தமிழ்நாட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரங்களில் முக்கியமானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓசூர். மின்னணு மற்றும் மின் வாகனங்கள் உற்பத்தித் துறையில் ஓசூர், கடந்த சில ஆண்டுகளில் முதலீடுகளை அதிகளவில் ஈர்த்து வருகிறது.
இப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்டு வேகமாக வளர்ந்து வரும் ஓசூர் நகரத்தினை, தமிழ்நாட்டின் முக்கியமான பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்குவதற்காக, அங்கு நவீன உட்கட்டமைப்புகளை அமைக்கும் நோக்கில், பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில், ஓசூர் நகரை தமிழ்நாட்டின் முக்கியமான பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்கும் நோக்கில், அந்த நகரில்
சுமார் 2000 ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 3 கோடி பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படவிருப்பதாகமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தார்.
ஜாம்ஷெட்பூருக்கு நிகராக டாடா தொழில் நகரம்
இதனால், இந்தியாவின் பல்வேறு தொழில் நிறுவனங்களின் பார்வை ஓசூர் பக்கம் திரும்பி உள்ளது. இதன் ஒரு அம்சமாக, ஓசூரில் புதிய தொழில் நகரை உருவாக்க பிரபல தொழில் நிறுவனமான டாடா குழுமம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் பிரபலமான தொழில் நகரம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஜாம்ஷெட்பூர். டாடா குழுமத்தால் உருவாக்கப்பட்ட இந்த நகரில், ஸ்டீல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஜாம்ஷெட்பூர் எப்படி மிக முக்கிய தொழில் நகரமாக டாடா குழுமத்தால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதோ, அதேபோன்றதொரு தொழில் நகரை ஓசூரிலும் உருவாக்க டாடா குழுமம் திட்டமிட்டு உள்ளது.
பல்வேறு தொழில் நிறுவனங்களின் ஆலைகள், உற்பத்திக் கூடங்கள் ஓசூரில் இயங்கி வருகின்றன. 2020 ஆம் ஆண்டு டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், தனது ஆலையை, திமிஜாபள்ளி கிராமத்தில் கட்டமைத்ததிலிருந்து ஓசூர் நகரம், மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. இந்த ஆலை, நாட்டின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி செய்யும் ஆலையாக மாற இருக்கிறது. தற்போது தனது உற்பத்தியை விரிவுப்படுத்தும் வகையில், டாடா குழுமம் இதே பகுதியில் இரண்டு புதிய உற்பத்தி மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. அத்துடன், பணியாளர்கள் தங்குவதற்கு வீட்டு வசதியும் இதே பகுதியில் வழங்கப்பட இருக்கிறது. இதனால், ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
புதிய ஆலைகளை உருவாக்குவதன் மூலம், ஓசூரில் அதிகம் பேருக்கு பணி வழங்கும் நிறுவனமாக டாடா எலெக்ட்ரானிக்ஸ் உருவெடுக்க இருக்கிறது. இது குறித்து பேசும் தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, வளர்ச்சியில் ஜாம்ஷெட்பூரை முந்தும் அளவுக்கு ஓசூரில் அதிக வசதிகள் உள்ளன என்றும், இந்த நகரில் உற்பத்தி மட்டுமின்றி பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால், இதன் காரணமாக ஓசூரை தகவல் தொழில்நுட்ப மையமாகவும் மாற்ற முடியும் என்று தெரிவித்தார்.
வளர்ச்சியின் அடிப்படையில் ஜாம்ஷெட்பூரை மிஞ்சும் திறனை ஓசூர் கொண்டுள்ளது. ஓசூர் நகரத்தின் வளர்ச்சி என்பது உற்பத்தியில் மட்டும் நின்றுவிடவில்லை. குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்புத் திட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெங்களூருக்கு அருகாமையில் இருப்பதால், ஓசூர் ஒரு தகவல் தொழில்நுட்ப மையமாகவும் திகழ்கிறது என அவர் மேலும் குறிப்பிடுகிறார்.
ஓசூருக்கு பிரகாசமான எதிர்காலம்
ஆப்பிள் நிறுவனம், சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொண்டதால், இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த கூட்டாண்மை ஓசூரின் வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்தும். இது, இந்தியாவின் தொழில்துறை நிலப்பரப்பில் ஒரு முக்கியமான பங்காளியாக மாறும். நகரத்தின் வளர்ச்சியானது, உலகளாவிய நிறுவனங்களின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்றவாறு நவீன, பன்முக தொழில்துறை மையத்தை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு சான்றாக திகழ்கிறது.
மேலும் அதன் வலுவான உள்கட்டமைப்பு, மூலோபாய கூட்டாண்மை மற்றும் பல-துறை வளர்ச்சி ஆகியவற்றுடன், ஓசூர் ஒரு புதிய-யுக தொழில்துறை அதிகார மையமாக, சம காலத்தில் ஜாம்ஷெட்பூரைப் போலவே முன்னேறி வருகிறது என்றால் அது மிகையில்லை என்பது தொழில்துறையினரின் கருத்தாக உள்ளது.