அரசு சேவைகள் பொதுமக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக இந்த திட்டம், நகர்ப்புறங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டது. அதற்காக நகர்ப்புறங்களில் ஒவ்வொரு வார்டு வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அரசின் 15 துறைகளின் கீழ் உள்ள 44 சேவைகள் பொதுமக்களுக்கு மிக எளிதாக வழங்கப்பட்டன.
அரசின் பல்வேறு துறைகளின் சேவைகளும் ஒரே இடத்தில் உடனடியாக கிடைத்ததால் பொதுமக்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த முகாம்கள் மூலம் மொத்தம் 8 லட்சத்து 74 ஆயிரம் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
கிராமப்புறங்களிலும் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்
இந்த நிலையில், இந்த திட்டத்தின் பயன் கிராமப்புற மக்களுக்கு கிடைக்கும் வகையில், ஊரக பகுதிகளிலும் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டம், பாளையம் புதூர் ஊராட்சி, அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை ஊரகப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி, 12,500 கிராம ஊராட்சிகளில் 2,500 முகாம்களின் மூலம் கிராமப்புற மக்கள் அதிகம் அணுகும் 15 அரசுத் துறைகளின் வாயிலாக 44 சேவைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அத்துடன், மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, மனுக்களைப் பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்டு, மக்களிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.
இந்த திட்டம் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, கிராமப்புற மக்கள் அதிகம் அணுகும் 15 அரசுத் துறைகள் அடையாளம் காணப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சி மக்கள் பயன்பெறும் வகையில், ஏறத்தாழ 2,500 முகாம்கள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் இனி கிராமப்புற மக்களுக்கும் அரசு சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் கிடைக்கும் என்பதால், அவர்களது கால விரயமும் வீண் அலைச்சலும் தவிர்க்கப்படும்.
திட்டப் பணிகள் / அரசு நலத்திட்டங்கள்
இதனிடையே இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் 444 கோடியே 77 இலட்சம் ரூபாய் செலவில் 621 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பல்வேறு துறைகளின் சார்பில் 2,637 பயனாளிகளுக்கு 56 கோடியே 4 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
தருமபுரி மாவட்டத்துக்கான 15 அறிவிப்புகள்
மேலும், “தருமபுரி அரூர் அரசு மருத்துவமனையில் ரூ.51 கோடியில் உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படும். அரூர் பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். பஞ்சப்பள்ளி அலியாளம் அணைக்கட்டு திட்டம் நிறைவேற்றப்படும். சிட்லிங், சித்தேரி கிராம மக்களுக்கு சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட தொழில்கள் ஏற்படுத்தப்படும். தீர்த்தமலையில் துணை வேளாண் விரிவாக்க மையம் அமைக்கப்படும்” ஆகிய 7 அறிவிப்புகளை இந்த நிகழ்ச்சியின்போது அறிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தருமபுரி மாவட்ட மக்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்று, மேலும் கூடுதலாக 8 புதிய அறிவிப்புகளையும் செயல்படுத்திட உத்தரவிட்டார்.
இதன் மூலம் தருமபுரி மாவட்டத்துக்கு என 15 அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.