“எது உண்மையான தேசபக்தி..?” – விவரிக்கும் ஸ்டாலின்!

திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும், மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் உறுதியையும் வலியுறுத்தி, திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழக சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்தும், எது உண்மையான தேசபக்தி என்பது குறித்தும் அதில் விவரித்துள்ளார்.
” திராவிட மாடல் ஆட்சியில் சட்டமன்றத்தில் எந்த அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் அது முந்தைய ஆட்சியைப் போல வெறும் மேசையைத் தட்டுவதற்கான அறிவிப்பாக மட்டும் இருப்பதில்லை. அறிவிக்கப்பட்டவை செயல்வடிவம் பெறவேண்டும் என்ற உறுதியுடன், கடைக்கோடி கிராமம் வரை அது சென்று சேரும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பில் உள்ள நான் ஓய்வதில்லை.
தமிழ்நாடு அரசின் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஏறத்தாழ ஒன்றரை மாதங்கள் நடைபெற்றுள்ளது.நன்மைகள் தரும் அறிவிப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டதுடன், ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் போன்ற தீமைகளைத் தடுக்கும் வகையிலான தீர்மானங்களையும் திராவிட மாடல் அரசின் இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றியுள்ளோம்.
‘எது உண்மையான தேசபக்தி..?‘
மாநில உரிமைகளுக்கான குரலை நாம் ஓங்கி ஒலிக்கும் நிலையில், இந்தியாவின் ஒருமைப்பாடும் நாட்டின் பாதுகாப்பும் எந்தவிதத்திலும் பாதிக்கக்கூடாது என்ற இதயப்பூர்வமான அக்கறையுடன் காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, ஒன்றிய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும் என்ற தீர்மானத்தையும் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளோம்.
தேசபக்தி என்பது நமக்குத் தேர்தல் அரசியல் முழக்கமல்ல. மாநில உரிமைகளுடனான கூட்டுறவுக் கூட்டாட்சி மிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தியாகும். அரசியல் சட்ட மாண்பினைக் காக்கும் செயல்பாட்டுடன் இந்தியாவின் பாதுகாவலனாகவும், தமிழ்நாட்டிற்குள் மதவாத அரசியல் தலையெடுக்காமல் தடுக்கும் அரணாகவும் உங்களில் ஒருவனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் இறுதி வரை உறுதியாக நிற்பேன்.
நம்முடைய இந்த உறுதியை சிறு சிறு சலசலப்புகளால் குலைத்துவிட முடியுமா என்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் முயற்சி செய்து பார்த்தனர். சட்டம் – ஒழுங்கு தொடர்பாக அங்கொன்றும் இங்கொன்றுமான நிகழ்வுகள், தனி மனித விரோதங்களால் ஏற்பட்ட பழிக்குப்பழிகள் இவற்றை முதன்மை எதிர்க்கட்சியும் அவர்களுடன் கூட்டணி வைத்திருப்பவர்களும் பூதாகரமான பிரச்சினையைப் போல காட்ட முயன்று தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்க நினைத்தாலும், அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரப்பூர்வமான பதில்கள் பேரவையில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டன.

‘நான்காண்டுகளாக ஜனநாயகப் போராட்டம்‘
அனல் பறக்கும் வாதங்களில் கடுஞ்சொற்கள் எந்தத் தரப்பிலிருந்து வெளிப்பட்டாலும், அந்த நிலை தொடரக்கூடாது என்பதில் எப்போதும் நான் அக்கறையுடன் இருக்கிறேன். இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலும் அந்த நிலை கடைப்பிடிக்கப்பட்டது.
கூட்டத் தொடர் நிறைவடைந்த நாளில், எதிர்க்கட்சித் தலைவர் அவைக்கு வராதததால், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கும் தோழமைக் கட்சி உறுப்பினர்களுக்கும் கை குலுக்கி நன்றி தெரிவித்து விடைபெற்றேன்.
நாம் நாகரிகமாகத்தான் நடந்து கொள்கிறோம். நம்மில் யாரேனும் நாகரிகத்தின் எல்லையைக் கடந்தால் நடவடிக்கை எடுக்கவும் தயங்குவதில்லை. இது நம் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களிடம் நாம் வெளிப்படுத்தும் பொறுப்புணர்வு. ஜனநாயக நாட்டில் மக்களே எஜமானர்கள். நாம் அவர்களின் சேவகர்கள்.
நம் ஆட்சியின் மகத்தான திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் பயன் தந்திருப்பதால், எதிர்க்கட்சியினர் பொறாமையுடன் விமர்சிப்பது போல, நாம் தமிழ்நாட்டின் குடும்பக் கட்சியாகத் திகழ்கிறோம். அதனால்தான் சட்டமன்றக் கூட்டத்தொடர் நிறைவு பெற்ற நாளில், 7-ஆவது முறையாகத் திமுக ஆட்சி அமைக்கும் என்றும், திராவிட மாடல் அரசின் ‘version 2.0 loading’ என்றும் உறுதியாகத் தெரிவித்தேன்.
ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளாக ஜனநாயகப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். சட்டமன்றக் கூட்டத் தொடரின் நிறைவு நாளில் நான் குறிப்பிட்டேன். “மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் மதில் சுவர்கள் என்பது போல ஒரு பக்கம் ஒன்றிய அரசு, மறுபக்கம் ஆளுநர், நிதி நெருக்கடி எனப் பல தடைகளைத் தாண்டி சாதனை படைத்து வருகிறோம்”என்று.
‘மீண்டும் திமுக ஆட்சி’
திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்கொள்ளாத நெருக்கடிகள் இல்லை. சந்திக்காத சவால்கள் கிடையாது. சாதிக்காத திட்டங்கள் கிடையாது. இதை உடன்பிறப்புகளான நீங்கள் இத்தனை காலம் உணர்ந்திருப்பதுபோல, இப்போது பொதுமக்களும் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
திமுக என்பது தமிழ்நாட்டின் நலனை மட்டுமின்றி, இந்தியாவின் ஜனநாயகத்தையும் காக்கின்ற இயக்கம் என்பதை எதிரிகளின் மனசாட்சியும் சொல்லும். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! மக்களின் பேராதரவுடன் திமுக-வே மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமரும்!” என அந்த கடிதத்தில் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.