Amazing Tamilnadu – Tamil News Updates

வயநாடு நிலச்சரிவு: 18 மணி நேரத்தில் உருவான பாலம்… வியக்க வைத்த மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர்கள்… தலைமை தாங்கிய ராணுவ பெண் மேஜர் சீதா ஷெல்கே!

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் அமைந்துள்ள சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகள், நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 330 ஐ தாண்டியுள்ளது. 295 க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப்படை, தீயணைப்புப் படை வனத்துறை, காவல்துறை, தன்னார்வலர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை முன்கூட்டியே நிறுத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள்,
இன்று காலை நான்காவது நாளாக மீண்டும் தொடங்கியது.

நம்பிக்கை ஏற்படுத்திய ராணுவத்தினரின் மீட்பு நடவடிக்கை

ராணுவத்தினரின் மீட்பு நடவடிக்கையில் மாயமானவர்களை மீட்க தெர்மல் ஸ்கேனர் தொழில்நுட்பம் மூலம் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதன் பலனாக, சூரல்மலை, படவெட்டிக்குன்னு என்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அவர்களது வீட்டில் உயிருடன், காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதனால், நிலச்சரிவில் சிக்கி இன்னும் உயிருடன் புதையுண்டு கிடப்பவர்களை மீட்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே வயநாட்டில் சூரல்மலை, முண்டகை கிராமங்களை இணைக்கும் வகையில், சூரல்மலையில் உள்ள ஆற்றின் குறுக்கே இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. மேலும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும், கொட்டும் மழைக்கு மத்தியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர் கயிறு கட்டி ஆற்றை கடந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சூழல்மலை-முண்டகை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மீட்பு பணியை துரிதப்படுத்தும் வகையில் ஆற்றின் குறுக்கே பெய்லி பாலம் அமைப்பதற்காக, ராணுவத்தின் பொறியியல் பிரிவினர் வரவழைக்கப்பட்டனர்.

18 மணி நேரத்தில் உருவான பாலம்

பெய்லி பாலத்திற்கு தேவையான உபகரணங்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கண்ணூர் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ராணுவ வாகனங்கள் மூலம் கண்ணூர் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ராணுவ வாகனங்கள் மூலம் சூரல்மலை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இரவு, பகலாக மழையை பொருட்படுத்தாமல் ஆற்றுக்குள் இறங்கி தற்காலிக இரும்பு பாலத்தை அமைக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர். 18 மணி நேரத்தில் இந்த பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்தது.

வியக்க வைத்த மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர்கள்

மீட்பு பணிக்காக இந்திய ராணுவத்தின் பெண் மேஜர் சீதா ஷெல்கே தலைமையிலான 144 பேர் கொண்ட இன்ஜினியரிங் வீரர்களைக் கொண்ட குழு இந்த பாலத்தை உருவாக்கியது. இவர்கள் அனைவரும் மெட்ராஸ் ரெஜிமென்டின் (Madras Engineering Group – MEG) வீரர்கள் ஆவர். இதன் நீளம் 190 அடியாகும். இந்த பாலம் 24 டன் வரை எடையை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டது. இதன் மூலம் சூரல்மலை-முண்டகை இடையே மீட்பு பணிக்காக வாகனங்கள் சென்று வருகின்றன.

யார் இந்த பெண் மேஜர் சீதா ஷெல்கே?

இந்த பாலம் கட்டும் பணிக்கு தலைமை தாங்கிய ராணுவ பெண் மேஜர் சீதா ஷெல்கே, பெங்களூருவில் உள்ள மெட்ராஸ் இன்ஜினியரிங் குரூப் (MEG) மற்றும் மையத்தின் ராணுவப் பொறியாளர் ஆவார். மகாராஷ்டிரா மாநிலம், அகமதுநகரில் உள்ள காதில்காவ் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.

35 வயதாகும் சீதா ஷெல்கே, இந்த பாலம் அமைத்தது குறித்து கூறுகையில், ” எங்களின் ஒரே கவனம் பாலத்தை விரைவாக கட்டி முடிப்பதிலேயே இருந்தது. இதை செய்து முடிப்பதில் பல சவால்கள் இருந்தன. இதுபோன்ற பேரிடர் தருணங்களை எதிர்கொள்ள நாங்கள் பயிற்சி பெற்றுள்ளோம். உள்ளூர் அதிகாரிகள் மற்றும் கிராம மக்களிடமிருந்து எங்களுக்கு கிடைத்த உதவி மற்றும் ஆதரவு மகத்தானது. தன்னார்வலர்களும் எங்களுக்கு எல்லா வழிகளிலும் உதவினார்கள்” என்றார்.

தனது மூன்றாவது முயற்சியில் SSB தேர்வில் தேர்ச்சி பெற்ற சீதா, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தபோதும் ராணுவத்தில் பணியாற்றவே விருப்பம் கொண்டு, அதையே தனது வாழ்க்கையாக ஆக்கிக்கொண்டார். 2015 ல் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை நிலச்சரிவால் தடைபட்டபோது, அதை சரி செய்ய அனுப்பப்பட்ட ராணுவ பொறியியல் குழுவில் சீதாவும் இடம்பெற்றிருந்தார். அதைத் தொடர்ந்த இதுபோன்ற அனுபவங்களும், அர்ப்பணிப்பான உழைப்பும்தான், அவரை ராணுவத்தில் மேஜர் அந்தஸ்துக்கு உயர்த்தி, இன்று மீட்புக் குழுவுக்கு தலைமை தாங்க வைத்துள்ளது.

Exit mobile version