நடிகர்கள் அரவிந்த் சாமி, கார்த்தி காம்போவில், பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான ‘மெய்யழகன்’ திரைப்படம் ரசிகர்களிடையே பரவலாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் படத்தின் இரண்டாவது பாதியில் சில காட்சிகள் உரையாடல்களாகவே அமைந்து சலிப்பை ஏற்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன. அதே சமயம் அடி தடி, வெட்டுக் குத்து, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இல்லாமல் ஃபீல் குட் சினிமாவாக நன்றாக இருப்பதாக பிரபலங்கள் பலரும் பாராட்டி இருந்தனர்.
இந்த நிலையில், படத்தை மேலும் மெருகேற்றும் வகையிலும், இரண்டாம் பாதி காட்சிகள் குறித்த விமர்சனங்களைக் கருத்தில்கொண்டும் ‘மெய்யழகன்’ படத்தின் 18 நிமிட காட்சிகளை நீக்கியிருக்கிறது படக்குழு. இதற்கு முன்பு முழு திரைப்படத்தின் கால அளவு 2 மணி நேரம் 57 நிமிடங்களாக இருந்தது. தற்போது 2 மணி நேரம் 38 நிமிடத்திற்கு படத்தை சுருக்கியிருக்கிறார்கள்.
இது தொடர்பாக இப்படத்தின் இயக்குநர் பிரேம்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்பால் உருவான மெய்யழகனுக்கு பேரன்பை அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி. திரைமொழியின் வழக்கமான பாணியில் இருந்து விலகிய ஒரு திரை அனுபவத்திற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையை விதைத்ததற்கு நன்றி. ஏராளமான அனுபவ பகிர்வுகள் இந்த படைப்பின் மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கின்றன.
மெய்யழகனை உணர்ந்து புரிந்துகொண்ட பெரும்பாலானோரின் அன்பும், ரசனையும் பிரமிக்க வைக்கின்றன. படத்தின் நீளம் குறித்து மட்டும் சில அக்கறை குரல்கள் வெளிப்பட்டு வந்த நிலையில், ஒரு படைப்பாளியின் முதல் கடமை மக்களின் குரல்களுக்கு செவிமடுப்பது.
எல்லோரது திருப்தியும் எனக்கு முக்கியம். அதுவே மெய்யழகனின் மீது நீங்கள் கொண்ட அன்பிற்கு நான் செய்யும் கைம்மாறு. எனவே இன்று முதல் சில காட்சிகள் நீக்கப்பட்டு, 18 நிமிடங்கள் 42 நொடிகள் குறைக்கப்பட்டு, 2 மணி நேரம் 38 நிமிடங்களாக திரையிடல் தொடரும். மெய்யழகனின் நீளம் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறது, ஆனால் அவன் பேசும் அன்பும், திரை அனுபவமும் சற்றும் குறையவில்லை. சூர்யா அண்ணா, கார்த்தி ப்ரதர், ராஜசேகர் சார், சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் சக்தி அண்ணா என அனைவரும், முதல் சந்திப்பு முதல் இன்று வரை என்னை அரவணைத்து, முழு படைப்பு சுதந்திரம் அளித்திருக்கிறார்கள். எல்லா சூழலிலும் பக்கபலமாக துணை நிற்கிறார்கள். இப்போதும் இந்த நேரக் குறைப்பு செய்யும், என் முடிவிற்கு உடன் நிற்கிறார்கள். அவர்களுக்கு என் பேரன்பும் நன்றியும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
4 நாளில் 24 கோடி ரூபாய் வசூல்
இதனிடையே ‘மெய்யழகன்’ படம் கடந்த செப்டம்பர் 27 அன்று வெளியான நிலையில், தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இப்படத்தின் வசூல், மூன்றே நாட்களில் ரூ.10 கோடியை தாண்டிய நிலையில், நான்காவது நாளில் அதாவது செப்டம்பர் 30 ல் 16.05 கோடி வசூலாகி உள்ளது. உலகம் முழுவதும் 24 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.