கொரோனா காலக்கட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்ட ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம், 3 ஆண்டுகளை நிறைவு செய்து, 4 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை 1,86,13,872 பேர் பயனடைந்துள்ளனர். மேலும் 10,969 சுகாதார தன்னார்வலர்கள், 463 நோய் ஆதரவு சிகிச்சை செவிலியர்கள், 463 இயன்முறை சிகிச்சையாளர்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 2892 செவிலியர்கள் இத்திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த திட்டம், மிக விரைவில் 2 கோடி பயனாளிகள் என்ற இலக்கை அடைய உள்ளது. நகர்ப்புறங்களில், குறிப்பாக சென்னையைப் பொறுத்தவரை இந்த திட்டத்தை கொண்டு செல்வது சவாலான விஷயமாக உள்ளது. எனினும், இதுவரை 53 லட்சத்து 5 ஆயிரம் பேருக்கு சென்னையில் மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் பொது சுகாதாரத் துறை சிறப்பாக செயல்பட்டு, இந்த திட்டத்திற்கான தகுதி படைத்த மக்கள் 58,94,860 பேர் எனக் கண்டறியப்பட்டு, இதுவரை 53,05,373 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது. சென்னையில் மட்டும் ரத்த அழுத்த நோய் பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் 6,03,250 பேர், நீரிழிவு நோய் பாதிப்பு இருந்தவர்கள் 3,65,679 பேர், இரண்டும் சேர்ந்து இருந்தவர்கள் 3,03,203 பேர், இயன்முறை சிகிச்சை தேவைப்பட்டவர்கள் 14,066 பேர், நோய் ஆதரவு சிகிச்சை 8,038, டயாலிசிஸ் பைகள் வழங்கப்பட்டவர்கள் 77 பேர் பயனடைந்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அவசர எண் அறிவிப்பு
சென்னையில் கேட்டட் கம்யூனிட்டி வீடுகள் ( நாற்புறமும் சுவர்களால் சூழப்பட்ட பகுதிக்குள் வானுயர் கட்டடங்கள். நுழைவாயில் வழியாக வீடுகளின் உரிமையாளர்களோ, அவர்களால் அங்கீகரிக்கப்பட்டவர்களோ மட்டும்தான் நுழைய முடியும்) மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தைக் கொண்டு செல்ல 104 என்கிற அவசர கால எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்கள் இந்த எண்ணிற்கு அழைத்தால், அவர்களுக்கு சேவை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 4 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சென்னை சைதாப்பேட்டை நேரு நகரில் பயனாளிகளின் இல்லத்திற்கே அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்று, மருந்து பெட்டகம் வழங்கி, இந்த திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், மேற்கண்ட தகவலை அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட திட்ட செயல்பாட்டு அறிக்கையில், கடந்த 3 ஆண்டுகளில் 4.7 கோடி பேர் தொடர் சேவைகளையும், 1.8 கோடி பேர் முதல் முறை சேவையையும் பெற்று, சுமார் 5.93 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.