Amazing Tamilnadu – Tamil News Updates

சிறந்த முதலமைச்சருக்கான கருத்துக்கணிப்பு: முந்துவது யார்? – பாஜக-வில் மோடிக்குப் பிறகு யார் சரியான தலைவர்?

ந்தியாவின் சிறந்த முதலமைச்சர் யார் என்பது குறித்து ‘இந்தியா டுடே’ ஆங்கில நாளிதழ் Mood of the Nation என்ற தலைப்பில் ஆகஸ்ட் மாதம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி உள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 1,36,463 பேரிடம் நடத்தப்பட இந்த கருத்துக்கணிப்பில், இந்தியாவில் சிறப்பாக செயல்படும் முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு, உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் சிறப்பாக செயல்படுவதாக 33 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே சமயம், கடந்த பிப்ரவரி மாதம் பெற்ற 51 சதவீத ஆதரவுடன் ஒப்பிடுகையில், அவருக்கு தற்போது சறுக்கலே ஏற்பட்டுள்ளது. இதற்கு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக-வுக்கு கிடைத்த தோல்வியும், அம்மாநில பாஜகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலுமே காரணம் என்று கூறப்படுகிறது.

யோகி ஆதித்யநாத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இடம்பெற்றுள்ளார். 13.8 சதவீதம் பேர் அவர் சிறப்பாகச் செயல்படுகிறார் எனத் தெரிவித்துள்ளனர். 9.1 சதவீதம் பேர் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலினுக்கு எத்தனையாவது இடம்?

அவரைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார். கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 4.7 சதவீதம் பேர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறந்த முறையில் செயல்படுவதாக தெரிவித்துள்ளனர். 4.6 சதவீதம் பேர் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சிறந்த முறையில் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

மோடிக்குப் பிறகு யார் சரியான தலைவர்?

இதனிடையே இந்த கருத்துக்கணிப்பில், பிரதமர் நரேந்திர மோடிக்குப் பிறகு பாஜகவின் பிரதமர் வேட்பாளராக யார் பொருத்தமானவர் என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு, யோகி ஆதித்யநாத் மற்றும் நிதின் கட்கரியை விட, மோடிக்குப் பிறகு பாஜகவின் பிரதமர் வேட்பாளராக உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறார். பதிலளித்தவர்களில் 25 சதவீதம் பேர் அமித்ஷாவை பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என ஆதரித்தனர். இது உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விட 19 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் விவசாய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோருக்கு சுமார் 5% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அமித் ஷா கருத்துக்கணிப்பில் முன்னணியில் இருந்தாலும், கடந்த பிப்ரவரி 2024 ல் கிடைத்த 28 % மற்றும் 2023 ஆகஸ்ட் மாத கருத்துக்கணிப்பில் அவருக்கு கிடைத்த 29 சதவீத ஆதரவுடன் ஒப்பிடுகையில் தற்போதைய 25 % ஆதரவு சரிவாகவே பார்க்கப்படுகிறது.

Exit mobile version