கேரள மாநிலம், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 350 ஐ தாண்டிய நிலையில், இதுவரை 341 உடல்களுக்கு பிரேத பரிசோதனைகள் முடிக்கப்பட்டுள்ளன. 146 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 250 -க்கும் அதிகமானோரை காணவில்லை.
காணாமல் போன 250-க்கும் மேற்பட்டவர்களில் பலர் 3 கிராமங்களில் மண்ணுக்கு அடியில் புதைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களின் உடல்களை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்காக ட்ரோன்கள் மூலம் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த புகைப்படங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள 640 குழுக்களிடமும் வழங்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் 6 மண்டலங்களாக பிரிந்து காணாமல் போனவர்களைத் தேடி வருகிறார்கள். மாயமானவர்களின் செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த செல்போன் எண்களை இயக்கி ஜி.பி.எஸ். சிக்னல் மூலம் அவர்களது கடைசி இருப்பிடத்தை கண்டறிய முயற்சி நடக்கிறது. ஒருவேளை அவர்கள் ஆழமான பகுதியில் மணலில் புதைந்து கிடந்தாலும், அதை உறுதிப்படுத்த முடியும். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் வசித்தவர்களில் கணிசமானவர்கள், சாலியாறு பாய்ந்தோடும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். சாலியாறு சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்கிறது. அந்த ஆற்றின் கரையோரங்களில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
24 தமிழர்கள் பலி
இந்த நிலையில், உயிரிழந்தோரில் 24 தமிழர்கள் எனத் தெரிய வந்துள்ளது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பலர் வயநாட்டில் நிரந்தரமாக தங்கி வேலை செய்து வருகிறார்கள். பலர் வேலை நிமித்தமாக சென்று தற்காலிகமாக குடியேறியுள்ளனர்.
இவர்களில் நிரந்தரமாக அங்கு குடியேறிய தமிழர்கள் 21 பேரும், வேலைக்கு சென்று தங்கிய காளிதாஸ், கல்யாண், சிராபுதீன் ஆகிய 3 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் மூலம் வயநாடு நிலச்சரிவு துயர நிகழ்வில், தமிழகத்தை சேர்ந்த 24 பேர் பலியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சமீரன் தலைமையிலான மீட்பு குழுவினர் வயநாடு சென்று அங்கு பாதிப்புக்குள்ளான தமிழர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறார்கள். இதில்தான் 24 தமிழர்கள் உயிரிழந்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது.
25 தமிழர்கள் மாயம்
மேலும், நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களில் தமிழகத்தை சேர்ந்த 25 பேர் மாயமாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களில் நிரந்தரமாக வயநாட்டில் தங்கியவர்கள் 22 பேர் ஆவர். வேலைக்காக சென்ற 3 பேரும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயிருக்கிறார்கள். இவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், முகாம்களில் 130 தமிழர்கள் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து பிழைப்புத் தேடி வயநாடு சென்றவர்களுக்கு நேர்ந்துள்ள இந்த துயரம், அவர்களது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.