Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

‘நீட்’ விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை…பாஜக-வுக்கு எதிராக ஸ்டாலின் தொடர் ‘அட்டாக்’!

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு, அது மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

ஆனால், மத்திய அரசு அதை நிராகரித்திருப்பதாக தமிழக சட்டசபையில் இன்று தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மீண்டும் சட்டரீதியான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக வரும் 9 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி உள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று இது தொடர்பாக பேசிய அவர், ” மருத்துவ மாணவர் சேர்க்கை முறை குறித்து பரிந்துரைப்பதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.இராஜன் அவர்களின் தலைமையில் ஒரு உயர்நிலைக் குழுவினை இந்த அரசு அமைத்தது.

அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இந்தச் சட்டமன்றப் பேரவையில் 13.09.2021 அன்று, தமிழ்நாடு மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம், 2021 என்ற சட்டமுன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டும், நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகும் மாண்புமிகு ஆளுநரால் ஒப்புதல் வழங்கப்படாமல் மறுபரிசீலனைச் செய்திட திருப்பி அனுப்பப்பட்டது.

இந்நிலையில் என் தலைமையில் 05.02.2022 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு, இந்தச் சட்டமுன்வடிவினை மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்துவது தொடர்பான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, 08.02.2022 அன்று சட்டமுன்வடிவு மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

பின்னர், ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து, ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை – ஆயுஷ் துறை – உள்துறை உயர்கல்வித் துறை என பல்வேறு அமைச்சகங்கள் கோரிய அனைத்து விளக்கங்களுக்கும் தமிழ்நாடு அரசு உடனுக்குடன் உரிய விளக்கங்களையும் வழங்கியது.

‘நீட்’ விலக்குச் சட்டத்திற்கு மத்திய அரசு மறுப்பு

ஆனால் இவற்றையெல்லாம் ஏற்காமல், நமது மாணவர்களுக்குப் பெரும் பேரிடியாக ஒன்றிய அரசு நமது நீட் விலக்குச் சட்டத்திற்கு ஒப்புதலை மறுத்துள்ளது என்ற வருந்தத்தக்க செய்தியை இந்தப் பேரவையில் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒன்றிய அரசு நமது கோரிக்கையை நிராகரித்து இருக்கலாம்; ஆனால், நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான நமது போராட்டம் எந்த வகையிலும் முடிந்துவிடவில்லை என்பதையும், இந்தப் போராட்டத்தின் அடுத்தக் கட்டத்தில் நாம் எடுக்க வேண்டிய சட்டபூர்வமான நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களிடமும் கலந்தாலோசிக்கப்படும்.

9 ஆம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம்

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாகஅனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களிடமும் ஒரு கலந்தாலோசனைக் கூட்டம் வரும் 9 ஆம் தேதி அன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடத்தப்படவுள்ளது. அதில் நமது சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு இந்தத் தருணத்தில் தங்கள் வாயிலாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி கனவோடு பயிலும் இலட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சார்பாக, அவர்களின் கனவை நனவாக்க தமிழ்நாடு அரசு உறுதியோடு சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” எனத் தெரிவித்தார்.

பாஜகவுக்கு எதிராக ஸ்டாலின் தொடர் ‘அட்டாக்’

நாடாளுமன்ற தொகுதி சீரமைப்புக்கு எதிராக சென்னையில் பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்திய மு.க. ஸ்டாலின், கச்சத்தீவு மீட்பு மற்றும் வக்ஃபு மசோதாவுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றி பாஜகவுக்கு சவால் விடுத்தார்.

இந்த நிலையில், இப்போது நீட் தேர்வுக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அறிவித்து, மீண்டும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து வாளைச் சுழற்றுகிறார் ஸ்டாலின்.

இதில் தமிழக நலன்கள் அடங்கி உள்ள போதிலும், வருகிற 2026 தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியை வீழ்த்துவதற்கான உத்தியாகவும் ஸ்டாலின் இந்த விவகாரங்களைத் தீவிரமாக கையில் எடுக்கத் தொடங்கி இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Exit mobile version