Amazing Tamilnadu – Tamil News Updates

சென்னை ஐஐடி-க்கு ரூ.228 கோடி நன்கொடை … அள்ளிக்கொடுத்த முன்னாள் மாணவர்!

ரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து உயர்ந்த நிலைக்குச் சென்ற பலர், தாங்கள் படித்த பள்ளி அல்லது கல்லூரிகளின் முன்னேற்றத்துக்காக நன்கொடை வழங்குவது அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகள் தான். ஆனால், சென்னை ஐஐடி ( IIT-Madras) வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ரூ.228 கோடி நன்கொடையை, இங்கு பயின்ற முன்னாள் மாணவரும், முனைவருமான டாக்டர்.கிருஷ்ணா சிவுகுலா வழங்கியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஐஐடி வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக வழங்கிய டாக்டர்.கிருஷ்ணா சிவுகுலா, இந்த கல்வி நிறுவனத்தில் 1970 ஆம் ஆண்டு பேட்ச் மாணவர் ஆவார். ஏரோனாட்டிக் பாடப்பிரிவில் எம்.டெக் படித்த இவர், 1997 ஆம் ஆண்டு ‘மெட்டல் இன்ஜெக்சன் மோல்டிங்’ (எம்ஐஎம்) எனப்படும் அதிநவீன பொறியியல் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்குக் கொண்டு வந்தார். அமெரிக்காவில் அப்போது வளர்ந்துவரும் தொழில்நுட்பமாக இது இருந்தது. இந்தோ எம்.ஐ.எம். என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஆண்டுக்கு ரூ.1000 கோடி வருவாய் ஈட்டக் கூடிய இரண்டு தொழிற்சாலைகளையும் நடத்தி வருகிறார் கிருஷ்ணா சிவுகுலா.

இந்த நன்கொடையால், சென்னை ஐஐடி பணிகள் மேலும் வலுப்படும் என ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை ஐஐடி-யில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிருஷ்ணா சிவுகுலாவை கெளரவிக்கும் விதமாக கல்வி நிறுவனத்தின் தொகுப்பு ஒன்றுக்கு ‘கிருஷ்ணா சிவுகுலா பிளாக்’ எனப் பெயரிடப்பட்டது.

‘கல்வி மட்டுமே அழியாத செல்வம்’

இந்நிலையில், இந்த நிகழ்வையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “பல ஆண்டுகளுக்குப் பிறகும் எங்களின் முன்னாள் மாணவர் ஒருவர் தாம் படித்த கல்வி நிறுவனத்தை நினைவில் வைத்து செயலாற்றுவது, கல்வி மட்டுமே மனிதகுலத்திற்கு அளிக்கக் கூடிய ஒரே அழியாத செல்வம் என்பதை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. கிருஷ்ணா சிவுகுலாவின் மிகப்பெரிய பங்களிப்பிற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்கால சந்ததியினர் அறிவாற்றலைப் பெறுவதில் மிகுந்த பயனடைவார்கள்” என்றார்.

‘மறக்க முடியாத கல்வியைத் தந்த சென்னை ஐஐடி’

ரூ.228 கோடி நன்கொடை வழங்கிய இந்தோ-எம்ஐஎம் நிறுவனரும், தலைமைச் செயல் அலுவலருமான டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா பேசுகையில், “சென்னை ஐஐடியில் எனது கல்வி மிகவும் மறக்க முடியாததாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருந்ததுடன் வாழ்க்கையில் பலவற்றைச் சாதிக்கவும் உதவியது. அகில இந்திய அளவில் எந்தவொரு பல்கலைக்கழகத்திற்கும் வழங்கப்பட்ட தொகையைவிட மிகப்பெரிய நன்கொடையை வழங்கி, நான் படித்த கல்வி நிறுவனத்திற்கு ஒரு பரிசாக திருப்பிச் செலுத்தும் நிலையில் இருக்கிறேன்” என்றார்.

டாக்டர்.கிருஷ்ணா சிவுகுலா & வி.காமகோடி

நன்கொடை எப்படி செலவிடப்படும்?

இந்த நன்கொடையைக் கொண்டு சென்னை ஐஐடியில் படிக்கும் சர்வதேச மாணவர்களின் கல்வி உதவித்தொகை, ஆராய்ச்சிக்கான சிறப்பு மானியத் திட்டம், சென்னை ஐஐடியின் புதிய மாணவர்களுக்கான இளநிலை பட்ட கல்வி உதவித்தொகை திட்டம், விளையாட்டு வீர்ர்களுக்கான பாடத்திட்டம், சாஸ்த்ரா இதழை மேம்படுத்துதல், கிருஷ்ணா பிளாக் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என ஐஐடி தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே சென்னை ஐஐடி கடந்த 2015-ம் ஆண்டில் அவருக்கு ‘மதிப்புமிகு முன்னாள் மாணவர் விருது’ வழங்கியதன் மூலம் அவரின் தொழில்முறை சிறப்பையும், சமூகத்தற்கு ஆற்றும் பங்களிப்புகளையும் அங்கீகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரூ. 513 கோடி நன்கொடை வசூல்

ஐஐடி மெட்ராஸ் 2023-24 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 513 கோடி ரூபாயை நன்கொடையாக திரட்டி உள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 135 சதவீதம் அதிகமாகும். 1 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கிய நன்கொடையாளர்களின் எண்ணிக்கை 48 . இதில் 16 பேர் முன்னாள் மாணவர்கள் மற்றும் 32 பேர் கார்ப்பரேட் பார்ட்னர்கள்.

2023-24 ஆம் ஆண்டில் முன்னாள் மாணவர்கள் மூலம் மட்டும் திரட்டப்பட்ட மொத்த தொகை 367 கோடியாகும். இது, முந்தைய ஆண்டை விட 282 சதவீதம் அதிகமாகும்.

Exit mobile version