Amazing Tamilnadu – Tamil News Updates

கமல் 70: உலக நாயகனின் அறுபதாண்டு பயணம்… சுவாரஸ்ய தகவல்கள்!

லக நாயகன் கமல்ஹாசனுக்கு இன்று ( நவ. 7 ) 70 வயதாகிறது. 60 ஆண்டுகளுக்கும் மேலான திரை வாழ்க்கையுடன், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறமைகளால் பார்வையாளர்களை வசீகரித்தவர் கமல். திரைப்படத்துறையில் அவரது அசாதாரண பயணத்தின் சில சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே…

அற்புதமான தொடக்கம்

கமல்ஹாசன் தனது ஆறாவது வயதில் “களத்தூர் கண்ணம்மா’ (1960) என்ற தமிழ்த் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் அறிமுகமானார். அந்த படத்தில் வெளிப்படுத்திய சிறந்த நடிப்புக்காக ஜனாதிபதியிடமிருந்து தங்கப் பதக்கத்தை பெற்றார். தொடர்ந்து பல படங்களில் நடித்துக்கொண்டிருந்த நிலையில், அவரது முன் பற்கள் இரண்டு விழுந்துவிட்டது. இதனால், ​​​​குழந்தை நட்சத்திரத்துக்கான வசீகரம் குறைந்ததால், தனது மார்க்கெட் திடீரென முடிவுக்கு வந்ததாக பின்னாளில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் கமல்.

பன்மொழி கலைஞர்

கமல்ஹாசன் நடிப்பில் மட்டுமின்றி மொழிகளிலும் பன்முகத் திறமைக்கு பெயர் பெற்றவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விருதுகள்

கமல்ஹாசனின் திறமைக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த நடிகருக்கான நான்கு தேசிய திரைப்பட விருதுகளையும், ஐந்து வெவ்வேறு மொழிகளில் பத்தொன்பது ‘பிலிம்பேர்’ விருதுகளையும் வென்றுள்ளார். 2000 ஆம் ஆண்டில், புதிய திறமைசாலி நடிகர்களை ஊக்குவிப்பதற்காக, எதிர்கால விருதுப் பரிந்துரைகளில் இருந்து தனது பெயரை நீக்குமாறு பிலிம்பேர் பத்திரிகையிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

1990 ஆம் ஆண்டில், கமல்ஹாசனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது, மேலும் 2014 ஆம் ஆண்டில், இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரித்து, இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது.

இந்திய அளவில் தடம் பதித்தவர்

புதுமை முயற்சிகளில் தீரா தாகம் கொண்ட கமல்ஹாசன் அடிக்கடி தனது வித்தியாசமான மற்றும் சர்ச்சைக்குரிய படங்களின் மூலம் இந்திய சினிமாவை அதன் புதிய எல்லைகளைத் தள்ளியதில் முக்கிய பங்காற்றியவர். 1987 ல் மணிரத்னம் இயக்கிய அவரது ‘நாயகன்’ திரைப்படம், எல்லா காலத்திலும் மிகச் சிறந்த இந்தியப் படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, மேலும் ‘டைம்’ இதழின் ஆல்-டைம் 100 சிறந்த படங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

பன்முக திறமை

கமல்ஹாசன் நடிப்பு மட்டுமின்றி, திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகவும் திகழ்கிறார். ஹே ராம், விருமாண்டி மற்றும் விஸ்வரூபம் போன்ற அவரது இயக்கிய படங்களும், அவற்றின் சிக்கலான கதைகள் மற்றும் புத்திசாலித்தனமான தொழில்நுட்பங்களுக்காக விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றன. ஹே ராம் 2000 ஆம் ஆண்டில் ஆஸ்கர் விருதுகளுக்காக இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்டது . சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படப் பிரிவில், ஆஸ்கர் விருதுக்கு அதிக எண்ணிக்கையிலான படங்களைச் சமர்ப்பித்த ஒரே இந்திய நடிகர் கமல் மட்டுமே.

நவீனத்தின் முன்னோடி

கமல்ஹாசன் எப்போதுமே வருங்கால சினிமா போக்கை கணிப்பதிலும், மேக்கப், கதாபாத்திரத்தின் உயிரோட்டத்துக்கு வலு சேர்ப்பதற்காக prosthetics எனப்படும் செயற்கையான் உடல் பாகங்களைப் பயன்படுத்துவது போன்ற சினிமா துறையின் நவீன அம்சங்களையும் அதன் தொழில்நுட்பத்தையும் தனது படங்களில் பயன்படுத்துவதில் எப்போதுமே முன்னோடியாக இருப்பவர். தசாவதாரம் (2008) திரைப்படத்தில், அவர் பத்து வெவ்வேறு பாத்திரங்களில் நடித்தார். ஒவ்வொரு தோற்றமுமே தனித்துவமாகவும் ஆளுமையுடனும் காணப்பட்டது. அந்த வகையில் இந்திய சினிமாவுக்கு அது ஒரு புதிய ‘பெஞ்ச்மார்க்’ ஆகவே கருதப்பட்டது.

சமூக பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பவர்

திரையுலகின் கவர்ச்சிக்கு அப்பால், கமல்ஹாசன் ஒரு அர்ப்பணிப்புள்ள சமூக ஆர்வலர். தனது ‘கமல் நற்பணி இயக்கம்’ என்ற பொதுநல அமைப்பு மூலம் ரத்ததானம், ஆதரவற்றோர்களுக்கு உதவி உட்பட பல்வேறு தொண்டுகளில் ஈடுபட்டு வருகிறார். 2018 ஆம் ஆண்டில், ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவருவதற்குமான கண்ணோட்டத்துடன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற தனது அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

உலகநாயகன்

கமல்ஹாசனின் உலகளாவிய ஈர்ப்பு மற்றும் அவர் ஏற்று நடித்த மாறுபட்ட கதாபாத்திரங்கள் காரணமாக “உலக நாயகன்’ என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறார். “மூன்றாம் பிறை’யில் கலகக்கார இளைஞன் முதல் விஸ்வரூபத்தில் தேசபக்தியுள்ள ‘ரா’ ஏஜென்ட் வரை, எந்தப் பாத்திரத்தை ஏற்றாலும் அதில் சிறந்து விளங்கும் அவரது திறமை ஈடு இணையற்றது.

ரிஸ்க்கான படத்தேர்வு

கமல்ஹாசனின் திரைப்படத் தேர்வு பெரும்பாலும் சமகால சினிமா போக்குக்கு மாறான சவால் நிறைந்ததாகவும் ரிஸ்க் எடுக்கக்கூடியதாகவுமே இருக்கும்.
அவரது அன்பே சிவம் (2003) திரைப்படம் நாத்திகம், கம்யூனிசம் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் கருப்பொருள்களைக் கொண்டதாக இருந்தது. இப்படத்துக்கு ஆரம்பத்தில் பல விமர்சனங்கள் கிளம்பினாலும், பின்னர் பல தரப்பிலும் அப்படம் பாராட்டைப் பெற்றது.

சர்வதேச அங்கீகாரம்

கமல்ஹாசன் இந்திய ரசிகர்களை மட்டும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார். அவரது படங்கள் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன, மேலும் அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் பேச அழைக்கப்பட்டுள்ளார். இந்திய சினிமாவை உலக அரங்குக்கு எடுத்துச் சென்ற பெருமைக்குரியவர்.

பிறந்த நாள் வாழ்த்துகள் கமல்!

Exit mobile version