Amazing Tamilnadu – Tamil News Updates

ரிஷப் பண்ட்: ஐபிஎல் ஏலத்தில் பலித்த விராட் கோலியின் கணிப்பு!

பிஎல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் பெறுவார் என விராட் கோலி முன்கூட்டி கணித்தபடியே நடந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) சார்பில் 2008 முதல் இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) ‘டி–20’ தொடர் நடத்தப்படுகிறது. இதுவரை 17 சீசன் முடிந்துள்ளன. இதன் 18 ஆவது சீசன், அடுத்த ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான வீரர்கள் ‘மெகா’ ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த ஏலத்தின் முதல் நாளான நேற்று, ஏலத்தில் 10 அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் முதல் வீரராக இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பெயர் அறிவிக்கப்பட்டது. அவரது அடிப்படை விலை ரூ.2 கோடி. அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க முன்வந்தது. தொடர்ந்து டெல்லி, குஜராத், பெங்களூரு, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் வாங்க முன்வந்தன. அப்போது பஞ்சாப் கிங்ஸ் அணி ஆர்டிஎம் முறையில் அவரை வாங்க விரும்புவதாக தெரிவித்தது. ஹைதராபாத் அணி ரூ.18 கோடி என தெரிவித்த சூழலிலும் அந்த தொகைக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது. அவர் கடந்த சீசனில் பஞ்சாப் அணியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தவர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர். அவரை அந்த அணி தக்க வைக்கவில்லை. இந்நிலையில், ஏலத்தில் பங்கேற்ற அவரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது. அவரது அடிப்படை விலை ரூ.2 கோடி. கொல்கத்தா, பஞ்சாப், டெல்லி அணிகள் அவரை ஏலத்தில் வாங்க முன்வந்தன.

ரூ. 27 கோடிக்கு ஏலம் போன ரிஷப் பண்ட்

இந்த நிலையில், இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்டும் ஏலத்தில் பங்கேற்றார். அவரது அடிப்படை விலை ரூ.2 கோடியாக இருந்தது. லக்னோ, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட அணிகள் அவரை வாங்க ஆர்வம் காட்டின. ரூ.20.75 கோடியில் இருந்த போது டெல்லி அணி ஆர்டிஎம் மூலம் அவரை வாங்க முன்வந்தது. அப்போது ரூ.27 கோடி என விலையை லக்னோ அணி உயர்த்தியது. அதனால் டெல்லி விலக, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அவரை ஏலத்தில் வாங்கியது. ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமை ரிஷப் பண்டுக்கு கிடைத்துள்ளது. அவர் அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே பிரிவில் இடம்பெற்றிருந்த பட்லர் ரூ.15.75 கோடிக்கும் (குஜராத் டைட்டன்ஸ்), ஸ்டார்க் ரூ.11.75 கோடிக்கும் (டெல்லி கேபிடல்ஸ்), ரபாடா ரூ.10.75 கோடிக்கும் (குஜராத் டைட்டன்ஸ்) அணிகளால் வாங்கப்பட்டனர்.

முன்னரே கணித்த விராட் கோலி

இதனிடையே ரிஷப் பண்ட் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார் என விராட் கோலி முன்கூட்டியே கணித்துள்ளார். விராட் கோலி சக வீரர்களுடன் ஸ்டம்ப் மைக்கில் அரட்டை அடிப்பது என்பது வாடிக்கையான ஒன்று. கவாஸ்கர் கோப்பைக்கான இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் நேற்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது, ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியானுடன் கோலி பேசுவது ஸ்டம்ப் மைக்கில் கேட்டது.

அப்போது தான் அவர், ரிஷப் பண்ட் அதிக தொகைக்கு ஏலம் போவார் எனக் கூறினார். ​ஸ்டம்ப் மைக்கில் அவர் பேசியது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அவர் கணித்தபடியே நடந்தது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

Exit mobile version