“ஆளுநர் தனிச்சையாக செயல்பட முடியாது ” – கடிவாளம் போட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பு!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், இருந்து வந்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, “மாநில அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட முடியும். அரசுக்கு ஆளுநர் வீண் தடைகளை ஏற்படுத்தக்கூடாது. அது மக்களின் நலன்களை பாதிக்கும். உயரதிகாரத்தில் இருப்பவர்கள் அரசியல் சாசனத்தை பின்பற்றி நடக்க வேண்டும்” என அறிவுறுத்தி உள்ளது.
மேலும், ” தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் 2 ஆவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதமாகும். பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு அன்றைய தினமே ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். அதைமீறி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததும் சட்டவிரோதமாகும். ஆளுநர் தனிச்சையாக செயல்பட முடியாது. ஆளுநரின் செயல்பாடுகள் நேர்மையானதாக இல்லை. உயர் அதிகாரத்தில் இருப்பவர்கள் அரசியல் சாசனத்தின் முக்கிய அம்சங்களை பின்பற்ற வேண்டும்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்படும் மசோதாக்கள் மீது 3 மாத காலத்திற்குள் ஆளுநர் கட்டாயம் முடிவு எடுக்க வேண்டும். சில பிரிவுகளில் ஒரு மாதத்திலும், சில பிரிவுகளில் மூன்று மாதத்திற்குள்ளும் ஆளுநர் முடிவு எடுத்தாக வேண்டும்” என பரபரப்பாக தீர்ப்பளித்துள்ளது.
அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த வெற்றி: ஸ்டாலின்
உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து இன்று சட்டமன்றப் பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ” இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயிர்க் கொள்கையான மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றை நிலைநாட்டிட தமிழ்நாடு போராடியது. தமிழ்நாடுபோராடும், தமிழ்நாடு வெல்லும்” என்றார்.

ஆளுநருக்கும் மத்திய அரசுக்கும் பின்னடைவு
ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் மத்திய அரசின் ஆதரவுடன் நடப்பவை என்பது திமுக-வினரின் குற்றச்சாட்டு. தமிழ்நாட்டில், ஆளும் திமுக அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசு, ஆளுநரை ஒரு கருவியாக பயன்படுத்தி வந்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. “மாநில அரசுகளுக்கு தடைகளை ஏற்படுத்துவது மக்களின் நலன்களை பாதிக்கும்,” என நீதிமன்றம் எச்சரித்தது, மத்திய அரசின் கூட்டாட்சி மீறல்களுக்கு எதிரான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் வாதிட்ட அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ராமணி, ஆளுநரின் நடவடிக்கைகள் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டவை என்றார். ஆனால், நீதிமன்றம் இதை ஏற்கவில்லை. “மத்திய அரசு, ஆளுநர்கள் மூலம் மாநிலங்களை கட்டுப்படுத்த முயல்கிறது. இந்தத் தீர்ப்பு அதற்கு முடிவு கட்டும்,” என சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பிற மாநிலங்களுக்கு முன்மாதிரி
இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டோடு நின்றுவிடவில்லை; பிற மாநிலங்களிலும் ஆளுநர்களின் அதிகார மீறலுக்கு எதிரான முன்மாதிரியாக அமைகிறது. கேரள அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் தாமதப்படுத்தியதும், பஞ்சாபில் சட்டமன்ற அமர்வுகளை அனுமதிக்க மறுத்ததும் இதற்கு எடுத்துக்காட்டுகள் எனச் சொல்லலாம். “தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள இந்த தீர்ப்பு இத்தகைய ஆளுநர்களுக்கு எதிராக மாநில அரசுகளுக்கு சட்ட ஆயுதத்தை அளிக்கிறது” என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.