விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படும் பிக் பாஸ் ( தமிழ்) நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதுவரை பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் ஏழு பாகங்கள் ஒளிபரப்பாகி, அவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்து 8 ஆவது பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் கமல் வந்த பிறகு இந்த நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினார்கள். கமல் தொகுத்து வழங்கும் விதமும் போட்டியாளர்களை அவர் கையாளும் விதமும் நல்ல வரவேற்பை பெற்றது. பிக் பாஸ் வீட்டிற்குள் தவறு செய்யும் போட்டியாளர்களை கேள்வி கேட்டு கண்டிப்பது, சிலரை அவர்களது நடத்தைக்காக பாராட்டுவது என ஒவ்வொரு சனி, ஞாயிறுகளிலும் கமல் அந்த நிகழ்ச்சியை நடத்திச் சென்ற விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் இன்று திடீரென அறிவித்தார். இது தொடர்பாக அவர் தனது X சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இனிமேல் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
காரணம் என்ன?
” 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். சினிமா பணிகள் காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை. உங்கள் இல்லங்களில் உங்களைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. உங்கள் அன்பையும் பாசத்தையும் நீங்கள் எனக்குப் பொழிந்திருக்கிறீர்கள்.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை, இந்தியாவின் சிறந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக மாற்றுவதற்கு, போட்டியாளர்களின் உற்சாகமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பங்களிப்பே காரணம். உங்கள் ஒவ்வொருவருக்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் நான் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கடைசியாக, விஜய் டிவியின் அற்புதமான குழுவிற்கும், இந்த நிகழ்ச்சியை மாபெரும் வெற்றியடையச் செய்வதில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு குழு உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த சீசன் இன்னொரு வெற்றியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
புதிய நிகழ்ச்சி தொகுப்பாளர் யார்?
கமல்ஹாசன் தயாரிப்பில் சில படங்கள் உள்ளன. மேலும், ‘கல்கி 2898 ஏடி’ இரண்டாம் பாகம், இந்தியன் 3 மற்றும் மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ ஆகிய படங்களும் நடிப்பதற்கு வரிசையாக கையில் உள்ளன. இத்தகைய தொடர் கமிட்மென்ட் காரணமாகவே அவர் இந்த விலகல் முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
கமலின் இந்த அறிவிப்பு குறித்து விஜய் தொலைக்காட்சி தரப்பில் இன்னும் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் புதிய தொகுப்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
அநேகமாக புதிய தொகுப்பாளரும் தமிழ் திரையுலகின் ஆளுமை மிக்க நபர்களில் ஒருவராக தான் இருக்கக்கூடும். அப்படியான ஒருவரை தான் விஜய் டிவி நிர்வாகம் தேர்வு செய்யும் எனத் தெரிகிறது.