Amazing Tamilnadu – Tamil News Updates

உடல் உறுப்பு தானம்: தமிழகம் தொடர்ந்து முன்னிலை… காரணம் இது தான்!

வ்வொரு வருடமும் உறுப்பு கிடைக்காததால் கிட்டதிட்ட ஐந்து லட்சம் பேர் இறந்து போவதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. நாள்தோறும் ஏராளமான விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் பெரிய அளவிலான உடல்காயங்களும், சில நேரங்களில் மூளைச்சாவு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. ஆனால், இது போன்றவர்களின் உடல் உறுப்புகள் யாருக்கும் பலனில்லாமல் வீணாகிறது. மேலும் உறுப்பு தானம் செய்வது தொடர்பான பல்வேறு தவறான புரிதல் காரணமாக மக்களிடையே ஒருவித தயக்கம் இருக்கத்தான் செய்கிறது.

இதனை கருத்தில்கொண்டே உறுப்பு தானம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதனை ஊக்குவிக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான், உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். அதன்படி, மூளைச்சாவு அடைந்த நபர்களின் உறவினர்கள், உடல் உறுப்பு தானம் அளிக்க ஒப்புதல் அளித்தவுடன், உடல் உறுப்புகள் பெறப்படுகிறது.

அரசு மரியாதை…

இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக, உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. கடந்த 8 மாதங்களில் மட்டும் 185 க்கும் மேற்பட்டவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது கடந்த 6 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். 2023 ஆம் ஆண்டு 178 நபர்களும், 2022 ஆம் ஆண்டு 156 நபர்களும், 2021 ஆம் ஆண்டு 60 நபர்களும், 2020 ஆம் ஆண்டு 55, 2019 ஆம் ஆண்டு 127 நபர்களும் நபர்களும் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர்.

தமிழ்நாட்டை தொடர்ந்து ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் அறிவித்ததில் இருந்து இதுவரை 246 நபர்கள் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். ஒருவர் மூளை சாவு அடைந்ததை உறுதி செய்வதற்கும் அவர்கள் தானம் செய்த உடல் உறுப்பை முறையாக மற்றொருவருக்கு கொண்டு செல்வதற்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 24 கல்லூரிகளில் இது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ராஜீவ் காந்தி மருத்துவமனைகளில் மூளைச் சாவடைந்த 70% குடும்பங்கள் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வருகின்றனர்.

உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி?

உறுப்பு தானத்தைப் பொறுத்தவரை இரண்டு வகை உள்ளது – உயிரோடு இருக்கும் போது மற்றும் இறந்த பிறகு. புற்று நோய், ஹெபடிடிஸ், எச்ஐவி போன்ற நோய் அல்லாதவர்கள் தான் வாழும் பொழுதே உறுப்பு தானம் செய்ய முன்வரலாம். தானம் செய்யும் முன், ஏதேனும் நோய் உள்ளதா என்பதை அறிந்து கொள்வது நலம்.

தானம் செய்வது மிகவும் எளிது: அரசு மருத்துவமனையை அணுகி, உறுப்பு தானத்திற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதை எப்பொழுதும் உடன் இருக்குமாறு பர்ஸ்ஸில் வைத்த்துக் கொள்ள வேண்டும். உங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரிடம் உறுப்பு தான அட்டை பற்றி தகவல் தெரிவிப்பது அவசியம். பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சுலபமாக ஆன்லைன் மூலம் பெறக் கூடிய உறுப்பு தான அட்டை வசதியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version