Amazing Tamilnadu – Tamil News Updates

பாரிஸ் ஒலிம்பிக்: நூலிழையில் வரலாற்று சாதனையை தவறவிட்ட மனு பாக்கர்… பாராட்டி, ஆறுதல் கூறும் இந்திய ரசிகர்கள்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில், இந்தியாவைச் சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் தனிநபர் பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்று சாதித்த இந்தியாவின் மனு பாக்கர், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில், சரப்ஜோத் சிங்குடன் இணைந்து பங்கேற்றார். அதிலும், வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர், ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தார்.

இதையடுத்து, 25 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் தனிநபர் பிரிவில் களமிறங்கிய மனு பாக்கர், தகுதிச் சுற்றில் 590 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

நூலிழையில் தவறிய வாய்ப்பு

இந்த நிலையில், இன்று பிற்பகலில் நடந்த இறுதிப் போட்டியில், மனு பாக்கர் தொடக்கத்திலேயே பின்னடைவை சந்தித்தார். முதல் சுற்றில் அவர் 5 வாய்ப்பில் 2 முறை மட்டுமே இலக்கை தாக்கினார். அதனால், ஆறாவது இடத்தில் இருந்தார். அதன் பின்னர் அதிரடியாக முன்னேறிய அவர், மூன்றாவது சுற்றின் முடிவில், மொத்தம் 15 வாய்ப்பில் 10 முறை இலக்கை தாக்கி, இரண்டாவது இடத்தை பிடித்தார். நான்காவது சுற்றில், அவர் மூன்று முறை மட்டுமே இலக்கை தாக்கினார். அதன் காரணமாக ஆறாவது இடத்துக்கு சென்றார். அதனால், தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக அச்சம் ஏற்பட்டது.

அதன் பின் அபாரமாக செயல்பட்ட அவர், 7 ஆவது சுற்றின் முடிவில் 26 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தார். எட்டாவது சுற்றில், நான்காவது இடத்துக்கான தகுதி நீக்கத்தின் போது, ஹங்கேரியின் வெரோனிகாவுடன் டை பிரேக்கரில் மோதினார். அதில் தோல்வி அடைந்த மனு பாக்கர், நான்காவது இடம் பெற்று போட்டியிலிருந்து வெளியேறினார். முதல் மூன்று இடங்களில் இருப்பவர்களுக்கே பதக்கம் கிடைக்கும் என்பதால், அந்த வாய்ப்பை இழந்தார் மனு பாக்கர்.

இந்த போட்டியிலும் அவர் பதக்கம் வென்றால், ஒரே ஒலிம்பிக்கில் 3 ஆவது பதக்கத்தை வென்ற பெருமையைப் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த வாய்ப்பை அவர் நூலிழையில் தவறவிட்டார். அந்த வகையில், அவர் இந்த வரலாற்று சாதனையை இழந்துவிட்டார். அது மட்டுமில்லாமல், மானு பாக்கர் இப்போட்டியில் வென்றால், இந்தியாவுக்கு துப்பாக்கிச் சுடுதலில் 4 ஆவது பதக்கம் கிடைத்திருக்கும். ஆனால், அந்த வாய்ப்பு தவறிவிட்டது இந்தியர்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய ரசிகர்களின் ஆறுதலும் பாராட்டும்

மனு பாக்கர் தனது மூன்றாவது ஒலிம்பிக் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டாலும், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஏற்கெனவே இரண்டு பதக்கங்களை வென்றதைக் குறிப்பிட்டுழ் இந்தியர்கள் சமூக வலைதளங்களில் அவரைப் பாராட்டி, ஆறுதல் கூறி வருகின்றனர்.

“இறுதிப் போட்டியில் மனு பேக்கரின் மற்றொரு வலுவான செயல்திறன் இருந்தபோதிலும், மூன்றாவது ஒலிம்பிக் பதக்கத்தைப் பெறுவதை அவர் துரதிருஷ்டவசமாக தவறவிட்டுவிட்டுள்ளார். ஆனாலும் பரவாயில்லை. உங்கள் முயற்சிகளால் இந்தியாவை ஏற்கனவே பெருமைப்படுத்தியுள்ளீர்கள். உங்களை நினைத்து ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமிதம் கொள்கிறது” எனப் பாராட்டி பதவிட்டு வருகின்றனர்.

அதிகரித்த பிராண்ட் மதிப்பு

இந்த நிலையில், மனு பாக்கரை சுமார் 40 பிராண்டுகள் ஒப்பந்தம் செய்ய அணுகியுள்ளது எனவும், அவரது பிராண்ட் மதிப்பு 6 முதல் 7 மடங்கு உயர்ந்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு ஒரு ஒப்பந்தத்திற்கு ரூ. 20 லட்சம் முதல் 25 லட்சம் வரை இருந்த அவரது கட்டணம், தற்போது ரூ.1.5 கோடி வரை உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவைப் போலவே, மனு பாக்கரும் தேசிய விளையாட்டு பிராண்டாக மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

Exit mobile version