கலைஞர் கைவினைத் திட்டம் தொடக்கம்… எந்தெந்த தொழில்கள்… கடன் மானியம் எவ்வளவு?

கைவினை கலைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை அன்று தொடங்கி வைத்தார். அப்போது மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்திற்கும், தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினைத் திட்டத்திற்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் என்னென்ன என்பதை பட்டியலிட்ட அவர், இந்த தொடங்கப்பட்டது ஏன், அதற்கான அரசியல் பின்னணி என்ன என்பதையும் விளக்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர், சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் இன்று சனிக்கிழமையன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் கைவினைத் திட்டத்தை தொடங்கி வைத்து, 8951 பயனாளிகளுக்கு 34 கோடி ரூபாய் மானியத்துடன் 170 கோடி ரூபாய் கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்கினார்.

மேலும், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் 7.29 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள பேராவூரணி கயிறு குழுமம், இராமநாதபுரம் மாவட்டம், வசந்த நகரில் 6.72 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள நகை உற்பத்தி குழுமம், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் நகரில் 1.15 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மகளிர் எம்ராய்டரிங் குழுமம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

எந்தெந்த தொழில்கள்… வயது வரம்பு, கடன் மானியம் எவ்வளவு?

இத்திட்டத்தின் கீழ், மரவேலைப்பாடுகள், படகு தயாரித்தல், உலோக வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், சிற்பவேலைப்பாடுகள், கண்ணாடி வேலைப்பாடுகள், மண்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், கட்டட வேலைகள், கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல் உள்ளிட்ட 25 வகையான தொழில் இனங்களுக்கு புதிய தொழில் அலகுகளை தொடங்குவதற்கும்; ஏற்கனவே உள்ள அலகுகளை நவீன வடிவில் விரிவாக்கம் செய்திடவும் திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மூலம் வழங்கப்பட்டு, 25 சதவீத மானியம், அதிகபட்சமாக ரூ.50,000/- வரையிலும், வங்கிகடன் 3 லட்சம் ரூபாய் மற்றும் 5 சதவீத வட்டி மானியத்துடன் அனைத்தும் உள்ளடக்கியதாக செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் கைவினைத் திட்டம் ஏன்? அரசியல் பின்னணி

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த தொடங்கப்பட்டது ஏன், அதற்கான அரசியல் பின்னணி என்ன என்பதை விளக்கினார்.

அவர் பேசுகையில், ” தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்துக் கைவினை கலைஞர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக, இன்று நாம் தொடங்கி வைக்க இருக்கக்கூடிய இந்த கலைஞர் கைவினைத் திட்டம் என்பது, சமூகநீதியை – சமநீதியை – மனிதநீதியை – மனித உரிமை நீதியை நிலைநாட்டக்கூடிய திட்டம்!

இந்த திட்டத்தின் சிறப்புகளை சொல்வதற்கு முன்னே, ஏன் இந்த திட்டத்தை உருவாக்கினோம் என்ற அரசியல் பின்னணியை நான் சொல்ல விரும்புகிறேன்.

ஒன்றியத்தை ஆளக்கூடிய பா.ஜ.க. அரசு கடந்த 2023-ஆம் ஆண்டு ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதன் பெயர் என்ன தெரியுமா? ‘விஸ்வகர்மா திட்டம்!’ அந்தத் திட்டத்தின்கீழ் ஒருவர் பயன்பெற வேண்டும் என்றால், அந்த விண்ணப்பதாரர், அவருடைய குடும்பம் காலங்காலமாக செய்து கொண்டு வருகின்ற தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. இது சாதிய பாகுபாடுகளை, குலத்தொழில் முறையை வெளிப்படையாகவே ஊக்குவிக்கிறது என்று சொல்லி நாம் கடுமையாக எதிர்த்தோம்.

அந்த உணர்வோடுதான், தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த, மூன்று முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள வலியுறுத்தி, பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன். அதில் நான் குறிப்பிட்டது.

‘விண்ணப்பதாரரின் குடும்பம் பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்கின்ற கட்டாய நிபந்தனையை நீக்கி, தகுதியான எந்த தொழிலையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று மாற்றவேண்டும். விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 18-லிருந்து 35-ஆக உயர்த்தவேண்டும்!
கிராமப்புறங்களில், பயனாளிகளை சரிபார்க்கும் பொறுப்பை கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் இருந்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாற்றவேண்டும்!’ ஆகிய 3 மாற்றங்கள்.

ஆனால், மிக மிக முக்கியமான இந்த மூன்று மாறுதல்களையும் ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். எந்த திருத்தமும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால்தான், பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய வடிவத்தில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்று ஒன்றியத்தில் இருக்கக்கூடிய MSME துறையின் அமைச்சருக்கு எழுத்துப்பூர்வமாகவே இதை நாங்கள் தெரிவித்துவிட்டோம்.

அதே நேரத்தில், கைவினைக் கலைஞர்களுடைய வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதற்காக, சாதிய அடிப்படையில், பாகுபாடு காட்டாத ஒரு திட்டத்தை உருவாக்க நாங்கள் முடிவு செய்தோம். அதன்படி உருவானதுதான் இந்த கலைஞர் கைவினைத் திட்டம்.

விஸ்வகர்மா திட்டம் Vs கலைஞர் கைவினைத் திட்டம்

ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்தில், 18 தொழில்கள்தான் இருக்கிறது! ஆனால், நம்முடைய கலைஞர் கைவினைத் திட்டத்தில் 25 வகையான தொழில்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது.

ஒன்றிய அரசுத் திட்டத்தில், விண்ணப்பதாரர் அவருடைய குடும்பத் தொழிலை மட்டும்தான் பார்க்க முடியும். ஆனால், நம்முடைய திட்டத்தில் விரும்பிய எந்த தொழிலையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

கலைஞர் கைவினைத் திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 35-ஆக இருக்க வேண்டும் என்று நிர்ணயித்திருக்கிறோம். அதனால், கல்லூரிக்கு செல்கின்ற வயதில், குடும்பத் தொழிலை பார்த்தால் போதும் என்று எந்த மாணவரும் நினைக்காமல் இருப்பதை உறுதி செய்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ahmet hikmet ÜÇiŞik tÜbİtak’ta seminer verdi. bareboat yacht charter. Hest blå tunge.