Amazing Tamilnadu – Tamil News Updates

‘நந்தன்’ விமர்சனம்: சசிகுமாருக்கு அடுத்த வெற்றியா?

‘கத்துக்குட்டி’, ‘உடன்பிறப்பே’ படங்களை இயக்குநர் இரா.சரவணனின் அடுத்த படைப்பாக ‘நந்தன்’ வெளியாகியிருக்கிறது. சசிகுமார், சுருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் ஆகியோரின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘நந்தன்’, ‘அயோத்தி’, ‘கருடன்’ படங்களைத் தொடர்ந்து சசிகுமாருக்கு மீண்டும் வெற்றியைக் கொடுத்துள்ளதா? பார்ப்போம்…

புதுக்கோட்டை மாவட்டம், வணங்கான்குடி என்ற ஊரை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஊராட்சி மன்றத்தின் தலைவராக கோப்புலிங்கம் என்பவர், நீண்டகாலம் தலைவர் என்ற மரியாதையுடன் வாழ்ந்து வருபவர்.

ஆனால், திடீரென வணங்கான்குடி ஊராட்சி ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கப்படவே, அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுகிறது. எஸ்.சி அல்லது எஸ்.டி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே தலைவராக வரவேண்டும் என்பதால் கோப்புலிங்கம் தரப்பினர் அதிர்ச்சியடைகின்றனர். ஒருகட்டத்தில் அம்பேத்குமார் (சசிகுமார்) தலைவர் பதவிக்கு முன்னிறுத்தப்படுகிறார். அவர் தலைவர் ஆனாரா? சாதி அடக்குமுறைகளால் அம்பேத்குமார் என்ன ஆனார் என்பதே கதை.

அழுக்கு தோற்றத்தில், எப்போதும் வெற்றிலையை மென்று பேசும் அப்பாவித்தனத்தாலும் வழக்கத்துக்கு மாறான உடல் மொழியாலும் சசிகுமார் தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்துள்ளார். வெள்ளை வேட்டியில் வலம் வரும்போதும் சாதிரீதியான அடக்குமுறைக்கு ஆளாகும் போதும் சசிகுமாரின் நடிப்புத் திறமை, சபாஷ் போட வைக்கிறது. ஆனாலும் முந்தைய காட்சியில் விவரம் இல்லாதவராகவும், அடுத்த காட்சியில் அரசியல் குறித்து தெளிவாக பேசுபவராகவும் காட்டிவிட்டு, பின்னர் மீண்டும் அவரை இரக்கம் கோரும் வகையில் அப்பாவியாகவும் இயக்குநர் மாறி மாறி காட்டுவது அந்த கதாபாத்திரத்தின் மீதான ஈர்ப்பைக் குறைத்து விடுகிறது. அந்த இரக்கம் கோரும் காட்சிகளுக்கு இன்னும் கூடுதல் அழுத்தம் இருந்திருக்கலாம்.

சாதி ஆதிக்கம் நிறைந்த மனிதனாக கோப்புலிங்கம் (பாலாஜி சக்திவேல்) இயல்பாக பொருந்திப் போகிறார்.

நாயகியாக சுருதி பெரியசாமி, கதாநாயகிகள் வந்து போவதைப் போல அல்லாமல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தலித் ஊராட்சி தலைவர்கள் தமிழ்நாட்டில் நடத்தப்படும் விதம் குறித்து அவர்களைப் பேச வைத்திருப்பது வரவேற்பைப் பெறுகிறது. ஜிப்ரானின் இசை படத்துக்கு கூடுதல் பிளஸ்.

ஊர்த் தலைவராக ஆன பிறகு மக்களுக்கு நல்லது செய்ய முற்படும் அம்பேத்குமாரை நிர்வாணப்படுத்தி அடிப்பதும், அவமானப்படுத்துவதும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. தலித் தலைவர்கள் படும் அவஸ்தைகளை வெளிக்காட்டுவதற்காக இந்தக் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பேசப்பட வேண்டிய கதையை இரா.சரவணன் தனது பாணியில் இயக்கியிருக்கிறார். ஆனால் எடுத்துக்கொண்ட கதைக்கு ஏற்ற திரையாக்கமும் திரைமொழியும் இன்னும் பலமாக இருந்திருந்தால், படம் கொண்டாடப்பட்டு இருக்கும்.

ஆனாலும், ‘அயோத்தி’, ‘கருடன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து சசிகுமாருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும் படமாக ‘நந்தன்’ அமைந்துள்ளது. வழக்கமாக தென்மாவட்ட கதாபாத்திரங்களில் சாதி ரீதியான பாத்திரங்களில் நடிப்பதாக சசிகுமார் மீது முத்திரை இருந்தது. அதை முற்றிலும் போக்கும் வகையில் ‘நந்தன்’ படம் அவருக்கு அமைந்துள்ளது.

Exit mobile version