உலகம் முழுவதும் காற்று மாசுபாடு மனிதர்களை அச்சுறுத்தும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. ஆண்டுதோறும் உலகளவில் 70 லட்சம் பேரும், இந்தியாவில் 17 லட்சம் பேரும் காற்று மாசால் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கிராமங்களில் இலவசமாக கிடைத்த குடிநீர், இன்று விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், காற்று மாசு அதிகரித்து கொண்டே சென்றால், சுத்தமான காற்றை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். காற்று மாசு அதிகரித்தால் கண் எரிச்சல், இருதய நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளன. நகரங்களில் மட்டும் காற்று மாசு அதிகரித்த நிலையில், தற்போது கிராமங்களிலும் காற்று மாசு அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.
இதனை கருத்தில்கொண்டு தான், தேசிய தூய்மை காற்றுத் திட்டம் (NCAP)2019 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டிற்குள் காற்றில் 20% முதல் 30% வரை நுண்துகள் செறிவுகளை ( PM10 ) குறைக்கவும், 2025-26 க்குள் 40% குறைக்கவும் இந்த திட்டத்தின் மூலம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டுட் வாரியத்தின் காற்றின் தரத் தரத்தின்படி, தேசிய காற்றுத் தரக் குறீயீடு (AQI) ஆறு பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
0-50 க்கு இடைப்பட்ட AQI ‘நல்லது’ என்று கருதப்படுகிறது. 51-100 இடையே ‘திருப்திகரமானது’, 101-200 இடையே ‘மிதமானது’, 201-300 இடை நிலை, 301-400 இடையே ‘மிகவும் மோசம்’ 401-500 இடையே ‘கடுமையானது’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேசிய தூய்மை காற்றுத் திட்டத்தின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மற்றும் திருச்சி ஆகிய நகரங்கள் 40 சதவீதத்துக்கும் அதிகமாக காற்று மாசுபாட்டைக் குறைத்து சாதனை படைத்துள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ( The Central Pollution Control Board -CPCB ) வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது
இது தொடர்பாக அவ்வாரியம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, தேசிய தூய்மை காற்றுத் திட்டத்தின் கீழ் உள்ள 131 நகரங்களில் தொண்ணூற்று ஐந்து நகரங்கள் காற்றின் தரத்தில் முன்னேற்றத்தைக் காட்டியுள்ளதாகவும், 2017-18 ஆம் ஆண்டுக்கான அளவுகளுடன் ஒப்பிடுகையில் 21 நகரங்கள் PM10 மாசுபாட்டை 40 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 21 நகரங்கள் பட்டியலில் திருச்சி, தூத்துக்குடி, வாரணாசி, தன்பாத், பைர்னிஹாட், பரேலி, ஃபிரோசாபாத், டேராடூன், தூத்துக்குடி, நலகர், மொரதாபாத், குர்ஜா, திருச்சி, கோஹிமா, லக்னோ, கான்பூர், கடப்பா, சிவசாகர், சுந்தர் நகர், ஆக்ரா, மும்பை, ரிஷிகேஷ் மற்றும் பர்வானூ ஆகிய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.
மேலும் தேசிய தூய்மை காற்றுத் திட்டத்தின் கீழ் உள்ள 131 நகரங்களில் 18 நகரங்கள் மட்டுமே PM10 க்கான தேசிய சுற்றுப்புற காற்றுத் தரத் தரங்களை (NAAQS) கடைப்பிடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத், காசியாபாத், ராஜ்கோட், ஜலந்தர், ரேபரேலி, அமிர்தசரஸ், கொல்கத்தா, ஜம்மு, சில்சார், விஜயவாடா, நயா நங்கல், திமாபூர், பாடி மற்றும் ஜோத்பூர் ஆகிய 14 நகரங்கள், 2017-18 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 30-40 சதவீதம் குறைத்துள்ளது. கன்னா, துர்காபூர், கர்னூல், தேரா பாபா நானக், வதோதரா, அலகாபாத், அசன்சோல், ஹைதராபாத், கோரக்பூர், ராஞ்சி, பெங்களூரு, அகோலா, அனந்தபூர், துர்க் பிலாய்நகர், சூரத் மற்றும் நொய்டா ஆகிய நகரங்களில் இதே காலகட்டத்தில் PM10 அளவுகள் 20-30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தரவுகள் தெரிவிக்கின்றன.
டெல்லி, ஹவுரா, தானே, லத்தூர், நெல்லூர், கஜ்ரௌலா, அல்வார், சித்தூர், கலா ஆம்ப், மண்டி கோபிந்த்கர், அமராவதி, பாட்டியாலா, ஜெய்ப்பூர், ஓங்கோல், சந்திராபூர், நாசிக், ஜான்சி, சாங்கிலி, கோட்டா, தேவாங்கேரே மற்றும் ராஜமுந்திரி ஆகிய 21 நகரங்களில் காற்று மாசுபாடு 10-20 சதவீதம் குறைந்துள்ளதாகவும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.