AI, குவாண்டம் கம்ப்யூட்டிங்… IT துறையில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள்!
தகவல் தொழில் நுட்பத் துறையில் அதிகரித்து வரும் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு, டீப் டெக் மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் 2030 ஆம் ஆண்டுக்குள் 10 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று நிறுவனங்களுக்கான பணியாளர்கள் சேவை வழங்குநரான Quess Corp நிறுவனம் தெரிவித்துள்ளது.
வளர்ந்து வரும் ஒட்டுமொத்த தொழில்நுட்ப பணியமர்த்தல் தேவை மற்றும் அது தொடர்பான நுண்ணறிவுகளை பகுப்பாய்வு செய்து, ஐடி சந்தையில் பணியாளர்களுக்கான தேவை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஜூலை – செப்டம்பர் வரையிலான ( FY25 ) இரண்டாவது காலாண்டில், உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres- GCCs) மற்றும் சைபர் செக்யூரிட்டி சார்ந்த பணியாளர்களுக்கான தேவை, நாடு முழுவதும் முறையே 71 சதவீதம் மற்றும் 58 சதவீதம் அதிகரித்துள்ளது.
“இந்தியா, அதன் வளர்ந்து வரும் தொழில்நுட்ப திறமைகள் மற்றும் புதுமையான மனப்பான்மையுடன், இந்த டிஜிட்டல் புரட்சியில் முன்னணியில் உள்ளது. எனவே, அடுத்த 6 மாதங்களில் IT சேவைகள் துறையில் பணியாளர்களுக்கான தேவை 10-12 சதவீதம் அதிகரிக்கும்” என்று Quess IT Staffing நிறுவன சிஇஓ கபில் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், Quess IT Staffing காலாண்டு டிஜிட்டல் திறன் அறிக்கையின்படி, புதிய பணியாளர்களுக்கான ஒட்டுமொத்த தேவையில் 79 சதவீதம் டெவலப்மென்ட், ERP, டெஸ்ட்டிங், நெட்வொர்க்கிங் மற்றும் டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட முதல் ஐந்து நிலை பணியாளர்களே அதிகம் இடம்பெற்றிருப்பதாகவும் அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
இந்த வகை பணியாளர்கள் தவிர, Java (30 சதவீதம்), சைபர் செக்யூரிட்டி (20 சதவீதம்), மற்றும் DevOps (25 சதவீதம்) தொடர்பான சிறப்பு திறன் சார்ந்த பணியாளர்களின் தேவையும் 2025 நிதியாண்டின் முதல் காலாண்டு மற்றும் இரண்டாவது காலாண்டிற்கு இடையே வேகமாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், FY25 ன் இரண்டாவது காலாண்டில், பல்வேறு தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் தேவை 37 சதவிகிதத்துடன் முதலிடத்தில் இருந்தது. அதைத் தொடர்ந்து Hi-Tech (11 சதவிகிதம்), கன்சல்ட்டிங் (11 சதவிகிதம்) உற்பத்தி (9 சதவீதம்) மற்றும் BFSI (8 சதவீதம்) நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
பூகோள ரீதியாக பார்க்கும்போது, நாட்டில் தொழில்நுட்ப நிலப்பரப்பு அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது. இதில், பெங்களூரு வழக்கம்போல் முன்னணியில் உள்ளது. இங்கு தான் 62 சதவீத பணியமர்த்தல் நடைபெறுகின்றன. அதைத் தொடர்ந்து மேற்கு (14 சதவீதம்), வடக்கு (8 சதவீதம்), மற்றும் கிழக்கு (0.4 சதவீதம்) பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
பெங்களூருக்குப் பிறகு, தேவைப் பகிர்வில் நகர வாரியான நிலப்பரப்பை ஹைதராபாத் (43.5 சதவீதம்) மற்றும் புனே (10 சதவீதம்) பகிர்ந்து கொள்கின்றன. மேலும், இந்தியாவில் உலகளாவிய திறன் மையங்களின் விரிவாக்கம் காரணமாக பல்வேறு நகரங்களில் பணியாளர்களின் தேவை அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.