இந்த நவராத்திரி பண்டிகை கொண்டாட்டமும், உங்களது வீடுகளில் வைக்கப்போகும் கொலு வைபவமும் உங்களால் மறக்க முடியாத மகிழ்ச்சிக்குரிய அனுபவமாக இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா..?
அதற்கான ஷாப்பிங்கை எங்கே செய்வது, என்னவெல்லாம் வாங்குவது, நவராத்திரி பண்டிகைக்கு வீட்டுக்கு வரும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எத்தகைய வித்தியாசமான பரிசுகளைக் கொடுத்து அசத்தலாம் என்றெல்லாம் திட்டமிடுகிறீர்களா..?
நவராத்திரி விற்பனைக் கண்காட்சி
ரொம்பவெல்லாம் மெனக்கெட வேண்டாம்.. கடை கடையாக தேடி அலைய வேண்டாம். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் தரமாக தயாரிக்கப்பட்ட விதவிதமான கொலு பொம்மைகள் தொடங்கி, கண்களைக் கவரும் கைவினைப் பொருட்கள் வரை இடம்பெற்றிருக்கும் நவராத்திரி விற்பனைக் கண்காட்சி, சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
எத்தனை நாட்கள் நடக்கும்?
அக்டோபர் 6 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த நவராத்திரி விற்பனைக் கண்காட்சி, தினமும் காலை 10.00 மணி இரவு 08.00 மணி வரை நடைபெறும். இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.
விற்கப்படும் பொருட்கள் என்னென்ன?
அந்த வகையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெறும் நவராத்திரி விற்பனைக் கண்காட்சியில், நவராத்திரி கொலு பொம்மைகள், பட்டு, பருத்தி ஆடைகள், செயற்கை ஆபரணங்கள், கைவினைப் பொருட்கள், சணல், காகிதம், பனை ஓலை மற்றும் வாழை நார் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், மரச் சிற்பங்கள், மூலிகைப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்திட 48 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
அறுசுவை உணவு, கலைநிகழ்ச்சிகள்
மேலும், நவராத்திரி ஷாப்பிங்கிற்கு வருபவர்கள் அறுசுவை மிகுந்த பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழ்வதற்கென்றே தனி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. வார இறுதி நாட்களில் பாரம்பரியம் நிறைந்த சிறப்பான கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
அப்புறமென்ன…? கண்காட்சிக்கு ஜாலியா போய்ட்டு ஜாலியா ஷாப்பிங் பண்ணிட்டு வாங்க மக்களே..!
ஆங்… சொல்ல மறந்துட்டோமே…உங்களோட நவராத்திரி ஷாப்பிங்குக்கு உங்க உறவினர்கள், நண்பர்களையும் கூடவே அழைச்சிட்டுப் போக மறக்காதீங்க..! ஏன்னா… இந்த கண்காட்சியில் நீங்களும் உங்க நண்பர்களும் வாங்குகிற பொருட்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உங்களால ஆன உதவியாக இருக்கும் பாஸ்!
இந்த நவராத்திரி உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் கொண்டு வர வாழ்த்துகள்!