Amazing Tamilnadu – Tamil News Updates

‘முரசொலி’ செல்வம்: “கொள்கை ரத்தம் பாய்ச்சிய ‘சிலந்தி’!”

‘முரசொலி’ நாளிதழின் நிர்வாக ஆசிரியரும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மருமகனுமான முரசொலி செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 84.

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம், கருணாநிதியின் உடன்பிறந்த சகோதரியான சண்முக சுந்தரம்மாள் மகன். இவர் கருணாநிதியின் மகளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சகோதரியுமான செல்வியை திருமணம் செய்துள்ளார்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி நாளிதழை கவனித்து வந்தார். சிலந்தி என்ற புனைப் பெயரில் , முரசொலி நாளிதழில் பல கட்டுரைகளை எழுதி வந்தார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், இன்று காலை காலமானார்.

முரசொலியில் ‘சிலந்தி’ என்ற பெயரில் தொடர்ந்து கட்டுரை எழுதி வந்த அவர், இன்று காலையில் அடுத்த கட்டுரைக்கான குறிப்புகளை எடுத்துவைத்துவிட்டு, கண்ணயர்ந்த நேரத்தில் மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறைந்த முரசொலி செல்வத்தின் உடல், சென்னை கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முதல்வர் கருணாநிதியின் இல்லத்துக்கு கொண்டு வரப்படவுள்ளது. இதையடுத்து கோபாலபுரம் இல்லத்துக்கு துணை முதல்வர் உதயநிதி, திமுக எம்பி தயாநிதி மாறன் ஆகியோர் வந்தனர். ஏராளமான திமுக தொண்டர்களும் அப்பகுதிக்கு வந்துள்ளனர். முரசொலி செல்வத்தின் மறைவுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்கள், அரசியல் கட்சியினர், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

“தேர்தல் களம் முதல் திரைப்படத் துறை வரை முத்திரை பதித்தவர்!”

முரசொலி செல்வம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் அன்பு மருமகனும், அவரது மனசாட்சியான முரசொலி மாறனின் இளவலும், தங்கை செல்வியின் கணவருமான என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கி, வேதனைக் குருதியை வடியச் செய்கிறது.

கழகத்தின் போர்வாளான முரசொலி நாளேட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்று தன் எழுத்துகளால் ஜனநாயகக் குரலாக ஒலித்தவர்.தேர்தல் களம் முதல் திரைப்படப் பணிகள் வரை அனைத்துத் துறைகளிலும் முத்திரையைப் பதித்தவர். எந்த நிலையிலும் கழகமே மூச்சு என வாழ்ந்த கொள்கைச் செல்வம் அவர்.

“கொள்கை ரத்தம் பாய்ச்சிய ‘சிலந்தி’!”

அதிர்ந்து பேசாதவர். ஆனால், ஆழமான கொள்கைவாதி. ‘சிலந்தி’ என்ற பெயரில் முரசொலியில் அவர் எழுதிய நையாண்டியும் நகைச்சுவையும் ததும்பும் கட்டுரைகள் கழகத்தின் இளைய தலைமுறையினருக்குக் கொள்கை இரத்தம் பாய்ச்சும் வலிமை கொண்டவை. நேற்று முன்தினம்கூட முரசொலியில் கட்டுரை எழுதிய அவர், இன்று காலையில் அடுத்த கட்டுரைக்கான குறிப்புகளை எடுத்துவைத்துவிட்டு, சற்று கண்ணயர்ந்த நேரத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார் என்பதைக் கேட்டதும் இதயம் அதிர்ந்து, நொறுங்கிவிட்டேன்.

தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன்.என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கழகத்திலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்!

செல்வமே.. முரசொலி செல்வமே.. பண்பின் திருவுருவமே… திராவிட இயக்கத்தின் படைக்கலனே… கழகத்தின் கொள்கைச் செல்வமே.. நெஞ்சிலும் நினைவிலும் என்றும் நிலைத்திருப்பீர்” எனக் கூறியுள்ளார்.

Exit mobile version