கோவிட் தொற்றுப் பரவலின்போது, வீட்டிலிருந்தே உணவு ஆர்டர் செய்வது போல், மது பானங்களையும் ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற நிறுவனங்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம் என மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.
இது மதுபான பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஆன்லைன் விற்பனையால் தங்களுக்கான உயர் ரக மது விற்பனை விகிதம் 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக மதுபான விற்பனையகங்கள் தெரிவித்திருந்தன. மேலும், மதுபான உற்பத்தி நிறுவனங்களும் இத்தகைய விற்பனையில் ஆர்வம் காட்டின. இந்த நிலையில், தமிழ்நாடு, கர்நாடகா, ஹரியானா, பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களிலும் ஆன்லைன் மது விற்பனையை மேற்கொள்ள ஸ்விக்கி (Swiggy), சொமாட்டோ (Zomato) போன்ற நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
தமிழ்நாட்டிலும் ஆன்லைன் மது விற்பனையா?
இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் பீர், ஒயின், மணமூட்டப்பட்ட மதுவகைகள் போன்ற குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட மதுவகைகளை சொமாட்டோ, ஸ்விக்கி, பிக்பேஸ்கட் போன்ற ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும், அதன் சாதக பாதகங்கள் குறித்து ஆன்லைன் வினியோக நிறுவனங்கள், மது உற்பத்தியாளர்கள் போன்றோருடன் கலந்தாய்வு செய்து வருவதாகவும் ஆங்கில நாளிதழ் ஒன்றில் நேற்று செய்தி வெளியானது.
கிளம்பிய எதிர்ப்பு
இது தமிழகத்தில் மதுவுக்கு எதிராக குரலெழுப்பி வருபவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யப்பட்டால், அது சிறுவர்கள், மாணவர்களிடையே கூட மதுப்பழக்கத்தை உருவாக்கிவிடும் என்றும், இதனால் சமுதாய சீர்கேடுகள் உருவாகும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.
இது குறித்து அறிக்கை வெளியிட்ட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே மதுவை கொண்டு சென்று விற்க விற்க திட்டமிடப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். மது வீடுகளுக்கே நேரடியாக வினியோகிக்கபட்டால், அது வீடுகளில் உள்ள குழந்தைகளையும், பெண்களையும் சுவைத்துப் பார்க்கத் தூண்டும். காலப்போக்கில் வீட்டில் உள்ள பெண்களையும், பிள்ளைகளையும் மதுவுக்கு அடிமையாக்கவே இந்த வழக்கம் வழிகோலும். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே குடிக்கும் முறைக்கு முடிவுகட்டி குடும்பமே மது அருந்தும் கலாச்சாரத்தை உருவாக்கவே வீடு தேடு மதுவை கொண்டு சென்று கொடுக்கும் திட்டம் வழிவகுக்கும்.
எனவே, மது வகைகளை ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யும் திட்டம் இருந்தால், அதை தமிழக அரசு கைவிட வேண்டும்” என வலியுறுத்தி இருந்தார்.
டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு
இந்த நிலையில், மதுபானங்களை வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்ய, உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி இருப்பதாக வெளியான தகவலுக்கு டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. “ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று மதுவை விற்கும் திட்டமில்லை. இதுபோன்ற எந்த புது முயற்சியிலும் இறங்கத் திட்டம் இல்லை. அதேபோன்று டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுவை அறிமுகம் செய்யும் திட்டமும் இல்லை” என டாஸ்மாக் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.