உலக அளவில் புகழ்பெற்ற மிச்செலின் ( Michelin) டயர் தயாரிப்பு நிறுவனம், பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், சென்னைக்கு அருகில் உள்ள தேர்வாய் கண்டிகை பகுதியில் ரூ. 564 கோடி மதிப்பீட்டில் பிரீமியம் கார் டயர் தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
Michelin India நிறுவனத்தின் கார் டயர் தயாரிப்பு தொழிற்சாலை, தேர்வாய் கண்டிகை பகுதியில் ஏற்கெனவே கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில் தற்போது ஆண்டுதோறும் சுமார் 49,000 டன் TBR டயர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் வாகன உற்பத்தியும், அதன் விற்பனையும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் பிரீமியம் டயர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
அந்த வகையில் இந்த தேவையை ஈடுகட்டும் வகையில் மிச்செலின் இந்தியா (Michelin India),அதே தேர்வாய் கண்டிகை பகுதியில் ரூ. 564 கோடி மதிப்பீட்டில் பிரீமியம் கார் டயர் தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு, மூன்றாம் காலாண்டு முதல் இங்கு பிரீமியம் டயர் உற்பத்தி தொடங்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய முதலீட்டின் மூலம் இந்தியாவில் மிச்செலின் நிறுவனத்தின் மொத்த முதலீடு ரூ. 3,404 கோடியாக அதிகரித்துள்ளது. SUV போன்ற பெரிய வாகனங்களுக்கான டயர்களில் குறிப்பிட்ட கவனம் செலுத்தி, வேகமாக விரிவடைந்து வரும் பிரீமியம் கார் சந்தையை நிறுவனம் இலக்காகக் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் 40 லட்சம் ரூபாய்க்கு மேல் விலையுள்ள வாகனங்களின் விற்பனையில் ஏற்றம் கண்டு வருகிறது. எனவே அதற்கேற்ற வகையில் பிரீமியம், உயர்தர டயர்களுக்கான வளர்ந்து வரும் தேவையும் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில்கொண்டே மிச்செலின் நிறுவனம், தனது சென்னை தொழிற்சாலையை விரிவுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இது குறித்து பேசும் மிச்செலின் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சாந்தனு தேஷ்பாண்டே, “எங்கள் டிரக் மற்றும் பஸ் டயர்கள் ஏற்கனவே 15% எரிபொருள் சேமிப்பை வழங்குகின்றன.மேலும் இந்த செயல்திறனை பயணிகள் கார் டயர்களுக்கும் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். மேலும் இந்த முதலீடு, மிச்செலின் நிறுவனத்தினுடைய “உள்ளூர்க்கான உள்ளூர்” மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும். அதாவது இறக்குமதியின் மீதான நம்பிக்கையை குறைத்து இந்திய நுகர்வோருக்கு நெருக்கமாக செயல்படும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்கிறார்.
நாடு முழுவதும் உள்ள Michelin India நிறுவனத்தில் 2,800 பேர் வேலை செய்து வருகிறார்கள். தற்போது இந்த பிரீமியம் கார் தயாரிப்பு தொழிற்சாலை அமைப்பதன் மூலம் கூடுதலாக 200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.