Amazing Tamilnadu – Tamil News Updates

‘கச்சத்தீவை மீட்க வேண்டும்’: சட்டமன்ற தீர்மானத்தால் மத்திய அரசுக்கு அழுத்தம்!

மிழ்நாட்டு மீனவர்களின் நீண்டகால பிரச்னையான கச்சத்தீவு விவகாரம் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழக சட்டப் பேரவையில், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த அரசின் தனித் தீர்மானம், பாஜக உட்பட அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இது தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுக்கவும், இலங்கை கடற்படையால் ஏற்படும் இன்னல்களுக்கு நிரந்தர தீர்வு காணவும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

தீர்மானத்தின் பின்னணி

கச்சத்தீவு, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பாக் ஜலசந்தியில் அமைந்துள்ள சிறிய தீவு ஆகும். 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் இந்தியா-இலங்கை இடையேயான ஒப்பந்தங்களின் மூலம் இது இலங்கைக்கு வழங்கப்பட்டது. இதனால், தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளை இழந்தனர். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது மற்றும் தாக்குதல்கள் நடப்பது வழக்கமாகிவிட்டது. இதற்கு நிரந்தர தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது தமிழக அரசின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

தமிழ்க சட்டமன்றத்தில் இன்று இது தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கையில் ஆட்சி மாறினாலும் தமிழக மீனவர்களின் நிலை மாறவில்லை என்று குறிப்பிட்டார். “கச்சத்தீவை மாநில அரசு தாரை வார்த்ததாக தவறான பிரச்சாரம் செய்யப்படுகிறது. 1974 ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். நாடாளுமன்றத்திலும் திமுக தொடர்ந்து குரல் எழுப்பியது,” என்று அவர் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் இதற்காக தீர்மானங்கள் நிறைவேற்றியதை அவர் நினைவுகூர்ந்தார்.

“மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இலங்கை கடற்படை நாளொன்றுக்கு சராசரியாக இரண்டு மீனவர்களை கைது செய்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவை மீட்பதே ஆகும்,” என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு செல்லும்போது, அந்நாட்டு சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். “தமிழக மீனவர்களைப் போல மற்ற மாநில மீனவர்கள் கைது செய்யப்பட்டால் மத்திய அரசு பார்த்துக்கொண்டு இருக்குமா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

‘கச்சத்தீவை மீட்க வேண்டும்’

இந்த தனித் தீர்மானம், 1974 மற்றும் 1976 ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவை மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பதற்கும், இலங்கை கடற்படையின் அத்துமீறல்களை தடுப்பதற்கும் இது அவசியம் என்பதை தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது. சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்து, ஒருமனதாக நிறைவேற்றியது இதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

மத்திய அரசுக்கு அழுத்தம்

கச்சத்தீவு விவகாரம் சமீப காலமாக மீண்டும் பேசுபொருளாகி உள்ளது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாஜக இதை திமுக மற்றும் காங்கிரஸ் மீது பழி சுமத்தி அரசியல் ஆயுதமாக பயன்படுத்தியது. ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த 10 ஆண்டுகளில் மீனவர் கைதுகள் மற்றும் தாக்குதல்கள் அதிகரித்தபோது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று விமர்சித்தார். தற்போது கச்சத்தீவை மீட்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து, இந்த விவகாரம் தேசிய அளவில் விவாதத்திற்கு வந்துள்ளது.

மேலும், பிரதமர் மோடி விரைவில் இலங்கை செல்ல உள்ள நிலையில், அந்த நாட்டுடன் இது தொடர்பாக பேச இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் ஒருமித்த குரல் எழுப்பியிருப்பது, இவ்விவகாரத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது.

Exit mobile version