“தொழில் நகரமான ஒசூரில் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையும் அமைக்கப்படும்” எனத் தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
“மின்னணு மற்றும் மின் வாகனங்கள் உற்பத்தித் துறையில் கடந்த சில ஆண்டுகளாக முதலீடுகளை அதிகளவில் ஈர்த்து வரும் ஓசூர் நகரத்தினை, தமிழ்நாட்டின் முக்கியமான பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்குவதற்காக, அங்கு இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்” என்று ஸ்டாலின் அப்போது தெரிவித்திருந்தார்.
நீண்ட நாள் கோரிக்கை
இப்படி ஒரு விமான நிலையம் வேண்டும் என்பது ஓசூர் சிறு மற்றும் குறு தொழில் சங்கத்தினரின் (Hosur Small and Tiny Industries Association – Hostia) நீண்ட நாள் கோரிக்கையாகும். பல்வேறு காரணங்களால், இந்த கோரிக்கை நிறைவேறுவது தடைபட்டு வந்தது. அவ்வாறு ஓசூரில் விமான நிலையம் அமைந்தால், அதன் சொந்த மாவட்டமான கிருஷ்ணகிரி மற்றும் அருகில் உள்ள தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு மட்டுமல்லாது, அருகிலுள்ள பெங்களூரின் தென்கிழக்கு பகுதிகளுக்கும் பயனளிக்கும் என்பதால், முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு தொழில்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.
சிக்கல் என்ன?
அதே சமயம், ஓசூரில் விமான நிலையம் அமைவதில் சிக்கல்கள் இருப்பதாக அப்போதே பேச்சு எழுந்தது. “இந்திய அரசு மற்றும் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்துக்கு இடையிலான ஒப்பந்தத்தின்படி, பெங்களூர் சர்வதேச விமான நிலையம் தொடங்கப்பட்ட 2008 ஆம் ஆண்டிலிருந்து 25 ஆண்டுகளுக்கு, 150 கி.மீ. சுற்றளவில், புதிய விமான நிலையங்கள் அமைக்க முடியாது” என கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி, அன்றைய மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெனரல் விகே சிங் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலைச் சுட்டிக்காட்டி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதன் சாத்தியம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு திமுக தரப்பில், தமிழக அரசின் அனுமதியின்றி சுதந்திரமான, வளர்ச்சிக்கான உரிமைகளை தியாகம் செய்து, கர்நாடகாவின் மைசூர் மற்றும் ஹாசனில் உள்ள விமான நிலையங்களை மேம்படுத்துவதற்காகவும், வணிக நலன்களுக்காகவும் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் என்றும், இது தமிழக அரசின் திட்டத்தை ஒருபோதும் பிணைக்காது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.
மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?
இந்த நிலையில், ஓசூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை இன்று விடுத்த கோரிக்கைக்கு பதில் அளித்த விமான போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரபு ராம்மோகன், “பெங்களூருவில் இருந்து 150 கி.மீ.க்குள் இருப்பதால் விமான நிலையம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகா, மத்திய அரசு ஆகிய முத்தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மித்த முடிவு எடுத்தால் உதவத் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
இது விஷயத்தில் கர்நாடகா அரசு பேச்சுவார்த்தைக்கு இணங்கி வந்தால் தான் இது விஷயத்தில் விரைவாக ஒரு முடிவு எட்டப்படும். அதற்கான முயற்சிகளை தமிழ்நாடு அரசு விரைவாக மேற்கொள்ளும் என்பதே ஓசூர் வட்டார தொழில்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஏற்றுமதி/இறக்குமதி தொழில்கள் ஊக்கம் பெறும்
முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி, பெங்களூருக்கு வெளியே தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் இந்த புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டால், அது இன்ஃபோசிஸ் மற்றும் பயோகான் போன்ற நிறுவனங்களின் அலுவலகங்களுக்கும், சந்தாபுரா மற்றும் அத்திபெலே போன்ற அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கும், எலெக்ட்ரானிக்ஸ் சிட்டியான பெங்களூருக்கும் வரப்பிரசாதமாக இருக்கும். மேலும், ஓசூர் சாலை மற்றும் பெங்களூரு சாட்டிலைட் டவுன் ரிங் ரோடு வழிப்பாதையில், ரியல் எஸ்டேட் தொழில் ஊக்கம் பெறவும் இது வழிவகுக்கும் என்கிறார்கள் இத்துறை நிபுணர்கள்.
மேலும், பல பன்னாட்டு தொழில் நிறுவனங்கள், ஒசூரை நோக்கி வரும் வாய்ப்பு அதிகரிக்கும். இங்கு தயாராகும் இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர, கனரக வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு அதிகரிக்கும். அத்துடன் மலர்கள், கிரானைட் தொழில், ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில்களும் விரிவடையும் என்பதும் ஓசூர் சிறு மற்றும் குறு தொழில் துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.