“காலத்தின் சூழல்…” – விலகலை அறிவித்த காளியம்மாள்… அடுத்து சேரப்போவது திமுகவா, தவெக-வா?

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்த காளியம்மாள், அக்கட்சியிலிருந்து விலகப்போவதாக கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வெளியாகி வந்தன.

சமீப நாட்களாக சீமானின் செயல்பாடுகள் மீது அதிருப்தி அடைந்து பல நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமாக அறியப்பட்ட மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாளும் சமீப நாட்களாக சீமான் மீது அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், ” அவர் ஒரு பிசிறு; கட்சியிலிருந்து விலகினால் விலகட்டும்” என சீமான் கூறியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றின் அழைப்பிதழில் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பை குறிப்பிடாமல், சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே அழைப்பிதழில் அவரது பெயருக்குப் பின்னால் அவரது கட்சிப் பதவி குறிப்பிடப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவித்திருந்தனர். இதனால், காளியம்மாளும் கட்சியிலிருந்து விலகுவது உறுதியாகி விட்டதாகவே கடந்த சனிக்கிழமையன்று செய்திகள் வெளியாகின.

வருத்தத்துடன் விலகல்

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகும் தனது முடிவை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் காளியம்மாள். இது தமக்கு வருத்தமான முடிவு தான் என்று இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

” தாய்தமிழ் உறவுகளுக்கு வணக்கம். இதுவரை இல்லாத கனத்த இதயத்தோடு எழுதுகிறேன். கட்சியில் பயணித்த ஒவ்வொரு கணமும் உண்மையும், நேர்மையுமாய் உளப்பூர்வமாக என் குடும்பத்திற்கும் மேலாக நேசித்து வந்தேன். இந்த 6 ஆண்டுகால பயணம் எனக்கு அரசியல்ரீதியான பல அனுபவங்களை கொடுத்துள்ளது.

பல உறவுகள் அக்கா. தங்கையாகவும் அண்ணன், தம்பிகளாகவும் கிடைத்ததையும் அவர்கள் என்னுடன் பழகிய விதங்களையும் எண்ணி மகிழ்கிறேன். நமக்கெல்லாம் ஒரே பெருங்கனவு தான், அது தமிழ்த்தேசியத்தின் வெற்றியும், அதனை மக்களிடம் கொண்டு சேர்த்தல் என்னும் உன்னத நோக்கமும் அந்த நோக்கத்தை அடைய வேண்டும் என்ற பாதையில் நானும் ஒரு பகுதியாய் இணைந்து பயணித்ததில் நான் பெருமை கொள்கிறேன்.

ஆனால் இப்பாதை இவ்வளவு சீக்கிரம் முடியும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. கடந்த 6 வருடகாலமாக ஒரு சமூக மாற்றத்திற்காக ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு போராட முடியுமோ என் ஆற்றலையும் மீறி உங்கள் எல்லோர் அன்பாலும், நம்பிக்கையாலும் இந்த களத்தில் நின்றிருக்கிறேன். எனினும் காலத்தின் சூழல், உயிராக எண்ணி, வழி நடந்த நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்துடன், கனத்த இதயத்துடனும் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு பயணித்ததில் பலரின் அன்பு, அக்கறை, நம்பிக்கை என் மீதான அளவற்ற பாசம் என்ற அனைத்தையும் மனதில் நிலைநிறுத்தியுள்ளேன்.

என்னுடன் இத்தனை நாட்களாக உண்மையாய், உறவாய் பழகிய, பயணித்த. களத்தில் இன உணர்வோடு நின்று நேர்மையாய் வேலை செய்த அத்தனை உறவுகளுக்கும், உண்மையான உழைப்பாளர்களுக்கும், உலகத்தமிழர்கள் மற்றும் நாம்தமிழர் உறவுகளுக்கும் நன்றிகளை சொல்வதோடு என் வருத்தங்களையும் பகிர்ந்துகொள்கிறேன்.

ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்து, பிறந்த இனத்துக்காக தமிழ்த்தேசிய களத்தில் ஓடிய என்மீது மிகுந்த நம்பிக்கையும் அன்பும் வைத்து களமாடிய உங்கள் அத்துணை பேருக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள். எனக்கான நெருக்கடிகள் நிறைய வந்த போதும் என்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையாலும், நான் உங்கள் மீது கொண்ட அன்பினாலும், எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருந்தேன். ஆனால் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டதை எண்ணி மனம் வருந்துகிறேன்.

அவதூறு வெறும் வார்த்தைகள் தானே என்று நினைத்து அள்ளி தெளிப்பவர்களுக்கு மத்தியில், என் மீது அளப்பரிய அன்பு கொண்டு நேசிக்கிற உங்கள் அத்தனை பேருக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டவளாக இருப்பேன். என்னுடைய இந்த முடிவு பலருக்கு வருத்தத்தைத் தரலாம். எனக்கும் தான். காலத்தின் வழிநடத்தல்! என்றும் தமிழ்த்தேசியத்தை விதைக்கும் வழியில் எம் பயணம் தொடரும்.. நன்றி,வணக்கம், நாம் தமிழர்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

தம்பிகள் ரியாக்சன்

காளியம்மாள் விலகலைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி தம்பிகள் பலரும் வருத்தம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் “எங்கிருந்தாலும் தமிழ்த் தேசியத்துக்கு எதிராக மட்டும் பேசி நின்னுவிடாதீர்கள். மற்றபடி உங்களுக்கு வாழ்த்துக்கள். திராவிட கட்சியோடும் சென்று உங்கள் மதிப்பையும் குறைத்துவிடாதீர்கள். நம் தமிழ் தேசிய தலைவரையும் நம் அண்ணனையும் மறந்து விடாதீர்கள்…” என பதிவிட்டு வருகின்றனர்.

திமுகவா… தவெக-வா?

இந்த நிலையில், காளியம்மாள் திமுகவில் சேரக்கூடும் ஏற்கெனவே செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், அது குறித்து அதிகாரபூர்வமாக இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அவர் திமுக-வில் சேர்ந்தால் அவருக்கு வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ” திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் அந்த முடிவை எடுப்பார்” என்று பதிலளித்திருந்தார்.

இதனிடையே காளியம்மாள் நடிகர் விஜய்யின் தமிழர் வெற்றிக் கழகத்தில் சேரலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருப்பதாகவும், கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

எதுவானாலும் காளியம்மாளின் முடிவு என்ன என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரியவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Bahas 2 agenda penting, pjs wali kota batam hadiri rapat paripurna dprd kota batam. Click here for more news about champions trophy 2025. Bode george reveals rift with wike, atiku.