‘இந்தி ஏன் தெரிந்திருக்க வேண்டும்..?’ – அற்பக் காரணங்களைச் சொல்வதாக முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

த்திய அரசின் மும்மொழி கொள்கை மற்றும் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் திமுக-வினர் தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்கள், தபால் அலுவலகங்கள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள பெயர்ப்பலகைகளில் உள்ள இந்தி எழுத்துகளை கறுப்பு பெயின்ட்டால் அழிக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, இந்தி திணிப்பு எதிரான திமுக-வின் நிலைப்பாடு, மும்மொழி கொள்கையை ஏற்காததால் மத்திய அரசு தமிழகத்துக்கான கல்வி நிதியை ஒதுக்காமல் இருப்பது, இந்தியை வலியுறுத்தி பாஜக உள்ளிட்டவர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு பதிலடி என திமுக-வினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.

அந்த வகையில் அவர் எழுதியுள்ள நான்காவது கடிதத்தில், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் இந்தி மொழியை ஏன் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது பாஜக-வினர் தெரிவித்து வரும் கருத்துகளைக் கடுமையாக சாடி உள்ளார்.

” முதல் மொழிப் போர்க்களத்தில் நாம் வெற்றி பெற்றாலும், போர் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஏனெனில், இது வெறும் மொழித் திணிப்பு மட்டுமல்ல. இந்தித் திணிப்பை முன்னேவிட்டு, அதன் தொடர்ச்சியாக இந்த மண்ணை சமஸ்கிருதமயமாக்கும் சதித்திட்டத்துடன், தமிழ்ப் பண்பாட்டின் மீது நடத்த நினைக்கும் படையெடுப்பு இது. அதைத் தன் தொடக்க காலத்திலிருந்தே தெளிவாக உணர்ந்து போராடி, முறியடித்து வருகிறது திராவிட இயக்கம்.

இந்தியும் தமிழைப் போல ஒரு மொழிதானே, கற்றுக்கொள்ளக்கூடாதா என்று கரிசனத்துடன்பேசுகிறவர்களிடம், ‘சமஸ்கிருதத்திற்குப் பதில் தமிழிலேயே கோவில்களில் அர்ச்சனை செய்யலாமா? தமிழும் செம்மையான மொழிதானே?’ என்று கேட்டுப் பாருங்கள். அவர்களின் உண்மையான நோக்கமும் அவர்களின் அடையாளமும் அம்பலமாகிவிடும்.

இன்றைக்கு இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்கின்ற கட்சியின் தலைவர்கள் இந்தியைத் திணிப்பதும், அதை ஏற்க மறுத்தால் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காமல் வஞ்சிப்பதுமாக இருக்கிறார்கள். இதைத் தட்டிக் கேட்க வேண்டிய தமிழ்நாட்டு பாஜக தலைவர்களோ, இந்தி தெரியாத தமிழர்களை நோக்கி வடமாநிலத்தவர்கள் திட்டினால் புரிந்துகொள்ளமுடியாது என்றும், வடமாநிலங்களுக்கு சென்றால் உணவகங்களில் ஆர்டர் பண்ண முடியாது என்றும், கழிவறை செல்வதற்குக்கூட இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்றும் எல்லோரும் எள்ளி நகையாடும் வகையிலான அற்பக் காரணங்களைச் சொல்கிறார்கள்.

ரயில் பயணத்தில் இந்தி பேசும் மாநிலத்தவர்கள் தமிழர்களை இந்தியில் திட்டினால், பதிலுக்கு நம்மவர்கள் அவர்களைத் தமிழில் திட்ட முடியாதா? சுயமரியாதை உணர்வும் சூடும் சுரணையும் உள்ள தமிழர்கள் அப்படித்தான் செய்வார்கள். இங்குள்ள பாஜக-வினர் எப்படிப்பட்டவர்களோ!

அண்ணா 1962 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகி ஆற்றிய முதல் உரையே ஒட்டுமொத்த அவையையும் கட்டிப்போட்டது. I belong to the Dravidian Stock என்ற அவரது புகழ்பெற்ற உரை, மாநில மொழிகள் மீதான பிரதமர் நேரு உள்ளிட்ட ஆட்சியாளர்களின் பார்வையில் புதிய திருப்பத்தை உருவாக்கியது. 1963 ஆம் ஆண்டு மே மாதம், ‘இந்தி அச்சுறுத்தலை எதிர்ப்போம்’ என்று மாநிலங்களவையில் அண்ணா ஆற்றிய உரை இந்தியை ஆட்சிமொழியாக்குவதால் இந்தியாவின் பிற மொழிகள் எப்படியெல்லாம் பாதிக்கப்படும் என்பதை தன் அழுத்தமான வாதங்களால் முன்வைத்தார்.

அந்நிய மொழியான ஆங்கிலத்தை ஏற்றுக்கொள்ளும்போது, இந்திய மொழியான இந்தியை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று ‘அறிவுத் ததும்பி வழியும்‘ இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்களும் அவர்களின் கட்சியினரும் கேட்கிறார்கள். ஆங்கிலம் எல்லா மாநிலங்களுக்கும் அந்நிய மொழி. ஆனால், இந்தி சில மாநிலங்களுக்கு மட்டும் தாய்மொழி. தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் அனைத்திற்குமே அது அந்நிய மொழி.

இதனை நாடாளுமன்ற மாநிலங்களவையில் மிகத் தெளிவாக விளக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘இந்தி பேசும் மாநிலங்களின் மக்களுக்கு அதுவே தாய்மொழியாக இருக்கும். அதுவே அரசு மொழியாகவும் இருக்கும். அதுவே பயிற்று மொழியாகவும் இருக்கும். அதுவே மத்திய அரசின் மொழியாகவும் இருக்கும் இந்தி பேசும் மக்களுக்கு இவ்வளவு வாய்ப்புகள், உரிமைகளை வழங்கிவிட்டு, இந்தி பேசாத (மற்றமொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட) எம் போன்ற மக்களுக்கு எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துகிறீர்கள்?’ என்று கேட்டார்.

அன்று அண்ணா கேட்டதைத்தான் நாமும் கேட்கிறோம். அண்ணா உருவாக்கிய இருமொழிக் கொள்கையே தமிழ்நாட்டில் நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ‘காலம் மாறிவிட்டது, அதனால் இந்தியைத் திணிப்போம்’ என்கிறார்கள் இன எதிரிகள். எத்தனை காலங்கள் மாறினாலும் அதற்கு ஈடுகொடுத்து நிற்கும் செம்மொழியாம் தமிழ் மீது இந்தி-சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு இடம் கொடுக்க மாட்டோம். உயிரைக் கொடுத்தேனும் தமிழைக் காப்போம்!” என அந்த கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The nation digest. Click here for more sports news. Bahas 2 agenda penting, pjs wali kota batam hadiri rapat paripurna dprd kota batam.