Amazing Tamilnadu – Tamil News Updates

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதில் சிக்கல்… ‘கெடு’ தேதி நீட்டிக்கப்படுமா?

மாதச் சம்பளம் பெறும் நபர்கள் மற்றும் பிற வரி செலுத்துவோர், தங்களது வருமான வரிக் கணக்குகளை ( Income tax returns – ITR) இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இன்னும் 13 நாட்களே மீதம் உள்ள நிலையில், காலக்கெடு தேதியை நீட்டிக்க வேண்டும் என வருமான வரிச் செலுத்தும் தனிநபர்கள் மற்றும் வரிச் செலுத்தும் பணிகளை மேற்கொள்ளும் கணக்காளர்கள் (Accountant) மற்றும் ஆடிட்டர்கள் போன்றவர்களிடமிருந்து வருமான வரித்துறைக்கு கோரிக்கைகள் வரத் தொடங்கி உள்ளன.

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (The Institute of Chartered Accountants of India – ICAI) சமீபத்தில் வருமான வரித் துறைக்கு எழுதிய கடிதத்தில், வருமான வரி கணக்கை இ-ஃபைலிங் மூலம் தாக்கல் செய்யக்கூடிய இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறுகளை எதிர்கொள்ள நேரிடுவதாகவும், இதனால் வருமான வரிச் செலுத்தும் தனிநபர்கள் மற்றும் அதைக் கையாளும் தொழில்முறை வல்லுநர்கள் சிரமத்துக்கு உள்ளாகுவதாகவும், எனவே வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவான ஜூலை 31 ஆம் தேதி என்பதை, மேலும் நீட்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இ-ஃபைலிங் இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு

மேலும், இ-ஃபைலிங் இணையதளத்தில் ஏற்பட்டுள்ள இந்த தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்து வருமான வரிச் செலுத்தும் பலர் சமூக ஊடகங்களிலும் பதிவிட்டுள்ளனர். ஒரே நேரத்தில் அதிகம் பேர் வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது இத்தகைய தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படலாம் என்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் முன்கூட்டியே யூகித்து, அதற்கேற்ப தயாராக இருந்திருக்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டும் இதே பிரச்னையை தாங்கள் எதிர்கொண்டதாகவும் அவர்கள் ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இ-ஃபைலிங்கில் சில சிக்கல்கள் இருப்பதை வருமான வரித்துறையும் ஏற்றுக்கொண்டு, அவற்றைத் தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், எந்த தேதிக்குள் தீர்க்கப்படும் என்பதை தெரிவிக்காததால், வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளோர் கையைப் பிசையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வருமான வரிக் கணக்குத் தாக்கலை சிக்கலின்றி மேற்கொள்ள, இப்பிரச்னையை வருமான வரித்துறை விரைவில் தீர்க்க வேண்டும் என இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

கெடு தேதியை நீட்டிக்க வேண்டும்

மேலும், தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக வரிச் செலுத்துவோர், இ-ஃபைலிங் இணையதளத்தில் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதில் எதிர்கொள்ளும் மேலும் பல சிக்கல்களையும் ICAI எடுத்துரைத்துள்ளது. எனவே, ஜூலை 31 ஆம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கைத் தடையின்றி தாக்கல் செய்வதையும், வரிகளைச் செலுத்துவதையும் உறுதிசெய்ய, இந்த சிக்கல்களை விரைவாகத் தீர்க்க வேண்டும். மேலும், கெடு தேதியையும் நீட்டிக்க வேண்டும் எனக் கோரியுள்ளது. அத்துடன், இதில் வரி செலுத்துவோருக்கு உதவ, நம்பகமான இ-ஃபைலிங் இணையதளத்தை உருவாக்க பரிசீலிக்குமாறு மத்திய அரசையும் அந்த நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Exit mobile version