Amazing Tamilnadu – Tamil News Updates

கருணாநிதியின் அனைத்து நூல்களும் நாட்டுடைமையாக்கம்… இலவச டவுன் லோடுக்கான இணையதள முகவரி!

றைந்த தமிழறிஞர்களின் நினைவைப் போற்றும் வகையிலும் அவர்களின் படைப்புகள் பாரெங்கும் பவனி வரவேண்டும்; எளிய வகையில் அனைவரையும் சென்றடைய வேண்டும் எனும் நோக்கிலும் அவர்களின் நூல்கள் அனைத்தையும் தமிழக அரசு நாட்டுடைமையாக்கி வருகிறது. இதன்படி, தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையருக்குப் நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் அனைத்து நூல்களும், நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அனார்கலி, உதய சூரியன், உன்னைத்தான் தம்பி, இளைஞன் குரல், ஒரே முத்தம், காகிதப்பூ, சாக்ரடிஸ், சாம்ராட் அசோகன், சிலப்பதிகாரம் – நாடகக் காப்பியம், சேரன் செங்குட்டு வன், திருவாளர் தேசியம் பிள்ளை, தூக்குமேடை, நச்சுக் கோப்பை, நான்மணிமாலை, நானே அறிவாளி, புனித ராஜ்ஜியம், மணிமகுடம், மகான் பெற்ற மகன் (அம்மையப்பன்), மந்திரி குமாரி உள்ளிட்ட பல்வேறு நாடகங்களை கலைஞர் எழுதியுள்ளார்.

வெள்ளிக்கிழமை, சுருளிமலை, வான்கோழி, புதையல், ஒரே ரத்தம், ஒரு மரம் பூத்தது, அரும்பு, பெரிய இடத்துப் பெண், சாரப்பள்ளம் சாமுண்டி, நடுத்தெரு நாராயணி ஆகிய புதினங் களையும்; ரோமாபுரிப் பாண்டியன், பொன்னர் – சங்கர் அண்ணன்மார் வரலாறு, பாயும் புலி பண்டாரக வன்னியன், தென்பாண்டிச் சிங்கம், தாய் – காவியம் ஆகிய வரலாற்றுப் புதினங் களையும்; சங்கிலிச் சாமியார், கிழவன் கனவு, பிள்ளையோ பிள்ளை, தப்பி விட்டார்கள், தாய்மை, நாடும் நாடகமும், முடியாத தொடர்கதை, பதினாறு கதையினிலே, நளாயினி, பழக்கூடை, தேனலைகள், ஒருமரம் பூத்தது, மு.க.வின் சிறுகதைகள் உள்ளிட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

கவிதையல்ல, முத்தாரம் (சிறை யில் எழுதிய கவி வசனங்கள் தொகுப்பு), அண்ணா கவியரங்கம், Pearls (Trans lation), கவியரங்கில் கலைஞர், கலைஞரின் கவிதைகள், வாழ்வெனும் பாதையில், கலைஞரின் திரை இசைப் பாடல்கள், கலைஞரின் கவிதை மழை, காலப் பேழையும் கவிதைச் சாவியும் உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளும் அவரது கவித்திறமையை வெளிப்படுத்துவன.

கலைஞரின் குறளோவியம் மிகவும் புகழ்பெற்ற நூல்; தேனலைகள், சங்கத் தமிழ், திருக்குறள் கலைஞர் உரை, தொல்காப்பியப் பூங்கா உள்ளிட்ட தமிழறிஞர்கள் போற்றும் உரை நூல்களையும் கலைஞர் படைத்துள்ளார். உடன்பிறப்புகளுக்குக் கலைஞர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு, 54 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. ‘நெஞ்சுக்கு நீதி’ என்னும் அவரது வாழ்க்கை வரலாற்று நூல் 6 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. 1957 முதல் 2018-ம் ஆண்டுவரை கருணாநிதி சட்ட மன்றத்தில் ஆற்றிய உரைகள் 12 தொகுதி களாக வெளிவந்துள்ளன.

இவ்வாறு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழினத் தலைவர் கருணாநிதியின் அனைத்து நூல்களும் நாட்டுடை மையாக்கம் செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்தில் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் அவரின் செழுமையான நூல்களை ஊன்றிப் படிக்க அரியதொரு வாய்ப்பாக அமையும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இலவச டவுன் லோடுக்கான இணையதள முகவரி

தமிழறிஞர்களின் நூல்களில் காணப்படும் நுண்ணிய கருத்துகள் உலகமெங்கும் உலாவந்து அங்கு வாழும் மக்களைச் சென்றடைய வேண்டும் எனும் நோக்கில் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் இணைய தளத்தில் வெளியிடப்படுதல் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

தமிழறிஞர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களிலிருந்து இதுவரை 2188 நூல்கள் உருப்படம் ( PDF) செய்யப்பட்டு, தமிழ் வளர்ச்சித் துறையின் வலை தளத்திலும் (www.tamilvalarchithurai.org மற்றும் www.tamilvalarchithurai.com) தமிழ் இணையக் கல்விக் கழக வலைத்தளத்திலும் (www.tamilvu.org) வெளியிடப்பட்டுள்ளன. தற்போது கலைஞர் கருணாநிதி நூல்கள் உட்படஇவற்றை இலவசமாக DOWNLOAD செய்து படிக்கலாம்.

நாட்டுடைமையாக்கப்பட்டுவிட்ட எழுத்தாளர்களின் நூல்களை யார் வேண்டுமானலும் பதிப்பிக்கலாம் யாருக்குக்கும் காப்புரிமை தொகை கொடுக்க தேவையில்லை. இது வரை 150 க்கு மேற்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன அவர்களின் சிலர் சுப்பிரமணிய பாரதி, ம.பொ.சிவஞானம்,பாரதிதாசன்,அண்ணாத்துரை,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தேவநேயப் பாவாணர், மறைமலையடிகள், கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்றோர்கள் முக்கியமானவர்கள் ஆவார்கள்.

Exit mobile version