நாம் தமிழர் கட்சியிலிருந்து கடந்த காலங்களில் அவ்வப்போது அக்கட்சி நிர்வாகிகள் விலகி வந்த போதிலும், சமீப காலங்களில் இந்த விலகல் அதிகரித்து வருகிறது.
கட்சி ஆரம்பித்து 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டாலும், இதுவரை சட்டமன்ற தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் தொடர் தோல்வியை சந்தித்து வருவது நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் சோர்வை ஏற்படுத்தி உள்ளது. அதிலும், அண்மையில் தந்தை பெரியாருக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் விமர்சித்து பேசியது பல தரப்பிலும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிலேயே பலர் இது குறித்து அதிருப்தி தெரிவித்ததாக கூறப்பட்டது.
விலகும் நிர்வாகிகள்…
இந்த நிலையில், சமீப நாட்களாக சீமானின் செயல்பாடுகள் மீது அதிருப்தி அடைந்து பல நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். ஓரிரு தினங்களுக்கு முன்பு கூட நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த கோ.தமிழரசன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “சமீப காலமாக சீமானின் பேச்சும் செயலும் நமது தமிழ் தேசிய கருத்துகளுக்கு முரணாக இருக்கின்றது” எனத் தெரிவித்திருந்தார்.
அவரைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த ராயப்பனும் அக்கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார் . இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “15 ஆண்டுகளாக, நாம் தமிழர் கட்சி களப்பணிகளிலும், கட்சியின் மாவட்ட, தொகுதி போன்ற பொறுப்புகளிலும் பணியாற்றியுள்ளேன். கடந்த சில ஆண்டுகளாக நமது கட்சியில் சமூக நீதியற்ற நிலைப்பாட்டைக் காண்கிறேன். இதனால், மிகுந்த மன வருத்தத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியிருக்கிறேன். வலியுடன், கட்சியை விட்டுப் பிரிகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
காளியம்மாளும் விலகல்?
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமாக அறியப்பட்ட மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாளும் விலக முடிவு எடுத்துவிட்டதாக தெரிகிறது. இவரும் சமீப நாட்களாக சீமான் மீது அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், ” அவர் ஒரு பிசிறு; கட்சியிலிருந்து விலகினால் விலகட்டும்” என சீமான் கூறியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றின் அழைப்பிதழில் காளியம்மாள் பங்கேற்கும் நிலையில், அவர் நாம் தமிழர் கட்சியில் வகிக்கும் பொறுப்பை குறிப்பிடாமல், சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது. காளியம்மாள் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே அழைப்பிதழில் அவரது பெயருக்குப் பின்னால் அவரது கட்சிப் பதவி குறிப்பிடப்படவில்லை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், காளியம்மாளும் கட்சியிலிருந்து விலகுவது உறுதியாகி விட்டதாகவே தெரிகிறது.

இந்த நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம் இது குறித்து கேட்டபோது, ” நாம் தமிழர் கட்சியில் முழு சுதந்திரம் இருக்கிறது. விரும்பி இயங்குவதற்கும், விருப்பம் இல்லையெனில் வெளியேறுவதற்கும் முழு சுதந்திரம் இருக்கிறது. தங்கையை (காளியம்மாள்) நான்தான் அழைத்து வந்தேன். அவருக்கு எல்லா சுதந்திரமும் இருக்கிறது. பக்கத்தில் நிற்பவர் கூட நாளைக்கு வேறு ஓர் அமைப்புக்கு போகலாம். வரும்போது ‘வாங்க வாங்க, வணக்கம்’ என்போம். போகும்போது ‘போங்க, ரொம்ப நன்றி. வாழ்த்துகள்’ என்று சொல்வோம். இது எங்களுடைய கொள்கை.
பருவ காலத்தில் இலையுதிர் காலம் என்று இருக்கிறது. எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம். காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. கட்சியிலேயே இருப்பதா அல்லது கட்சியை விட்டு வேறு இடத்தில் சென்று இயங்குவதா என்று முடிவு எடுக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது” என்று தெரிவித்தார்.
திமுக-வில் சேர முடிவு?
இதனிடையே காளியம்மாள் திமுக-வில் சேர முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து முன்னரே தகவல் வெளியாகி இருந்து. நாம் தமிழர் கட்சியிலிருந்து அக்கட்சி நிர்வாகிகளை கொத்து கொத்தாக தூக்க திமுக தரப்பில் திட்டமிடப்பட்டு அவர்கள் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாகவும், இது தொடர்பான ‘அசைன்மென்ட்’ அந்தந்த மாவட்ட திமுக நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்ததாகவும், 2026 தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக இவர்கள் திமுக-வில் சேரத் தொடங்குவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், அந்த நடவடிக்கையின் ஒரு அம்சமாகவே காளியம்மாளும் விலகலும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
சீமானுக்கு தொடரும் நெருக்கடி
இந்த நிலையில், சீமான் மீதான பல்வேறு வழக்குகளில் நீதிமன்றம் காட்டும் கெடுபிடிகளும் அவருக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. அவர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யவும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும் நீதிமன்றம் மறுத்து வருகிறது. இதனால் அவர் பல்வேறு ஊர்களில் நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கி வருகிறார்.
இதில் மிக முக்கிய பின்னடைவாக, சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது எனக் கூறிய உயர் நீதிமன்றம், சீமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.