கருங்கல்லால் புனரமைக்கப்படும் மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயில்!

திருவள்ளுவர் பிறந்த இடமாக மயிலாப்பூர் கருதப்பெறுவதால், அங்கு திருவள்ளுவருக்கென கோயில் அமைக்கப்பெற்றுள்ளது. இத்திருக்கோயிலானது 61,774 சதுர அடி நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

இக்கோயில் வள்ளுவருக்குக் கட்டப்பட்ட மிகப் பழமையான கோயிலாகும். சிலர் இதை வள்ளுவரின் நினைவிடமாகவும் கருதுகின்றனர். தமிழ் மொழி ஆர்வலர்களின் சந்திப்புக்கான இடமாகவும் இக்கோயில் விளங்குகிறது. இக்கோவிலை மயிலாப்பூர் ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோயிலின் சார்புக் கோயிலாக இந்து சமய அறநிலையத் துறை பராமரிக்கிறது.

இங்கு திருக்கோயில், கட்டண முறை வாகன பாதுகாப்பு மையம், திருவள்ளுவர் வாசுகி திருமண மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. இத்திருக்கோயிலின் முக்கிய வருவாயாக கட்டண முறை வாகன நிறுத்துமிடம், திருமண மண்டப வாடகையும் உள்ளது.

திருவள்ளுவர் கோயில் மற்றும் அன்னை காமாட்சி உடனுறை ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணி கடந்த 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி, அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டு, 1975 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இக்கோயிலுக்கு மீண்டும் 2000 ஆம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் குடமுழுக்கு நடத்தப்பட்டது.

2023–24 ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை சட்டப்பேரவை மானியக் கோரிக்கை அறிவிப்பின் போது, ‘சென்னை, மயிலாப்பூர், முண்டகக் கண்ணியம்மன் கோயிலுடன் இணைந்த திருவள்ளுவர் கோயிலுக்கு ரூ.15 கோடியில் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் ரூ.19.17 கோடி மதிப்பில் 6 தொகுப்புகளாக திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டன.

அதில், கோயிலை புனரமைக்க ஏதுவாக ரூ.1.58 கோடி மதிப்பில் அங்குள்ள பழைய கட்டிடங்களை அகற்றுதல், புதிய வாகன மண்டபம், நூலகம், மடப்பள்ளி மற்றும் சுற்றுசுவர் கட்டும் பணிகள், ரூ.2.05 கோடியில் புதிதாக அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு, வாகன நிறுத்தம், பொதுக்கழிப்பிடம் கட்டும் பணிகளும் முதல்வர் மு.க.ஸ்டாலினால் ஏற்கெனவே தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதனைத் தொடர்ந்து, திருவள்ளுவர் திருக்கோயிலில் ரூ.2.07 கோடியில் கருங்கல்லால் ஆன பொற்றாமரை குளம் அமைத்தல் மற்றும் கருங்கல் தரைத்தளம் அமைக்கும் பணிகள், ரூ.8.70 கோடியில் திருவள்ளுவருக்கு கருங்கல்லால் ஆன புதிய கர்ப்பக்கிரகம், பிரகார மண்டபம் மற்றும் திருவள்ளுவர் பிறந்த இடத்துக்கு புதிய கருங்கல்லினாலான மண்டபம் கட்டும் பணிகள், ரூ. 2.33 கோடியில் வாசுகி அம்மையாருக்கு கருங்கல்லினாலான புதிய கர்ப்பக்கிரகம் அமைத்தல், புதிதாக கருங்கல்லினாலான முப்பால் மண்டபம் அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளது.

இதுதவிர, ரூ.2.44 கோடியில் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் சன்னதி மற்றும் மகாமண்டபம் கட்டுதல், காமாட்சியம்மன் , கருமாரியம்மன், பைரவர் , ஆஞ்சநேயர் , சண்டிகேஸ்வரர் , நடராஜர் மற்றும் நவக்கிரகங்கள் ஆகிய சன்னதிகள் கட்டும் பணிகள் என ரூ. 15.54 கோடி மதிப்பிலான திருப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார் எனத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Council of state advice on chief justice suspension was poisonous – tuah yeboah. America’s got talent recap for 8/27/2024. Latest sport news.