Amazing Tamilnadu – Tamil News Updates

கோவை அண்ணபூர்ணா விவகாரத்தினால் பாஜக-வுக்கு பாதிப்பா?

னிப்பு, காரம் ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் எழுப்பிய கேள்வி இணையத்தில் வைரல் ஆனது.

அவர் அமைச்சரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டதாக வெளியான படம், விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தவிர, கொங்கு மண்டத்தில் அரசியல் ரீதியாகவும் இந்த சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது. கட்டாயப்படுத்தப்பட்டோ அல்லது மிரட்டியோ சீனிவாசன் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கோவை பா.ஜ.க எம்.எல். ஏ வானதி சீனிவாசன் அதனை மறுத்திருந்தார்.

“அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி சீனிவாசன் தான் நேரம் கேட்டார். அவரை யாரும் மிரட்டவில்லை. அவ்வாறு மிரட்ட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இதைப் பற்றி சீனிவாசனிடமே நீங்கள் நேரடியாகக் கேட்கலாம்” என்றும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.

ஆனாலும், இந்த சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. ” Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்லை.. அதுக்குள்ள வைக்குற க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி-யா?” எனும் கேள்வியுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து சமூக வலைதளங்களில் #StandWithAnnapoorna எனும் ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது. இன்னொரு புறம் கோவை அன்னபூர்ணா உணவகம், வெளியிட்டுள்ள ‘Cream BUN’ விளம்பரமும் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தினால் வரும் தேர்தலில் கோவையில் பாஜக-வுக்கு பின்னடைவு ஏற்படும் எனப் பேச்சு எழுந்துள்ளது.

இது தமிழக பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் கேட்டோம்.

“அன்னபூர்ணா ஓட்டல் விவகாரத்தால் கோவையில் பா.ஜ.கவுக்கு எந்த பின்னடைவும் இல்லை. சிலரின் நடவடிக்கையால் பூதாகரமாக, பொய்யாக சித்தரிக்கப்பட்ட விஷயம் இது. இது தற்காலிமானது. இந்தச் சம்பவத்துக்கு உடனடியாக அண்ணாமலை மருந்து தடவிவிட்டார்.

பா.ஜ.க_வுக்கு இதில் எள்ளளவும் உடன்பாடு இல்லை என்பதை தெரிவித்துவிட்டோம். அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சார்ந்துள்ள சமூகத்தினருடன் தொடக்க காலங்களில் இருந்து பா.ஜ.க நெருக்கமாக உள்ளது. அவரின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 64 இந்து சகோதர இயக்கங்களில் உள்ளனர்.

பா.ஜ.க-வை தொடக்கத்தில் கோவையில் ஊட்டி வளர்த்ததும் அந்த சமூகம் தான். அது தற்போதும் தொடர்கிறது. இதனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு செயல்படுத்தி வருகிறது. ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கோவை மக்களுக்கு நன்மைகளையும் சலுகைகளையும் செய்துள்ளது. 140 தொழில் நிறுவனங்களுக்கு தேவையான சலுகைகளை அறிவிக்க உள்ளனர். அப்படியிருக்கும் போது இந்த சம்பவத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது” என்றார்.

குமரேசன் ( மூத்த பத்திரிகையாளர், கோவை)

“மத்திய நிதி அமைச்சரின் கூட்டத்தில், தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தன்னிச்சையாக வந்து பேசவில்லை. தொழில் முனைவோரிடம், ‘உங்கள் குறைகளைக் கூறுங்கள்’ என பா.ஜ.கவினர் அழைத்ததால் அவர்கள் வந்தனர். அங்கே குறைகளைத் தெரிவித்ததில் இருந்த நிறை, குறைகளைப் பார்ப்பதைவிட அதை சரிசெய்யும் முயற்சியில் மத்திய நிதி அமைச்சர் இறங்கியிருக்க வேண்டும். அதை இவர்கள் கையாண்ட விதம் என்பது தவறு.

இதை கொங்கு மண்டலத்தில் உள்ள இதர கட்சிகள் அரசியல்ரீதியாக பயன்படுத்த தொடங்கிவிட்டன. கோவையில் பா.ஜ.க வளர்ந்து வரும் நேரத்தில் அக்கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவை இந்த சம்பவம் ஏற்படுத்திவிட்டது.

கொங்கு மொழியில் அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் எதார்த்தமாக பேசியதை வரவேற்று, தீர்வைக் கொடுப்பதாக மத்திய நிதி அமைச்சர் கூறியிருந்தால் பா.ஜ.கவுக்கு நற்பெயர் கிடைத்திருக்கும். இந்த சம்பவத்துக்குப் பிறகு பா.ஜ.க நிர்வாகிகளிடம் பேசுவதற்கு தொழில் முனைவோர்கள் அச்சப்படும் சூழல் ஏற்பட்டுவிட்டது.

‘இவர்களை நம்பிச் சென்றால் அவமானப்பட வேண்டும்’ என நினைக்கக் கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது. கோவையில் அன்னபூர்ணா ஓட்டல் நிர்வாகம் காலம்காலமாக உணவுத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றது. சிறிய அளவில் இருந்து கடுமையாக உழைத்து முன்னேறியுள்ளனர். அவர்களை அவமானப்படுத்திய நிகழ்வு, கோவை தொழில் அதிபர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தின் வீரியத்தைப் புரிந்து கொண்டதால் தான் லண்டனில் இருந்து அண்ணாமலை வருத்தம் தெரிவித்தார். கோவையில் தொழில் சார்ந்த விஷயங்களே அதிகம். தொழிலாளர்கள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் 2026 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார்.

Exit mobile version