தமிழக பாஜக தலைவராகும் நயினார் நாகேந்திரன்… டெல்லியின் அரசியல் கணக்குகள் என்ன?

மிழக பாஜகவின் புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக-வின் முக்கிய அரசியல் சூத்ரதாரியுமான அமித் ஷாவின் சென்னை வருகைக்கு மத்தியில், கமலாலயத்தில் இன்று பிற்பகல் தலைவர் பதவிக்கான விருப்பமனு தாக்கல் நடைபெற்றது.

பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி விருப்பமனு தாக்கல் மாலை 4 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போதைய மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சட்டசபை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கமலாலயம் வந்தனர்.

அதனைத் தொடர்ந்து அண்ணாமலை, எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் முன்னிலையில் நயினார் நாகேந்திரன் விருப்பமனு தாக்கல் செய்தார். வேறு யாரும் விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை. நயினார் மட்டுமே மனு தாக்கல் செய்ததால், எந்தவித போட்டியும் இன்றி அவர் மாநிலத் தலைவர் ஆவது உறுதியாகிவிட்டது. சனிக்கிழமை மாலை நடைபெறவுள்ள மாநில செயற்குழு கூட்டத்தில் இவரது நியமனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

டெல்லியின் மாஸ்டர் பிளான்: நயினார் ஏன்?

இந்த நிலையில், இந்த முடிவுக்கு பின்னால் உள்ள டெல்லியின் அரசியல் கணக்குகள் என்ன..? ஏன் நயினார்? டெல்லி தலைமை இவரை எப்படித் தேர்ந்தெடுத்தது? இது குறித்த விரிவான அலசல் இங்கே…

நயினார் நாகேந்திரனை தலைவராக்கிய முடிவு, வெறும் மாநில அளவிலான தேர்வு இல்லை; இது டெல்லி தலைமையின் நீண்டகால அரசியல் வியூகத்தின் ஒரு பகுதி என்றே பார்க்கப்படுகிறது. திருநெல்வேலியைச் சேர்ந்த நயினார், தேவர் சமூகத்தின் முக்கிய தலைவராகவும், தமிழக சட்டசபையில் பாஜகவின் மூத்த உறுப்பினராகவும் இருக்கிறார். முந்தைய தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் கொங்கு பகுதியில் செல்வாக்கு மிக்க கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதே சமயம், தென் மாவட்டங்களில் செல்வாக்கு கொண்ட தேவர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நயினார், தமிழகத்தில் சமூக சமநிலையை ஏற்படுத்துவதற்கு டெல்லிக்கு சரியான தேர்வாகத் தெரிந்தார்.

விருப்பமனு தாக்கல்…

அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கவிருக்கும் பாஜக, தமிழகத்தில் தனது வாக்கு வங்கியை விரிவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்த வகையில் நயினாரின் தேர்வு, சமூக ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டணி அரசியல் ஆகிய இரண்டையும் இணைக்கும் டெல்லியின் புத்திசாலித்தனமான முடிவாக பார்க்கப்படுகிறது “நயினார் தான் டெல்லியின் தேர்வு” என்று கட்சி வட்டாரங்கள் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றன.

நயினாரின் அரசியல் பயணம்

அதிமுகவில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய நயினார் நாகேந்திரன், 2001 மற்றும் 2006 தேர்தல்களில் திருநெல்வேலி தொகுதியில் இருந்து எம்எல்ஏ-வாக வெற்றி பெற்றார். ஆனால், 2016 ல் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அதிமுகவில் தலைமை வெற்றிடம் ஏற்பட்டதாக கூறி, 2017 ல் பாஜகவில் இணைந்தார். இந்த முடிவு, அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும்.

2021 ல் பாஜக-அதிமுக கூட்டணியில் திருநெல்வேலியில் வெற்றி பெற்று மீண்டும் எம்எல்ஏ ஆனார். இந்த வெற்றி, கட்சிக்குள் அவருக்கு முக்கிய இடத்தைப் பெற்றுத் தந்தது. உடனடியாக, சட்டசபையில் பாஜகவின் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். 2024 நாடாள்ளுமன்ற தேர்தலில் தோல்வியைச் சந்தித்தாலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பிரதமர் நரேந்திர மோடியும் அவருக்கு நேரடி ஆதரவு அளித்தனர். 2021 ல் அமித் ஷா அவருக்காக பிரச்சாரம் செய்ததும், 2024 ல் மோடி அவரது பொதுக்கூட்டங்களில் பங்கேற்றதும், டெல்லியுடனான நயினாரின் நெருக்கத்தை உறுதிப்படுத்தின.

தெற்கில் பாஜகவின் கனவு

நயினாரின் தேர்வு, தமிழகத்தில் பாஜகவின் நீண்டகால சமூக ஒருங்கிணைப்பு திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக பார்க்கப்படுகிறது. திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களில், தலித், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை ஒருங்கிணைத்து வாக்கு வங்கியை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது. இதற்கு நயினார் ஒரு முக்கிய பாலமாக இருக்கிறார். அண்ணாமலையின் ஆக்ரோஷமான பாணியிலிருந்து மாறுபட்டு, நயினாரின் அமைதியான, ஒருங்கிணைக்கும் அணுகுமுறை, கூட்டணி கட்சிகளுடனான உறவை மேம்படுத்த உதவும் என டெல்லி கட்சித் தலைமை நம்புகிறது.

திருநெல்வேலியில் சிறுபான்மை சமூகங்களிடையே கூட நயினாருக்கு மரியாதை உண்டு. இது, 2021 தேர்தலில் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது. “திருநெல்வேலியை கன்னியாகுமரி மாதிரியான பாஜகவின் வாக்கு வங்கி மையமாக மாற்றுவோம்” என்று கடந்த ஆண்டு அவர் கூறி இருந்தார்.

அந்த வகையில், நயினார் நாகேந்திரனின் தலைமை, தமிழக பாஜகவுக்கு ஒரு புதிய தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது. டெல்லியின் முழு ஆதரவுடன், சமூக சமநிலையையும், கூட்டணி அரசியலையும் மையப்படுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நயினாரின் அமைதியான பாணி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கட்சியை ஒரு புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் மாவட்டங்களில் பாஜகவின் செல்வாக்கை விரிவாக்குவதற்கு நயினார் எப்படி செயல்படுகிறார் என்பதைப் பொறுத்தே, தமிழகத்தில் அக்கட்சியின் எதிர்கால வெற்றி இருக்கிறது. அதற்கு காலமே பதில் சொல்லும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *