குரங்கம்மை: தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… சிறப்பு வார்டுகள்… தடுப்பூசிக்கும் ‘சீரம்’ நிறுவனம் தீவிர முயற்சி!
கொரோனாவுக்கு பிறகு தற்போது உலக அளவில், குரங்கம்மை நோய் சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. ஆப்ரிக்க நாடான காங்கோவில் பரவி வந்த குரங்கம்மை தொற்று, தற்போது ஐரோப்பிய நாடுகளிலும், அண்டை நாடான பாகிஸ்தானிலும் பரவி உள்ளது.
இதுவரை 15,000க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், 500 க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். இந்தியாவில் தற்போதைக்கு பாதிப்பு இல்லை என்றாலும், உச்சகட்ட சுகாதார நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது. மேலும், குரங்கம்மை வைரஸ் மற்றும் பாதிப்பை கண்டறிவதற்காக ஆய்வகங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
குரங்கம்மை பாதிப்பு குறித்த அச்சம் மற்றும் அதனை எதிர்கொள்வது குறித்து உயர்நிலைக் குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலர் மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், குரங்கம்மை பாதிப்பு குறித்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் கண்காணிப்பு மற்றும் அதனை வேகமாக கண்டறிவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
விமான நிலையங்களில் கண்காணிப்பு
மேலும், நாடு முழுதும் உள்ள விமான நிலையங்களில் உச்சபட்ச கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு குரங்கம்மை அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில் உள்ள 32 பரிசோதனை கூடங்களில் குரங்கம்மை தொற்றை கண்டறியும் வசதிகள் உள்ளன. டில்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை, சப்தர்ஜங் மற்றும் லேடி ஹார்டிங்க் மருத்துவமனைகள், குரங்கம்மை சிகிச்சைக்கான சிறப்பு மையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.அனைத்து மாநிலங்களிலும் இதுபோல சிறப்பு மையங்களை அடையாளம் காண மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இந்த நிலையில், தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை. ஆனாலும், முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக நடந்த ஆய்வு கூட்டத்தில், மருத்துவ கண்காணிப்பு, குரங்கம்மை பாதித்தவர்களை தனிமைப்படுத்துதல், நிலையான வழிகாட்டி நெறிமுறைகளின்படி சிகிச்சை அளித்தல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் நோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் புரிதல்களை ஏற்படுத்தவும், மருத்துவ துறையினருக்கு பயிலரங்கம் நடத்தவும், பயிற்சி அளிக்கவும், மக்கள் நல்வாழ்வு துறை செயலர் சுப்ரியா சாஹூ கேட்டுக்கொண்டார்.
மேலும் இன்று இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மாசுப்பிரமணியன், “குரங்கம்மையை தடுக்கும் நடவடிக்கையை மத்திய அரசு சிறப்பாக கையாள்கிறது. பாகிஸ்தானில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது; எனவே தீவிரமாக கண்காணிக்கிறோம். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 10 படுக்கை கொண்ட குரங்கம்மை சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. கோவை, மதுரை உள்ளிட்ட 4 நகரங்களில் தனி வார்டுகள் அமைக்கப்படவுள்ளன” எனத் தெரிவித்தார்.
தடுப்பூசிக்கு முயற்சிக்கும் ‘சீரம்’
இந்த நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவல்லா அளித்துள்ள பேட்டியில், “ஆபத்தில் இருக்கும் லட்சக்கணக்கான நோயாளிகளின் உயிரை காக்க, குரங்கம்மைக்கான தடுப்பூசியை தயாரிக்கும் பணியில், நாங்கள் தற்போது ஈடுபட்டுள்ளோம். ஓராண்டுக்குள் தடுப்பூசி தொடர்பான நல்ல செய்தி வரும்” எனத் தெரிவித்துள்ளார்.