Amazing Tamilnadu – Tamil News Updates

உஷார்… இளைஞர்களைக் குறிவைக்கும் ஆன்லைன் வேலை மோசடி!

வெளிநாட்டு வேலை ஆசை காண்பித்து காலத்துக்கேற்ற வகையில் விதவிதமான மோசடிகள் அரங்கேறுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. கடந்த காலங்களில் வெளிநாட்டு ஆட்கள் தேவை என பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து, அடித்துப் பிடித்து வருபவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக பேசி, போலியான வேலை நியமன கடிதத்தைக் கொடுத்து, பணத்தைக் கறந்துவிட்டு கம்பி நீட்டி விடுவார்கள்.

இன்னும் சிலர், எலெக்ட்ரீசியன், ஏ.சி. மெக்கானிக், வெல்டர், பிளம்பர் எனப் பல்வேறு தொழில்களுக்கு டெக்னீசியன்கள் என்ற பெயரில் வெளிநாட்டுக்கு, குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு அழைத்துச் சென்று, அவர்களை ஒட்டகம் மேய்ப்பது, கழிவறை சுத்தம் செய்வது போன்ற வேலைகளில் ஈடுபடுத்துவது நடக்கும். அவர்களது பாஸ்போர்ட்டுகளைப் பிடுங்கி வைத்துக்கொண்டு சரியான சாப்பாடோ, சம்பளமோ கொடுக்காமல் கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் அரங்கேறுவது குறித்த ஏராளமான தகவல்கள் வந்தது உண்டு.

இதுபோல வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை என அழைத்துச் சென்று, அவர்களது பாஸ்போர்ட்டுகளைப் பிடுங்கிக் கொண்டு, அப்பெண்களைத் தவறான தொழில்களில் ஈடுபடுத்தும் மோசடிகளும் நடைபெறுகின்றன. இப்படி ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு மோசடிகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

அந்த வகையில், சமீப காலமாக தமிழ்நாட்டு இளைஞர்களை, வெளிநாட்டு வேலை என்ற பெயரில் இளைஞர்கள் கம்போடியா அழைத்துச் செல்லப்பட்டு இணைய மோசடிகளில் ஈடுபடுத்தப்படும் சம்பவம் நடைபெற்று வருகிறது. இது குறித்த அதிர வைக்கும் தகவல்களை வெளியிட்டுள்ள தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால், இந்த மோசடியில் இளைஞர்கள் எப்படி சிக்க வைக்கப்படுகிறார்கள், அப்படி பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவரித்துள்ளார். அது வருமாறு:

டிஜிபி சங்கர் ஜிவால்

” வெளிநாட்டு வேலை தேடும் இளைஞர்கள், போலியான வாக்குறுதிகளை நம்பி வெளிநாடு சென்று அங்கு இணைய மோசடிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவ்வாறு வெளிநாடு அழைத்துச் செல்லப்படுபவர்கள் சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று அங்கிருந்து லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கம்பி வேலியிடப்பட்ட மோசடி நடக்கும் வளாகங்களில் அடைத்து வைக்கப்படுகின்றனர்.

அங்கு பெடெக்ஸ் மோசடி, முதலீட்டு மோசடி, சட்ட விரோத கடன் வழங்கும் செயலிகள், திருமண மோசடி, காதல் மோசடி போன்ற இணைய மோசடிகளை செய்ய அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மறுக்கும் பட்சத்தில் மின்சாரம் பாய்ச்சுதல் மற்றும் பிற உடல் ரீதியிலான துன்புறுத்துதலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இவ்வாறு படித்த இளைஞர்கள் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டு சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் இணைய அடிமைத்தனத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக காவல்துறை முன்னோடியாக திகழ்கிறது.

இந்த வகையில் வெளிநாடு சென்று தமிழகம் திரும்பாத 1,285 பேரின் விபரம் சிபிசிஐடி பிரிவு போலீஸாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மேலும், சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைத்த இடைத்தரகர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் அதற்கு முன் வேலையின் தன்மை, வேலை செய்யும் இடம் ஆகியவற்றை சரிபார்த்து செல்லவும்.

இதையும் மீறி யாரேனும் பாதிக்கப்பட்டால் காவல் கண்காணிப்பாளர் (9498654347) வெளிநாட்டு தமிழர்கள் பிரிவு (டிஜிபி வளாகம்) மற்றும் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்த்துறை ஆணையரகத்தின் உதவி எண்களான 18003093793 (இந்தியாவில் உள்ள உறவினர்கள் தொடர்பு கொள்ள), 8069009901 (வெளிநாட்டில் பாதிக்கப்பட்டவர் தொடர்பு கொள்ள), மிஸ்டு கால் கொடுக்க 8069009900 ஆகிய எண்களைப் பயன்படுத்தலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version