‘நீல நிற சூரியன்’ : விமர்சனம் – திருநங்கைக்கும் சமூகத்துக்குமான உரையாடல்!
தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயங்குநர் சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்துள்ள படம், ‘நீல நிற சூரியன்’. மாலா மணியனின் தயாரிப்பில் வெளிவந்துள்ள இந்தப் படத்தில் கீதா கைலாசம், மஷாந்த் உள்பட பலர் நடித்துள்ளனர்.
படம் வெளிவருவதற்கு முன்பே உலக திரைப்பட விழாக்களில் பாராட்டைப் பெற்ற ‘நீல நிற சூரியன்’ படம் எப்படி இருக்கிறது?
ஆணாக இருந்து பெண்ணாக மாறுகிற ஒருவனது பயணத்தைப் பற்றிய, போராட்டங்கள் நிறைந்த ஒரு அழுத்தமான படம். சில விஷயங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம், பலவற்றை நீங்கள் அறியாமல் இருக்கலாம். படம் பொள்ளாச்சியில் தொடங்குகிறது.
தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றும் அரவிந்த் என்ற இளைஞனுக்கு சிறு வயதில் இருந்தே பெண்ணாக மாற வேண்டும் என்ற விருப்பம் இருந்தது இதற்காக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொள்கிறார். தன்னுடைய விருப்பத்தை வீட்டில் கூறும் போது எதிர்ப்பு வருகிறது.
அதை சமாளித்து பானு என பெயரை மாற்றிக் கொள்கிறார். இதுநாள் வரை பேன்ட், சட்டையில் பள்ளிக்கு சென்று வந்த அரவிந்த், பானு என்ற பெயரில் சேலை அணிந்து வகுப்பெடுக்க செல்கிறார். இதனால் வீட்டிலும் பள்ளியிலும் அவர் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தாண்டி தாண்டி பானு சாதித்தாரா என்பது தான் ‘நீல நிற சூரியன்’.
பானு பணிபுரியும் தனியார் பள்ளியில் உள்ளவர்கள் எப்படி அவரைப் பெண்ணாக ஏற்க மறுக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது படம் சமூகத்தின் இன்றைய வருத்தமான நிலை பிரதிபலிக்கிறது. இழிவான துணை முதல்வரும் (கே.வி.என். மணிமேகலை) மற்றும் சக ஆசிரியர்களும் பானுவின் வாழ்க்கையை கடினமாக்கும் அதே வேளையில், பள்ளியின் தாளாளர் பானுவை அவரது விருப்பப்படியே இருக்க அனுமதிப்பதன் பின்னணியில் வெளிப்படும் பிசினஸ் கண்ணோட்டம் பார்வையாளர்களை கொதி நிலைக்குத் தள்ளுகிறது.
நமது கல்வி நிறுவனங்களின் பச்சாதாபமற்ற சமூக சூழலை அம்பலப்படுத்தும் சம்யுக்தாவின் முயற்சி, திருநங்கைகளுக்கான கழிவறையைத் தேர்ந்தெடுப்பதற்கான அவசியத்தை வலியுறுத்துகிறது. திருநங்கைகள் மீது பச்சாதாபம் கொண்டவர்கள் கூட எப்படி பாலின வினோதத்தை ஏற்க மறுக்கிறார்கள் என்ற யதார்த்தத்தைப் பார்க்கும்போது, பள்ளியில் பைனரி அல்லாத மாணவர் கார்த்திக் (மாசாந்த் நடராஜன்), பானுவின் துணிச்சலான நடவடிக்கையைக் கண்டு அவள் மீது நம்பிக்கை கொள்வது பாசிட்டிவான அம்சம்.
சம்யுக்தா விஜயன் ஆண், பெண் என இரண்டு கதாபாத்திரத்திலும் இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். ஆண் உருவில் இருக்கும்போது ஏற்படும் உணர்வுகளையும் பெண்ணாக மாறிய பின் உடல்ரீதியாக ஏற்படும் மாற்றங்களையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவருக்கு வேறொரு நபரிடம் ஏற்படும் காதலும் அதனால் ஏற்படும் கசப்பான அனுபவங்களும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தில் சம்யுக்தாவுக்கு பக்கபலமாக வரும் சக ஆசிரியை, தாயாக வரும் கீதா கைலாசம் எனப் பலரும் தங்களின் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளனர்.
படத்தின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை என மூன்றையும் ஸ்டீப் பெஞ்சமின் ஏற்றுள்ளார். படத்துக்கு வலு சேர்க்கும் வகையில் ஒளிப்பதிவில் அவர் அசத்தியுள்ளார்.
மொத்தத்தில் திருநங்கைக்கும் சமூகத்துக்குமிடையேயான உரையாடலைப் பேசுகிறது இப்படம். திருநங்கை கதாபாத்திரம் என்றாலே தமிழ் சினிமாவில் வெகுகாலமாக கேலிக்குரிய ஒன்றாக பார்க்கப்பட்டு வந்தது. அண்மைக்காலமாக அந்தக் குறையைப் போக்கும் வகையில் திரைப்படங்கள் வரத் தொடங்கிவிட்டன.
திருநங்கைகளின் வாழ்வியலைப் பேசும் படங்கள் வரத் தொடங்கியிருப்பது ஆரோக்கியமான அறிகுறி. அந்தவகையில், ஓர் ஆண் பெண்ணாக மாறி சமூகத்தில் சாதிப்பதை காட்சிப்படுத்திய வகையில் சம்யுக்தா விஜயனின் ‘நீல நிற சூரியன்’, வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.