தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று மாலை டெல்லி சென்றார். விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, டெல்லி சாணக்கியாபுரத்தில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு சென்று இரவில் தங்கினார். இதனையடுத்து இன்று காலை 11 மணியளவில் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சவுத் பிளாக்கில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். அவருக்கு சால்வை அணிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தடம் பெட்டகத்தை பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பரிசளித்தார்.
அதனைத் தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்திட தேவையான மத்திய அரசின் நிதி, சமக்ரசிக்க்ஷா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு ஆகிய மூன்று முக்கிய விஷயங்கள் குறித்த கோரிக்கை மனுவை வழங்கினார்.
3 முக்கிய கோரிக்கைகள்
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் II
பொதுப் போக்குவரத்தினை உயர்த்திட வேண்டிய தேவையைக் கண்டறிந்து, தமிழ்நாடு அரசு சென்னை மெட்ரோ ரயில் திட்டம்
கட்டம்-II ற்கு ஒப்புதல் அளித்து, 50:50 என்ற சமவீத மூலதனப் பங்களிப்புடன் ஒப்புதல் வழங்கவும், இருதரப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து நிதியைப் பெறுவதற்கும், மத்திய அரசிற்கு பரிந்துரை செய்திருந்தது.
இந்தியாவிலுள்ள பெரும்பாலான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு சமவீத மூலதனப் பங்களிப்பு அடிப்படையில் நிதி வழங்கியுள்ளது. எனவே, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் -II ற்கு மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் 50:50 என்ற சமவீத மூலதனப் பங்களிப்புடன், கட்டம்-I ற்கு வழங்கப்பட்டது போன்றும், பொது முதலீட்டுக் குழு பரிந்துரைத்துள்ளவாறும் விரைவில் ஒப்புதல் வழங்குமாறு தனது கோரிக்கை மனு மூலமாக முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்
தமிழ்நாட்டிற்கான சமக்ரசிக்க்ஷா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் சமக்ரசிக்க்ஷா திட்டமானது 2018-ஆம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கான மத்திய அரசின் நிதி விடுவிக்கப்படவில்லையெனில் மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வரும் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டிற்கு வழங்கிடும் முக்கியத்துவத்தை குறைப்பதாகவே அமைந்திடும். எனவே, தமிழ்நாட்டின் நியாயமான இக்கோரிக்கையினை பரிசீலித்து, தேசிய கல்விக் கொள்கை 2020-ல் வரையறுக்கப்பட்டுள்ள மும்மொழிக் கோட்பாட்டினை வலியுறுத்துவதை மறுபரிசீலனை செய்யுமாறு முதலமைச்சர்கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்திய மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்க நிரந்தர தீர்வு
சமீப காலமாக அடுத்தடுத்து இந்திய மீனவர்கள் மீன்பிடி கலன்களுடன் இலங்கை அரசால் கைது செய்யப்படுகின்றனர். நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் இந்தப் பிரச்சனையின் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏழை மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த முக்கிய பிரச்னையில் பிரதமர் அவர்கள் தலையிட்டு நிரந்தர தீர்வு காணுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமரின் ரியாக்ஷன்
கோரிக்கை மனுவினை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, மேற்படி கோரிக்கைகள் குறித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
ஸ்டாலின் எதிர்பார்ப்பு
பிரதமர் உடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “பிரதமருடனான சந்திப்பு இனிய சந்திப்பாக அமைந்தது. மத்திய அரசின் நிதியை தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். இந்த சந்திப்பை மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது பிரதமர் மோடியிடம் தான் உள்ளது” என்றார்.
தமிழகத்துக்கான கோரிக்கைள் ஏற்கப்படுமா, முதலமைச்சரின் சந்திப்பு மகிழ்ச்சியானதாக மாறுமா என்பது பிரதமர் மோடியின் கையில் தான் உள்ளது. எனவே, அடுத்து வரும் நாட்களில் மத்திய அரசிடமிருந்து அறிவிப்பு வருமா எனத் தமிழக மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.