப்படையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் உருவப்படங்கள் வரையப்பட்டு, NIA மற்றும் காவல்துறைக்கு வழங்கப்பட்டது.

லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்தத் தாக்குதலை நடத்தி இருப்பதாக தெரியவந்துள்ளது. சமீப ஆண்டுகளில் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மீது நடத்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.
தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபிய பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு, டெல்லி திரும்பி அவசர ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஸ்ரீநகரில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, பாதுகாப்பு மறுஆய்வு கூட்டத்தை நடத்தினார். ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் நவீன ரேடார்களைப் பயன்படுத்தி, பயங்கரவாதிகளைத் தேடி வருகின்றனர்.

பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து தலைநகர் ஶ்ரீநகர் விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப குவிந்துள்ளதால், கூடுதல் விமானங்களை இயக்க விமான நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல், அமர்நாத் யாத்திரையொட்டிய பாதுகாப்பு அச்சங்களை எழுப்பியுள்ளது.
உத்திகளை மாற்றிய பயங்கரவாதிகள்
பஹல்காம் தாக்குதல், பயங்கரவாத குழுக்களின் உத்திகளில் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டுகிறது. பாதுகாப்பு படைகளுடனான நேரடி மோதல்களுக்கு பதிலாக, பயணிகள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் யாத்ரீகர்கள் போன்ற எளிய இலக்குகளை தேர்ந்தெடுக்கின்றனர். இது, சர்வதேச கவனத்தை ஈர்ப்பதுடன், காஷ்மீரின் சுற்றுலாத் துறையையும், மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கிறது.
பைசரன், பாதுகாப்பு பலவீனமான இடமாக இருந்ததால், இந்தத் தாக்குதல் சாத்தியமாகி உள்ளது. 2019-க்குப் பிறகு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட போதிலும், ‘அபாயமற்ற’ பகுதிகளில் கண்காணிப்பு தளர்ந்திருப்பது இதுபோன்ற தாக்குதல்களுக்கு காரணமாக அமைந்துவிட்டதாக கூறப்படுகிறது. 2024-ல் 35 லட்சம் பயணிகளை ஈர்த்த காஷ்மீரின் சுற்றுலாத் துறை, இந்தத் தாக்குதலால் பாதிக்கப்படலாம். அமர்நாத் யாத்திரையின் பாதுகாப்பு இப்போது கேள்விக்குறியாகி உள்ளது. புலனாய்வு அடிப்படையிலான நடவடிக்கைகள், சைபர் கண்காணிப்பு, மற்றும் மதவெறி எதிர்ப்பு திட்டங்கள் தற்போது தேவைப்படுவதாக மாநிலத்தின் மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புத்துயிர் பெறும் பயங்கரவாதமும் தேவையான நடவடிக்கைகளும்
இந்தத் தாக்குதல், காஷ்மீரில் பயங்கரவாதம் புத்துயிர் பெற்று வருவதை வெளிப்படுத்துகிறது. இளைஞர்கள் மத்தியில் ஆட்சேர்ப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு சமூக ஊடகங்கள் மூலமான பிரச்சாரமும், அரசியல்-சமூக அதிருப்தியும் காரணமாக உள்ளன. இந்த ‘புதிய பயங்கரவாதம்’மையமற்றது மற்றும் மதவெறி சார்ந்தது. இதனால் பாதுகாப்பு படைகளுக்கு அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிவது கடினமாகிறது. TRF, ‘மக்கள்தொகை மாற்றம்’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, இந்தத் தாக்குதலை நியாயப்படுத்துகிறது. ஆனால் இது பாகிஸ்தானின் ஆதரவுடன் மதவெறியை தூண்டும் முயற்சியாகவே கருதப்படுகிறது.

அதே சமயம் உள்ளூர் மக்களின் குரல்களைக் கேட்பது, அரசியல் உரையாடல், சமூக ஒருங்கிணைப்பு, சமூக அடிப்படையிலான மதவெறி எதிர்ப்பு முயற்சிகள், இளைஞர்களுக்கான பொருளாதார வாய்ப்புகள் மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய உத்திகள் தான் இப்பிரச்னைக்குத் தீர்வை தரும் என்கிறார்கள் அம்மாநில சமூக ஆர்வலர்கள்.
பஹல்காம் தாக்குதல், காஷ்மீரின் மேலோட்டமான அமைதியையும், ஆழமான பதற்றங்களையும் வெளிப்படுத்துகிறது. இராணுவ நடவடிக்கைகள் மட்டுமல்லாமல், அரசியல் உரையாடலும் தேவை. இந்தப் பல்முனை அணுகுமுறை மட்டுமே அந்த பிராந்தியத்தில் நீடித்த அமைதியைக் கொண்டுவர முடியும்!