Amazing Tamilnadu – Tamil News Updates

கூகுள் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாட்டில் AI ஆய்வகங்கள்… 20 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி!

மிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேற்று முன்தினம் சான் பிரான்ஸிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். அப்போது, உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இன்று கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு ஆப்பிள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, உலக மின்னணு சாதனங்கள் உற்பத்தி வரைபடத்தில் தமிழ்நாட்டிற்கான இடத்தை உறுதி செய்ததற்காக ஆப்பிள் நிறுவனத்திற்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்தார். மேலும், மாநிலத்தின் உற்பத்தி சூழலை மேம்படுத்த தமிழ்நாடு அரசின் பல்வேறு முயற்சிகளை கோடிட்டுக் காட்டியதோடு, தமிழ்நாட்டில் திறன் வளர்ச்சி மிகுந்த இளைஞர்கள், பெண் கல்வி மற்றும் அவர்களின் திறன் வளர்ச்சி குறித்தும், தொழில்துறை, வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து தளவாட வசதிகள் போன்றவற்றில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருவது குறித்தும் எடுத்துரைத்தார்.

கூகுள் நிறுவனத்துக்கு விசிட்…

இதனைத் தொடர்ந்து கூகுள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை மவுண்டன் வியூ வளாகத்தில் முதலமைச்சர் சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பிக்சல் 8 போன்கள் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும், கூகுள் நிறுவனத்தின் பிற தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை தமிழ்நாட்டில் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

20 லட்சம் மாணவர்களுக்கு AI பயிற்சி

மேலும், ஸ்டார்ட்-அப்கள், தொழில்துறை சுற்றுச்சூழல் இயக்கம் மற்றும் எதிர்காலத்திற்கான திறன் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகள் மூலம் வளர்ச்சியை அதிகரிப்பது குறித்தும் முதலமைச்சர் விளக்கினார். இந்தியாவின் மிகப்பெரிய திறன் மேம்பாட்டு முயற்சியான நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கூகுளுடன் இணைந்து எதிர்காலத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களை அதிநவீன செயற்கை நுண்ணறிவு திறன் வளர்ச்சியுடன் தயார்படுத்த தமிழ்நாடு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் AI ஆய்வகங்கள்

பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், கூகுள் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களை நிறுவுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருடன், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு துறை செயலாளர் வி.அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு விசிட்

இதன்பின், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Linkedin முதன்மை செயல் அலுவலர், யான் ரோஸ்லான்ஸ்கி மற்றும் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். டேட்டா சென்டர் விரிவாக்கம், உலக திறன் மேம்பாட்டு மையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன் முயற்சிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்தும் முதலமைச்சர் விவாதித்தார்.

Exit mobile version