சென்னை நகரம் உருவானதன் 385 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா இன்று. வந்தாரை வாழவைக்கும் இந்த மாநகரம் உருவானதன் பின்னணி மிக எளிமையான, ஆனால் ஆச்சரியமளிக்கக்கூடிய விஷயம்.
ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய பல்லவ சாம்ராஜ்யத்தில் துவங்கி, இன்றைய உலகின் மிகச்சிறந்த மருத்துவச் சுற்றுலா நகரமாக இருப்பது வரை சென்னையின் பல்வேறு பரிணாமமும், பரிமாணமும் ரசிக்கத்தக்கவை; வியப்புக்குரியவை. பொதுவாக ஒரு விஷயத்தை அல்லது வரலாற்றை விவரிப்பது எனில், குறிப்பிட்ட செயலுக்கு முன், குறிப்பிட்ட செயலுக்குப் பின் எனப் பிரிப்பது வழக்கம். இவ்வகையில் சென்னையின் வரலாறு ஆங்கிலேயரின் வருகைக்கு முன், வருகைக்குப் பின் என இருவகையாகப் பார்க்கப்படுகிறது.
ஆங்கிலேயரின் வருகை
சென்னை ஒரு பெருநகராக வளர்ச்சி பெற்றது, ஐரோப்பியர்கள் குறிப்பாக ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னர்தான். ஆகவே, சென்னையின் வரலாற்றில் ஆங்கிலேயேர்கள் தவிர்க்க இயலாத இடம்பெறுகின்றனர். இன்னும் சொல்வதானால், சென்னையில் ஆங்கிலேயர்கள் என்பதே சென்னையின் வரலாறாகவும் ஆகி விட்டது. இந்தியாவில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் 1600 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியை தொடங்கினர். புதிய கம்பெனி அமைப்பதற்கு தென் பகுதியில் ஒரு இடத்தை தேடினர். இதற்காக ஆண்ட்ரூ கோகன் மற்றும் பிரான்சிஸ் டே ஆகிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
வியாபாரத்துக்காக வாங்கிய இடம்
அந்த காலத்தில், மதராசப்பட்டினத்தில் இருந்த கிராமங்கள் அனைத்தும் வெங்கடப்பா நாயக்கர், அய்யப்பா நாயக்கர் என்ற இரு சகோதரர்கள் ஆளுமையின் கீழ் இருந்தது. வந்தவாசியை தலைமையிடமாகக் கொண்டு வெங்கடப்பா நாயக்கரும், பூந்தமல்லியை தலைமையிடமாகக் கொண்டு அய்யப்பா நாயக்கரும் ஆட்சி செய்தனர். இந்த நிலையில், இருவரையும் சந்தித்த பிரான்சிஸ் டே, தங்களின் கிழக்கிந்திய கம்பெனியை தொடங்க சிறிய இடம் ஒன்று வேண்டும் என்று கேட்டார். அதன்படி, வங்கக் கடலையொட்டி 5 மைல் நீளத்துக்கும், ஒரு மைல் அகலத்துக்குமான இடத்தை ஆங்கிலேயர்களுக்கு நாயக்கர் சகோதரர்கள் இருவரும் எழுதிக் கொடுத்தனர்.
உருவான சென்னப்பட்டினம்
அதுவும், தங்களின் தந்தையின் பெயரான சென்னப்ப நாயக்கர் பெயரில் அந்த இடத்தை அழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, மதராசப் பட்டினம் சென்னப்ப நாயக்கர் பெயரில் அந்த இடத்தை அழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, மதராசப்பட்டினம் சென்னப் பட்டினமாக பெயர் மாறியது. இந்த நிகழ்வு 384 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1639 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22 ஆம் தேதி நடந்தது. சென்னை உருவாக இந்த நாள் ஒரு காரணமாக அமைந்ததால், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 22 அன்று சென்னையின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
ஆங்கிலேயர்கள் 1639 ஆம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டியதைத் தொடர்ந்து தான், ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன. சென்னையில் உள்ள மயிலாப்பூர், பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. 16 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர் 1522-ஆம் ஆண்டு சாந்தோம் (சாந்தோம் – புனித தோமஸ்) என்ற பெயரில் ஒரு துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612-ஆம் ஆண்டு டச்சு நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது.
இந்தியாவின் முதல் மாநகராட்சி
முன்னதாக 1522-ஆம் ஆண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி, போர்த்துக்கீசியர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612-ஆம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது. 1688-ஆம் ஆண்டில், சென்னை, முதல் நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையைச் சென்னை பெற்றது.
‘சென்னை தினம்’ கொண்டாட்டம்
அதன்பிறகு பிரிட்டிஷ் அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட 4 இந்திய குடியிருப்பு பகுதிகளை இணைத்து “மெட்ராஸ் மாகாணம்” உருவாக்கப்பட்டு, பின்னர் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோது மெட்ராஸ் மாகாணம் தனி மாநிலம் ஆனது. அதன் பின்னர் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, மெட்ராஸ் மாகாணம் 1969 ஆம் ஆண்டு அண்ணா முதலமைச்சராக பதவியேற்ற உடன், ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றப்பட்டது. அதன் தலைநகரமாக திகழ்ந்த மெட்ராஸ், 1996 ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது ‘சென்னை’ என பெயர் மாற்றப்பட்டு, தற்போது ஒவ்வொரு ஆண்டும் ‘சென்னை தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை தினத்தை கொண்டாடும் பழக்கம் கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கியது. பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சன்ட் டிசோசா, மெட்ராஸ் மியூசிக்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம். முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் தொடங்கிய இந்தக் கொண்டாட்டம், இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா, மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
வேர்களையும் மரபுகளையும் விட்டுவிடாத சென்னை
இன்றைய நவீன சென்னை, உயர்ந்து நிற்கும் கட்டடம், பூமியை துளைத்து ஓடும் மெட்ரோ ரயில், ஊரைச் சுற்றி கார் தொழிற்சாலைகள், ஐடி கம்பெனிகள், இந்தியாவின் மருத்துவ தலைநகரம் எனப் பல பெருமைகளுடன் வளர்ந்த நகரமாக காட்சி அளிக்கின்றபோதிலும், அதன் வேர்களையும் மரபுகளையும் தொடர்ந்து நிலைநிறுத்திக்கொண்டே தான் இத்தகைய வளர்ச்சியை எட்டியுள்ளது. நகரின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அதன் பண்பாடுகளின் கலவையை நினைவூட்டும் வகையில் ஏதாவது ஒரு வரலாற்றுச் சின்னமோ அடையாளமோ ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது.