Amazing Tamilnadu – Tamil News Updates

வயநாடு நிலச்சரிவுக்கு 3 முக்கிய காரணங்கள்… விவரிக்கும் சூழலியலாளர்கள்!

கேரள மாநிலம், வயநாட்டில் நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். 500 பேரின் கதி என்ன என்பது தெரியாத நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவு சம்பவம், சமீபத்திய ஆண்டுகளில் கேரளாவில் ஏற்பட்ட மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நிலச்சரிவுக்குப் பின்னால் மிகக் கடுமையான மழை, பலவீனமான சூழலியல், தொடர்ந்து அதிகரித்த மக்கள் தொகை ஆகிய 3 முக்கிய காரணங்களை சூழலியலாளர்கள் முன்வைக்கின்றனர்.

2018 ஆம் ஆண்டை நினைவூட்டிய நிகழ்வு

உயிரிழப்புகளின் அடிப்படையில் பார்த்தால், கேரளாவில் இதுவரை ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பான மிகப்பெரிய பேரழிவாக தற்போதைய நிகழ்வு பார்க்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பலத்த மழைக்கு மத்தியில் நேற்று ( செவ்வாய்கிழமை ) அதிகாலையில் நிகழ்ந்த இந்த சம்பவம், 2018 ஆம் ஆண்டு பெய்த கனமழையால் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தையும் அதில், சுமார் 500 பேர் வரை உயிரிழந்த நிகழ்வையும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.

திங்கள் முதல் செவ்வாய் வரையிலான 24 மணி நேரத்தில், வயநாடு மாவட்டத்தில் 140 மிமீ மழை பெய்துள்ளது. இது, எதிர்பார்த்ததை விட ஐந்து மடங்கு அதிகமாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில், வயநாடு மாவட்டத்தில் பல பகுதிகளில் 300 மி.மீ க்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது.

நிலச்சரிவுக்கான காரணங்கள் என்ன?

கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக் காலத்தில் கனமழையால் நிலச்சரிவு ஏற்படுகிறது. கூர்மையான சரிவுகளைக் கொண்ட மலைப்பாங்கான மேற்கு கேரளா முழுவதும் நிலச்சரிவுகளுக்கு ஆளாகிறது. 2018 ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கின் போதும் அதற்குப் பின்னரும், வயநாடு உட்பட இப்பகுதிகளில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. 2019 ஆம் ஆண்டில் கூட வயநாடு மாவட்டத்தில் சில சிறிய நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

“இங்குள்ள நிலப்பரப்பில் கடினமான பாறைகளின் மேல் இரண்டு தனித்துவமான செம்மண் அடுக்குகள் உள்ளன. அதிக மழை பெய்யும்போது, ​​​​மண் ஈரப்பதமாகி குழைவான நிலைக்குச் சென்றுவிடும் என்பதால், தொடர்ந்து வரும் மழை நீர் மண் மற்றும் பாறை அடுக்குகளுக்கு இடையில் பாய்கிறது. இது பாறைகளுடன் மண்ணை இறுகப்பிடிக்கும் சக்தியை பலவீனப்படுத்துவதால், நிலச்சரிவை தாங்கும் திறனை மண் இழந்துவிடுகிறது. இப்படியான நிலையில் அதிக மழை பெய்யும்போதுதான், இதுபோன்ற நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. தற்போதும் அதுதான் நிகழ்ந்திருக்கின்றது” என்கிறார்கள் புவியலாளர்கள்.

மேலும்,

“ஒட்டுமொத்த வயநாடு மற்றும் குறிப்பாக தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட வைத்திரி தாலுகாவில் கடந்த 20 ஆண்டுகளில் மக்கள் தொகை அதிக அளவில் குடியேற்றம், சுற்றுலா பயணிகள் வருகை, ரிசார்ட்டுகள் , விடுதிகள் அதிகரிப்பு போன்றவற்றினால் நிலப்பயன்பாடு அதிகளவில் மாற்றமடைந்துள்ளது. குறிப்பாக இயற்கையாக அமைந்த மலைச்சரிவுகள் மற்றும் மலைமுகடுகளைத் தோண்டி, பிளந்து கட்டடங்களை எழுப்பி, அப்பகுதியின் நில அமைப்பியலே மாற்றப்பட்டுவிட்டது. பெரும் அளவில் மரங்கள் வெட்டப்பட்டதன் விளைவாக மணலை இறுகப்பிடிக்கும் வேர்கள் இல்லாததன் காரணமாக, நிலச்சரிவை தாங்கும் திறனை மண் இழந்திருக்கிறது” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

காற்றில் பறந்த விதிமுறைகள்

கேரளாவில் கிட்டத்தட்ட 17,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களாக கணிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குப் பகுதியில் உள்ளன.

“இந்தப் பகுதிகளில் நிலத்தைப் பயன்படுத்துவதில் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். பயிரிடுதல் போன்ற நடவடிக்கைகளை இங்கு அனுமதிக்க முடியாது. அதே சமயம் பயிரிடுதல் தான் நிலச்சரிவுக்கு தூண்டுதலாக அமைகிறது என உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், இங்கு அது தொடர்பான உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். மேலும், இப்பகுதிகளில் பொதுவாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் செயல்படுத்தப்படவில்லை என்பதை உறுதியாக கூற முடியும்” என்கிறார்கள் சூழலியல் விஞ்ஞானிகள்.

முன்னரே எச்சரித்த நிபுணர்கள்

மேலும், வயநாடு மாவட்டத்தில் தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ள வைத்திரி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் இப்படி ஒரு விபத்து நடக்கும் என்பதை நிபுணர்கள் பலரும் தொடர்ச்சியாக எச்சரித்து வந்தனர். ஆனாலும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் போனதால், இத்தகைய துயரை மக்கள் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று என்பது தான் இதில் பெரும் சோகம்!

நிலம் வலுவிழப்பதைக் காடழிப்புடனும், நிலச்சரிவைப் பெருமழையுடனும், பெருமழையைக் காலநிலை மாற்றத்துடனும் தொடர்புபடுத்திப் பார்க்க நாம் தவறினால் இப்பேரழிவுகளைத் தடுக்க முடியாது என்பதே சூழலியலாளர்களின் எச்சரிக்கையாக உள்ளது.

Exit mobile version