ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவிய குரங்கம்மை (Monkeypox ) நோய் தொற்று 116 நாடுகளில் பரவியதையடுத்து, குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு ( World Health Organaization – WHO) அறிவித்துள்ளது.
WHO தரவுகளின்படி, 2022 முதல் குரங்கு காய்ச்சலால் குறைந்தது 99,176 பேருக்கு பாதிப்பு மற்றும் 208 இறப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் பாலியல் உறவு மூலமும் இந்த வைரஸ் பரவக்கூடியதாக தெரிவிக்கப்பட்டிருப்பது கவலைக்குரிய அம்சமாக மாறி உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, ‘குரங்கு அம்மை பாதிப்பு இல்லை’ என பொது சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும், தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களின் சுகாதார அதிகாரிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளன.
இந்த நிலையில், குரங்கம்மை நோய்க்கான அறிகுறிகள் , மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து மருத்துவர்கள் மற்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்கள் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை இங்கே…
குரங்கு அம்மை எதனால் ஏற்படுகிறது?
குரங்கு அம்மை வைரஸால் ஏற்படும் ஓர் அரிய வகை தொற்று நோய். குரங்கு அம்மை வைரஸ் என்பது Poxviridae குடும்பத்தின் Orthopoxvirus இனத்தைச் சேர்ந்த ஒரு இரட்டை இழை DNA வைரஸ் ஆகும்.
எப்படி பரவுகிறது?
குரங்கம்மை நோய், பாதிப்புக்குள்ளானவருடன் நெருங்கிய தொடர்பு மூலம் மற்றவருக்கு நபர் பரவுகிறது. முகத்தோடு முகம், தோலோடு தோல், வாயோடு வாய் அல்லது வாயிலிருந்து தோல் தொடர்பு மற்றும் பாலுறவு உட்பட இந்த நோய் பரவுகிறது.
அறிகுறிகள்:
தோல் அரிப்பு, 2 முதல் 4 வாரம் காய்ச்சல், தலை, தசை, முதுகு வலி, சோர்வு ஆகியவை அறிகுறிகள்.
காய்ச்சல் வந்தவுடன், தடிப்புகள் ஏற்படும். உடலின் மற்ற இடங்களில் பரவுவதற்கு முன்பு முகத்தில்தான் தடிப்புகள் ஏற்படும். உள்ளங்கை, கைகள் மற்றும் உள்ளங்கால்களிலும் இந்த அம்மை பரவும்.
இந்தத் தடிப்புகள் அரிப்பையும் வலியையும் ஏற்படுத்தும். பல்வேறு கட்டங்களைக் கடந்து இறுதியாக அம்மை கொப்புளங்களாக உருமாறி, இறுதியில் இது உதிர்ந்துவிடும்.இவை வடுக்களாகப் பின்னால் மாறிவிடும்.
குரங்கம்மை தொற்று 14 முதல் 21 நாட்களில் தானாகவே சரியாகிவிடும்.
ஆனால் சில நேரங்களில் இவை உயிரைக் கொல்லும் தொற்றாகவும் மாறிவிடும். குறிப்பாக குழந்தைகள் போன்ற மிகவும் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு அதிக அச்சுறுத்தலை இந்த அம்மை நோய் ஏற்படுத்தும்.