வள்ளுவர் சிலை வெள்ளி விழா… நகராட்சியாகும் கன்னியாகுமரி… முதல்வரின் 6 அறிவிப்புகள்!

லகப் பொது மறையாம் திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் புகழ் சேர்த்திடும் வகையில், முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையில் உள்ள பாறையில் திருவள்ளுவர் சிலையை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி கடந்த 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி திறந்து வைத்தார்.

திருக்குறளில் உள்ள அதிகாரங்களைக் குறிக்கின்ற வகையில் 133 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. இச்சிலை திறக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, திருக்குறளை வழங்கிய திருவள்ளுவரை இளந்தலைமுறைத் தமிழர்களும் போற்றிடும் வகையில் சிலையின் வெள்ளிவிழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் கன்னியாகுமரியில் டிசம்பர் 30 தொடங்கி, டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கிறது.

பேரறிவுச் சிலையும் கண்ணாடி இழைப் பாலமும்

நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் படகு மூலம் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள இடத்துக்கு சென்று, திருவள்ளுவர் திருவுருவச் சிலையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள “பேரறிவுச் சிலை” (Statue of Wisdom)அலங்கார வளைவினைத் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தை திறந்து வைத்து, திருவள்ளுவர் சிலையிலிருந்து விவேகானந்தர் பாறைக்கு இப்பாலத்தின் வழியாக நடந்து சென்று பார்வையிட்டார். பின்னர், திருவள்ளுவர் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் திருவுருவப் படத்துக்கும், திருவள்ளுவர் திருவுருவச் சிலையின் பாதங்களுக்கும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, திருக்குறள் நெறி பரப்பும் 22 தகைமையாளர்களுக்குச் சிறப்புப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, சுகி.சிவம் தலைமையில் ‘திருக்குறளால் அதிக நன்மை தனிமனிதருக்கே – சமுதாயத்திற்கே’ எனும் தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் ஆகியவை நடைபெற்றது.

வெள்ளி விழா சிறப்பு மலர்

இன்று 2 ஆவது நாள் விழாவில் திருக்குறள் ஓலைச்சுவடிகள், புத்தகங்கள், மின்நூல்கள் மற்றும் திருவள்ளுவர் சிலை பற்றிய புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து, பார்வையிட்டார். மேலும், திருவள்ளுவர் தோரண வாயிலுக்கும் அடிக்கல் நாட்டியதோடு, திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, வெள்ளி விழா சிறப்பு மலரையும் வெளியிட்டார்.

முதல்வர் வெளியிட்ட 6 அறிவிப்புகள்…

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் பெருமை சேர்க்கும் விதமான சில அறிவிப்புகளை வெளியிட்டார். அவை இங்கே…

சுற்றுலாப் பயணிகள் திருவள்ளுவர் சிலையை சென்றடைய படகு சவாரி வசதியை மேம்படுத்துவதற்காக 3 புதிய பயணிகள் படகுகள் வாங்கப்படும்.

முதல் படகிற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரும், இரண்டாம் படகிற்கு மார்சல் நேசமணி பெயரும், மூன்றாம் படகிற்கு திருக்குறளை மொழிப் பெயர்த்தும், தமிழ் இலக்கண நூலை எழுதியும், அழியாப் படைப்புகளை அளித்த ஜி.யு.போப் பெயரும் சூட்டப்படும்.

வ்வொரு மாவட்டத்துக்கும் திருக்குறளில் ஆர்வமும், புலமையும் மிக்க ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சி வழங்கி மாவட்டம்தோறும் தொடர் பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

‘திருக்குறள் திருப்பணிகள்’ தொடர்ந்து நடைபெற திட்டம் வகுக்கப்படும். இதற்காக, ஆண்டிற்கு மாவட்டம் ஒன்றிற்கு மூன்று இலட்சம் ரூபாய் வழங்கப்படும். ஆண்டுக்கு 133 உயர்கல்வி நிறுவனங்களில், திருக்குறள் தொடர்பான கலை இலக்கிய அறிவுசார் போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்த திட்டமிடப்படும்.

வ்வொரு ஆண்டும் டிசம்பர் கடைசி வாரம் ‘குறள் வாரம்’ கொண்டாடப்படும். தமிழ்த் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான திருக்குறள் மாணவர் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படும்.திருக்குறளும், உரையும் அரசு அலுவலகங்களில் எழுதப்படுகிறது போல, தனியார் நிறுவனங்களிலும் எழுதுவதற்கு, ஊக்குவிக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

நகராட்சியாகும் கன்னியாகுமரி பேரூராட்சி

சிலையால் சிறப்பு பெற்றிருக்கின்ற குமரிக்கு, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்ற வகையில், கன்னியாகுமரி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Namo bharat train : faster and eco friendly travel in india. Russia sentences alsu kurmasheva, american editor, to a penal colony facefam. 최신 온라인 슬롯.