சென்னையில் பரவும் ‘மெட்ராஸ் ஐ’ … காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை!
சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’ என அழைக்கப்படும் விழி வெண்படல அழற்சி தொற்று அதிகரித்து வருகின்றது. இந்தத் தொற்றானது, மழைக்காலத்தில் மிக அதிகமாகப் பரவும். காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாகவும், தொற்று பாதிப்புள்ள நபர் மற்றவர்களைத் தொடுவதாலும் பொருள்களைப் பகிர்ந்து கொள்வதாலும் அடுத்தவர்களுக்கும் எளிதில் பரவும்.
அறிகுறிகள்
இதன் அறிகுறிகளாக கண் வலி மற்றும் கண் சிவந்து போகுதல், கண்களில் நீர் வழிதல், கண்களில் எரிச்சல், கண்களின் நமைச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் உண்டாகும்.
கண்களில் அழுக்கு வெளியேறி இமைப்பகுதிகள் ஒட்டிக் கொள்ளுதல், கண்களில் தூசி அல்லது வேறு வெளிப்பொருள் உள்ளது போன்ற உணர்வு ஏற்படும். நோய்த்தொற்று கண் பார்வைக்கு பரவினால், பார்வை இழக்கும் அபாயம் உள்ளது. மெட்ராஸ் ஐ -யை ஏற்படுத்தும் வைரஸால் ஜலதோஷமும் ஏற்படலாம். சிலருக்கு காய்ச்சல் வந்து அதற்கு பிறகு கண் வலி ஏற்படும்.
சுய சிகிச்சை கூடாது
சென்னையில் இந்த தொற்று தற்போது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்புக்கு உள்ளானவர்கள் சுயமாக சிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.”
‘மெட்ராஸ் ஐ’ பாதித்துவிட்டால் உடனே கண் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. ஒருவேளை தொற்று பாதிப்பு ரொம்பவும் தீவிரமாக இருந்தால் ஆன்டிபயாடிக் டிராப்ஸ், கண்களை வறண்டுபோகாமல் வைத்திருக்கும் லூப்ரிகன்ட்ஸ், ஸ்டீராய்டு டிராப்ஸ் போன்றவை தேவையா என்பதையும் கண் மருத்துவர் முடிவு செய்து பரிந்துரைப்பார்” என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பார்த்தாலே பரவுமா?
மெட்ராஸ் ஐ பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஒருவரை ஒருவர் நேடியாக பார்ப்பதினால் தொற்று பரவாது. தொற்று பாதிப்புள்ளவர்கள் கண்ணாடி அணிந்துகொள்ளலாம்.
ஆனால், அலுவலகத்தில் அல்லது குடும்பத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் மற்றவருக்கு பரவும் வாய்ப்பு உள்ளது. அதனால், பாதிப்புக்கு உள்ளானவர்கள் உபயோகிக்கும் பொருட்களை மற்றவர்கள் உபயோகிக்கக்கூடாது. மேலும், இந்த நோய் பாதித்தவர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்?
இந்நோயினால் பாதிக்கப்பட்டால் கண்கள் மற்றும் கைகளை நல்ல நீரினால் அடிக்கடி கழுவ வேண்டும். கண்களுக்கு நல்ல ஓய்வு கொடுக்க வேண்டும். கண் மருத்துவரின் ஆலோசனைகளை பெற்று சொட்டு மருந்துகளை உபயோகிக்க வேண்டும். சுயமாக மருந்துகளைப் பயன்படுத்தக்கூடாது. பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய திசு காகிதம் மற்றும் கைக்குட்டையை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. கண் நோய் சரியாகும் வரை அனைவரிடமிருந்து சற்று விலகி இருக்க வேண்டும். கண்ணுக்கு யார் மருந்து போடுகிறார்களோ அவர்கள் மருந்து போடும் முன், மருந்து போட்ட பின் கைகளைச் சுத்தமாகக் கழுவிக் கொள்ள வேண்டும். நல்ல ஆரோக்கியமான நீர்ச்சத்து மிகுந்த வைட்டமின் ஏ மற்றும் சி சத்துள்ள உணவு, உறக்கம், கண்ணுக்கு ஓய்வு போன்றவை நோய்ப் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய வைக்கும் என்றும் மருத்துவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.