Amazing Tamilnadu – Tamil News Updates

‘கங்குவா’ விமர்சனம்: சூர்யாவின் இதுவரை கண்டிராத அனுபவமா?

சூர்யாவும், இயக்குநர் சிறுத்தை சிவாவும் இணைந்து தமிழில் பாகுபலி அல்லது கேஜிஎப் போன்றதொரு ஆக்‌ஷன் கலந்த பேண்டஸி த்ரில்லர் படமாக ‘கங்குவா’ வை கொடுக்க முயன்றிருக்கிறார்கள்.

350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் ‘கங்குவா’, ரசிகர்களுக்கு இதுவரை கண்டிராத அனுபவமாக இருக்கும் என படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் உறுதி அளித்து இருந்தார் சூர்யா. அப்படி ஒரு அனுபவத்தைக் கொடுத்துள்ளதா கங்குவா? பார்க்கலாம்…

2024 ஆண்டுக் கால சூர்யா, 1070 ஆம் ஆண்டுக் கால சூர்யா என நாயகனுக்கு இரு வேடம். இரு நூற்றாண்டுகளையும் மாறி மாறி காட்டுகிறார்கள். தற்போதைய காலகட்டத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் பணத்திற்காகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் ஒரு ‘பவுன்ட்டி ஹன்டர்’ . 1070 இல் இருக்கும் சூர்யா ஒரு பழங்குடியின போர்வீரன். பிரான்சிஸுக்கு, ஒரு சிறுவன் மூலம் கடந்த காலம் பற்றிய நினைவு வருகிறது.

கடந்த காலத்தில் பெருமாச்சி எனும் பழங்குடி கிராமத்தின் தலைவராக இருக்கிறார் கங்குவா. அந்தக் கிராமத்திற்கு அவர்களை ஆள வேண்டும் என நினைக்கும் ரோமானியர்களிடம் இருந்து ஆபத்து வருகிறது. ரோமானியர்கள் மட்டுமின்றி மற்றோர் இனக்குழுவின் தலைவரான உதிரனிடம் இருந்தும் (பாபி தியோல்) ஆபத்து வருகிறது. இது கங்குவா – உதிரனுக்கு இடையிலான போராக மாறுகிறது. உதிரன், பெருமாச்சி கிராமத்தின் மீது போர் தொடுக்க காரணம் என்ன? அப்பாவைக் கொன்ற கங்குவாவைக் கொல்லத் துடிக்கும் கொடுவாவின் பகை என்ன ஆனது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே படத்தின் கதை.

கடந்த காலத்தில் நிகழும் காட்சிகள் கற்பனை திறத்துடன் எடுக்கப்பட்டிருந்தாலும், அதை இன்னும் கவனமாகக் கையாண்டிருக்கலாம். உதாரணமாக, போர் அறிவிக்கப்பட்ட பின் சூர்யா சிறிது காலம் நாடு கடத்தப்படுகிறார். அங்கு சிறுவனுடன் மீண்டும் இணையும்போது பாடல் வருகிறது. இப்போது அவர்களுக்கு இடையிலான பிணைப்பு கதையின் மையமாக இருக்கிறது. இருவரின் காட்சிகளும் எங்கெங்கோ கதையில் செருகப்பட்டிருப்பதால், அவர்களுடன் உணர்வுப்பூர்வமாக இணையும் வாய்ப்பு பார்வையாளர்களுக்குக் கிடைக்கவில்லை.

நடனம், சடங்குகள், போருக்கு முன்பு வேண்டுதலின்போது ஆயுதங்களை வைக்காத பழக்கம், இருமுனை கொண்ட ஆயுதங்கள் என, அந்தக் கிராமத்தின் கலாசாரங்களைப் புரிந்துகொள்வதற்கு உதவ படக் குழுவினர் முக்கியத்துவம் அளித்துள்ளனர். ஆனால், அத்தனை ஈர்ப்பு இல்லை. போஸ் வெங்கட் நரித்தனமான கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கே.எஸ்.ரவிக்குமார், கோவை சரளா ஆகியோரின் நகைச்சுவை முயற்சியில் ஈர்ப்பில்லை. தேவி ஶ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையில் இரைச்சல் அதிகம்.

சூர்யாவில் தொடங்கி ரெடின் கிங்ஸ்லி முதல் பாபி தியோல் வரை ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசும் ஒலியின் டெசிபல் அளவும் மிக அதிகமாக உள்ளது. அதற்கு மேல் அமைதியான காட்சிக்காக ரசிகனை ஏங்க வைத்துவிடுகிறார் தேவி ஸ்ரீ பிரசாத். பின்னணி இசையில் அவ்வளவு இரைச்சல்.

இவையெல்லவற்றையும் விட இயக்குநர் சிவாவின் திரைக்கதை சிக்கலானதாகவும் குழப்பமானதாகவும் இருப்பது தான் பலவீனம். சிவாவுக்கு இந்த படம் ஒரு லட்சிய முயற்சி. வணிக சினிமாவின் எல்லைக்குள் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் கலக்கும் அவரது யோசனை அவரது திறமைக்கு சான்று தான். என்றாலும், அந்த யோசனையின் திரை வடிவமும், கதையின் போக்கும், காட்சிகளின் நகர்வும் பார்வையாளர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது

அதே சமயத்தில், கங்குவா, பிரான்சிஸ் என இரு வேடங்களில் வித்தியாசம் காட்டும் சூர்யாவின் நடிப்பு திறன் பார்வையாளர்களை ஈர்க்கிறது எனலாம். போர் வீரனாக ஆக்ரோஷம் பொங்கச் சண்டை செய்வது, எதற்கும் அசராமல் துணிச்சல் காட்டும் உடல் மொழியால் மிரட்டுகிறார் சூர்யா. வெற்றியின் கேமரா ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

Exit mobile version