Amazing Tamilnadu – Tamil News Updates

‘குட் பேட் அக்லி : இளையராஜா நோட்டீஸும் இசைக்கான உரிமைப் போராட்டமும்!

மிழ் திரையிசையின் மாமேதை இளையராஜா மீண்டும் சட்டப் போராட்டத்தில் இறங்கியுள்ளார். இம்முறை, அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் சட்ட சிக்கலில் சிக்கி உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இப்படத்தில் ராஜா இசையமைப்பில் புகழ்பெற்ற பாடல்களான ‘ஒத்த ரூபாய் தாரேன்’ (நாட்டுப்புற பாட்டு, 1996), ‘இளமை இதோ இதோ’ (சகலகலா வல்லவன், 1982), மற்றும் ‘என் ஜோடி மஞ்ச குருவி’ (விக்ரம், 1986) ஆகியவை அவரது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டி, ரூ.5 கோடி நஷ்ட ஈடு கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இது குறித்த விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை என்றாலும், இந்த சட்ட நோட்டீஸ் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு திரைப்படத்தின் ஆன்மாவான இசையின் உரிமை யாருக்கு என்ற கேள்வியையும் இசை உரிமைகள் குறித்த சட்ட மற்றும் நெறிமுறை விவாதங்களையும் மீண்டும் கிளப்பி உள்ளது.

சட்டப் பிரிவும் உரிமையும்

1957-ஆம் ஆண்டு பதிப்புரிமைச் சட்டம், இசையமைப்பாளருக்கு அவரது படைப்புகளின் பொருளாதார மற்றும் தார்மிக உரிமைகளை வழங்குகிறது. இளையராஜாவின் குற்றச்சாட்டு, அவரது இசையை அனுமதியின்றி பயன்படுத்தியது. அதாவது, பிரிவு 51-ஐ மீறுவதாகும். பிரிவு 57, படைப்பாளியின் இசையைத் திரிப்பதற்கு எதிராகப் பாதுகாப்பு அளிக்கிறது. இந்தியச் சட்டம், ஒரு படைப்பின் தார்மிக உரிமைகளை வாழ்நாள் முழுவதும் அங்கீகரிக்கிறது. ஆனால், பழைய பாடல்களின் உரிமைகள் இசை நிறுவனங்களிடம் இருக்கலாம் என்பதால், இது வழக்கை சிக்கலாக்குகிறது.

இருப்பினும், இளையராஜாவின் உரிமைகளை மீறியதற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவே சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.அதே சமயம் தமிழ் திரையுலகில் இது குறித்து கலவையான கருத்துகள் நிலவுகின்றன.

திரையுலக கருத்து

இளையராஜாவுக்கு ஆதரவாக பேசும் ஒரு மூத்த இயக்குநர்,“ராஜா சார் இசை, தமிழர்களின் உணர்வு. அதை அவர் அனுமதியின்றி பயன்படுத்துவது, ஒரு கலைஞனின் மரியாதையைப் பறிப்பது போன்றது. இது அனைத்து படைப்பாளிகளுக்குமான போராட்டம்” என்கிறார். இவரைப் போலவே, பல இசைக் கலைஞர்கள் இளையராஜாவின் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றனர், காரணம் அவரது இசை தமிழ் திரையிசையின் அடித்தளம்.

மறுபுறம், தயாரிப்பாளர் ஒருவர் கூறுகையில், “திரைப்படங்களில் இசையை மறுபயன்பாடு செய்வது புதிய விஷயமல்ல. அதை மரியாதையாகச் செய்திருக்கலாம். ஆனால் உரிமைகள் இசை நிறுவனங்களிடம் இருப்பதால், தயாரிப்பாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்” என்கிறார். அவரது இந்தக் கருத்து, இந்த பிரச்னையில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்களை விளக்குகிறது.

இளையராஜாவுக்கு ஆதரவு

அதே சமயம் சட்ட நிபுணர்களோ, “இளையராஜாவின் பக்கமே நியாயம் அதிகம். அவரது இசை, தமிழ் மக்களின் வாழ்வியலின் ஒரு அங்கமாக உள்ளது. அதை அனுமதியின்றி பயன்படுத்துவது, ஒரு கலைஞனின் ஆன்மாவை அவமதிப்பதாகும். அவரது சட்டப் போராட்டங்கள், இளம் படைப்பாளிகளுக்கு உரிமைகளைப் பாதுகாக்க முன்மாதிரியாக அமைகின்றன. ‘குட் பேட் அக்லி’ படத்தின் இசைப் பயன்பாடு மரியாதையாக இருந்திருக்கலாம். ஆனால் சட்டப்படி அனுமதி பெறுவது அவசியம்” என்கின்றனர்.

இந்த வழக்கு, இசை உரிமைகள் குறித்து தமிழ் திரையுலகில் புதிய எச்சரிக்கையை ஏற்படுத்தி உள்ளது. பாடல் மறுபயன்பாட்டுக்கு அதன் சட்ட வரம்புகளையும் உரிமைகளையும் மதிக்க வேண்டும். அதே சமயம் இசை நிறுவனங்களின் உரிமை மேலாண்மையும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் தெரிவிக்கப்படுகிறது.

மொத்தத்தில், இளையராஜாவின் சட்ட நோட்டீஸ், ஒரு கலைஞனின் படைப்பு உரிமைகளை உறுதி செய்யும் முயற்சி என்றே சொல்ல வேண்டும். இது, தமிழ் திரையுலகில் நெறிமுறைகளை மேம்படுத்தும். இளையராஜாவின் இசை, தமிழர்களின் பெருமிதம்; அதைப் பாதுகாப்பது அனைவரின் கடமை.

அதே சமயம் இதில் மரியாதையும் மீறலும் எங்கு வேறுபடுகின்றன என்ற கேள்விக்கு இவ்வழக்கு பதிலளிக்கலாம்.

Exit mobile version