மதுரை மாநகராட்சியுடன் இணைந்து, இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) ஒரு அங்கமான ‘யங் இந்தியன்ஸ்’ ( Young Indians) அமைப்பின் சாா்பில் ஆகஸ்ட் 8, மற்றும் 9, 10, 11 ஆகிய நாள்களில் மதுரை நகரத்தின் மரபையும், பண்பாட்டையும் கொண்டாடும் வகையில், ‘மா மதுரை விழா’ நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மதுரை மாநகரில் முக்கிய இடங்களில் உள்ள சுவர்களில் வண்ணமயமான அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டன. மேலும் பல்வேறு அழகிய சிற்பங்களும் அமைக்கப்பட்டன. மேலும் ‘மா மதுரை’ நிகழ்விற்கான அறிமுகப் பாடலை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டிருந்தார்.
மதுரை தமுக்கம் மைதானம், லட்சுமி சுந்தரம் மகால், மகாத்மா பள்ளி, வண்டியூா் தெப்பக்குளம், மடீட்சியா அரங்கம், வைகைக் கரை உள்ளிட்ட இடங்களில் இந்த விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நிகழ்வில் பொதுமக்கள், மாணவா்களுக்கு விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் சுற்றுலாவை மேம்படுத்த பட்டம் விடும் திருவிழா, பலூன் திருவிழா, அடுக்குமாடி பேருந்து பயணம், பாரம்பரிய நடைபயணம், சைக்கிள் ஓட்டுதல், உணவுத் திருவிழா, வியாபார சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பிரம்மாண்டமான நிகழ்வுகளுக்கு திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், இவ்விழா குறித்து மதுரை மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
இத்தகைய எதிர்பார்ப்பு மற்றும் பிரம்மாண்ட ஏற்பாடுகளுக்கு மத்தியில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று சென்னையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக, ‘மா மதுரை விழா’-வைத் தொடங்கி வைத்தார்.
மதுரை மாநகரின் பெருமைகள்
அப்போது மதுரை மாநகரின் பெருமைகளைப் பட்டியலிட்ட மு.க. ஸ்டாலின், “மதுரை மாநகர் என்பது பல்வேறு வரலாற்றுப் பெருமைகளைக் கொண்டது.இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்று மதுரை. இரண்டாயிரம் ஆண்டு வரலாறு கொண்டது மதுரை.பாண்டிய மன்னர்கள் தலைநகராக ஆட்சி செய்த நகரம்.ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியப் பாண்டியன் ஆட்சி செய்த நகரம். ‘தவறு செய்தவன் மன்னனே ஆனாலும்…’ என மன்னனைக் கண்ணகி கேள்வி கேட்ட மண் இது. நீதியைக் காக்க தன்னுடைய உயிரையே தந்த மன்னர் ஆட்சி செய்த இடம் இது.
திருமலை நாயக்கரும், ராணி மங்கம்மாளும் ஆண்ட பூமி இது. புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் இருக்கும் கோயில் நகரம் இது. அனைத்துக் கலைகளும் ஒருங்கே இருக்கும் பண்பாட்டுச் சின்னமாக இந்தக் கோவில் கருதப்படுகிறது. புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா, மாபெரும் பண்பாட்டு விழாவாக இது நடைபெற்று வருகிறது. 1866-ஆம் ஆண்டே நகராட்சியாக ஆன ஊர் இது. சென்னைக்கு அடுத்ததாக இரண்டாவது மாநகராட்சியாக 1971-ஆம் ஆண்டு மதுரையைதான் மாநகராட்சி ஆக்கினார் அன்றைய முதலமைச்சர் கலைஞர். அண்ணல் காந்தி அவர்கள் தன்னை அரையாடை மனிதராக மாற்றிக்கொண்ட இடமும் இந்த மதுரை தான். திமுக இளைஞரணி தொடங்கப்பட்டதும் இந்த மதுரை மண்ணில் இருந்துதான்” எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
சிலப்பதிகார ‘இந்திர விழா‘
‘வரலாற்றைப் போற்றுவோம், வைகையைப் போற்றுவோம், மாமதுரையைப் போற்றுவோம்’ போன்ற தலைப்புகளில் இந்த விழா நடந்து கொண்டு வருகிறது. இன்று தொடங்கி, இந்த விழா நடக்கும் நாட்களில் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும் என்பதால், மதுரைவாசிகள் மகிழ்ச்சியுடன் நகரை உலா வரத்தொடங்கி உள்ளனர். பள்ளி, மாணவ மாணவியருக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. கருத்தரங்குகள், கலைநிகழ்ச்சிகள், ஊர்வலம், வாணவேடிக்கை ஆகியவையும் நடத்தப்படுகிறது.
வைகை தொடங்கும் இடத்திலிருந்து, அது கடலில் கலக்கும் இடம் வரைக்குமான ஆற்றின் பாதை, அதன் கரைகளில் அமைந்திருக்கும் ஊர்கள் ஆகியவற்றின் மாதிரி, வைகை ஆற்றுக்குள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. காலந்தோறும் மதுரை நகரம் மாறிய காட்சி ஓவியமாகவும், மாதிரி நகரமாகவும் கண்காட்சியாக தமுக்கம் திடலில் அமைக்கப்பட்டிருக்கும்.
இருபுறமும் விளக்குகள் ஏந்தி பொதுமக்கள் நிற்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட ‘இந்திர விழா’ போல ‘மா மதுரை விழா நடத்தப்பட்டு வருகிறது.